தேவரியம்பாக்கம்
அமைவிடம்
ஸ்ரீநிவாச பெருமாள் கோவில், தேவரியம்பாக்கம் கிராமம்
தேவரியம்பாக்கம் ஊராட்சி, வாலாஜாபாத் வட்டம்,
காஞ்சிபுரம் மாவட்டம் 631605
இங்குள்ள பெருமாள் கோவிலில் புத்தர் சிலை உள்ளதாக அறிந்த வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் அஜய்குமார் தலைமையிலான குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
புத்தரின் சிலை தேவரியம்பாக்கத்தில் பஜனைக் கோவில் எனப்படும் பெருமாள் கோவிலில் ஓரம் கட்டி வைக்கப்பட்டிருந்த பழைய பொருட்களுடன் கிடத்தப்பட்டிருந்தது. பொங்கல் விழாவிற்கு, கோவிலை சுத்தம் செய்த போது, பளிங்கு கல்லாலான புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது.
சிலையமைப்பு
அழகிய வெண்மை நிற பளிங்குக் கல்லால் ஆன புத்தர் சிலை. அமர்ந்த நிலையில் தியானத்தில் உள்ள சிலை. ஓரடி உயரமுள்ள சிலை. காதுகள் இரண்டும் தோள்வரை நீண்டுள்ளன. மூக்கு சற்று சேதமடைந்த நிலையில் உள்ளது. சுருள் சுருளான தலைமுடி. இடப்புறத் தோள்பட்டை முதல் இடுப்பு வரை சீவர ஆடை உள்ளது. இச்சிலையின் தலையில் சுருள் முடி போன்ற அமைப்பும், பின்புற மேலாடை (சீவர ஆடை) நேர்த்தியாகத் தெரியும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. வலது கால், இடது தொடையின் மீதும், இடது கை, வலது கால் மீதும் வைத்த நிலையில் காணப்படுகிறது. மேலும், வலது கையின் விரல்கள் தரை நோக்கி உள்ளது (நிலத்தை தொடும் முத்திரை - புமிஸ் பரிசா முத்திரை).
900 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலை. காலம் கி.பி 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது என தொல்லியல் துறை உதவி தொல்லியல் ஆய்வாளர்கள் ரமேஷ், உதவி கல்வெட்டாய்வாளர்கள் நாகராஜன் மற்றும் பிரசன்னா ஆகியோரும் உறுதி செய்தனர்.
புத்தர் சிலை கிடைக்கப்பெற்ற தேவரியம்பாக்கம் பெருமாள் ஆலயம் 100 ஆண்டுகளுக்கு முன் ஓலைக் குடிசையாக இருந்ததாகவும், அதில் சீனிவாச பெருமாள் புகைப்படத்துடன் இச்சிலையை வைத்து வணங்கி வந்ததாகவும் முன்னோர்கள் சொல்லியதாக இவ்வாலயம் அருகே வசித்துவரும் இதே கிராமத்தைச் சேர்ந்தவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக