வியாழன், ஆகஸ்ட் 10, 2017

மத்த விலாசப் பிரகசனம் (The farce of drunken sports)

மத்த விலாசப் பிரகசனம்

(அ) 

   தான் தோன்றி ஈஸ்வரர் கோவில்

(அ) 

மகேந்திரவர்மன்


தான்தோன்றி ஈஸ்வரர் கோவில் அமைவிடம் : எண் 10, தான்தோன்றி ஈஸ்வரர் கோவில், ஏகாம்பரநாதர் கோவில் சன்னதி தெரு, காஞ்சிபுரம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் 631 501.

இக்கோவிலின் சுவரில் மகேந்திரவர்மனின் நாடக ஆடல் சிற்பங்கள் உள்ளது என்றறிந்து 26/11/2016 அன்று சென்று பார்த்தேன். இந்த சிற்பங்களை மத்த விலாசப்பிரகசன  நாடகத்தின் எந்த பகுதியை குறிப்பிடுகிறது என்பது சரியாக பொருத்தி பார்க்க முடியவில்லை. அக்கோவில் நிர்வாகி திரு சந்திரசேகர் இங்கு மட்டும் ஏன் மத்த விலாச நாடக சிற்பங்கள் அமைந்துள்ளது என்ற வினாவிற்கு அளித்த விளக்கம், இங்கு தான் காபாலிகர்கள் ஏராளமானவர்கள் இருந்தனர் என்றுரைத்தார்.

 மகேந்திரவர்மனின்  நாடகங்கள்    
மத்த விலாசப் பிரகசனம் என்ற நாடகத்தை (வடமொழியில்) எழுதியவர் மகேந்திரவர்மன் (571-630). கி.பி 620ல் வடமொழியில் இரு நாடகங்களை எழுதியிருக்கிறார் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
01. மத்த விலாசப் பிரகசனம் (Mattavilasa Prahasanam)
02. பாகவதஜ்ஜுகம் (Bhagavadajjukam )
ஆனால் இக்கருத்திலிருந்து முரண்படுகிறார் ஆராய்ச்சி பேரறிஞர் மயிலை சினி வேங்கடசாமி அவர்கள். மகேந்திரவர்மன் மத்த விலாசப்பிரகசனம் என்ற நாடகத்தை எழுதியவர் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளது. ஆனால் பாகவதஜ்ஜுக என்னும் நாடகத்தை எழுதியதற்கு ஆதாரம் ஏதுமில்லை. எனவே மகேந்திரவர்மன் பாகவதஜ்ஜுக  எழுதவில்லை என்று குறிப்பிடுகிறார். அந்த நாடகத்தின் ஆசிரியர் யார் என்றும் தெரியவில்லை என்று மேலும் குறிப்பிடுகிறார்.
மத்த விலாசப் பிரகசனம் என்ற நாடகத்தை எழுதியவர் மகேந்திரவர்மன் என்பதற்கான ஆதாரம்.
01. மகேந்திரவர்மன் பல சிறப்பு பெயர்களை கொண்டவன். அப்பெயர்களில் ஒன்று  மத்தவிலாசன் என்பது. 
  • மகேந்திரவர்மன் தமிழகத்தில் அரசனாக இருந்தபொழுது (600-630) இருந்த சிறப்பு பெயர்கள் 01. மகேந்திர விக்கிரவர்மன் 02. மகேந்திர போத்தரசன் 03. மகாப்பிடுகு 04.லளிதாங்குரன் 05.குணபரன் 06.மத்தவிலாசன் 07.அவணிபாஜனன் 08.சத்தியசாந்தன் 09.புருஷோத்தமன் 10.சத்தரு மல்லன் 11.சங்கீர்ண ஜாதி 12.சித்திர காரப்புலி 13.சேத்தகாரி 14.விசித்தர சித்தன் 15.அலுப்த காமன் 16.கலகப்பிரியன் 17.அபி முகன் 18.மகா மேகன் 19.நரேந்திரன் 20.பிணபிணக்கு
  • ஆந்திராவில் இளவரசனாக இருந்தபோது (கி பி 600 வரை) இருந்த தெலுங்கு சிறப்பு பெயர்கள் 01.சிவிபந்து 02.நில்விலோனையம்பு 03.வேந்துலவித்து 04.வசரம்பு 05.சிலம்பு 06.மலாயு 07.கடுந்தரம்பு 08.நயம்பு
02.மாமண்டூர் குகையில் மகேந்திர பல்லவனின் கல்வெட்டில் இந்நூலை அவன் படைத்த குறிப்பு உள்ளது. அதைப்போன்று திருச்சிராப்பள்ளி மற்றும் பல்லாவரம் குகைக்கோயில் கல்வெட்டில் குறிப்பு உள்ளது.   
மாமண்டூர் குகையில் மகேந்திர பல்லவனின் கல்வெட்டில் ஆறாவது வரியில் மத்தவிலாச என்ற சொல் வருகிறது அந்த சொல்லுக்கு முன் உள்ள பாகவதஜ்ஜுகம் என்ற சொல்லை மாகவதஜ்ஜுகம் (Magavadajjukam) என்று தவறாக குறிப்பிட்டுவிட்டனர் என்றுரைக்கிறார் T.R. சிந்தாமணி (அடையாறு நூலகர்) (குறிப்பு தென்னிந்திய கல்வெட்டுகள் - தொகுதி நான்கு 1888  ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது ARE Report)  (The Journal of Oriental Research - A Note on the date of the Tattvasamasa -Madras - 1928 - Page no 145) 
மத்த விலாசப்பிரகசனம்  நாடக  பெயரின் பொருள் 
ஆராய்ச்சி பேரறிஞர் மயிலை சினி வேங்கடசாமி அவர்கள் அளிக்கும் விளக்கம் மத்த விலாசப்பிரகசனம்  என்றால் பைத்தியக்காரனின் நகைசுவை நாடகம். மத்த விலாச என்றால் பைத்தியக்காரன் பிரகசனம் என்றால் நகைசுவை.

மத்த விலாசப்பிரகசனம்  நாடக வெளியிடு
இந்நாடகம் தமிழ்நாட்டில் காஞ்சிவரத்தில் மகேந்திரவர்மனால் எழுதப்பட்டது. ஆனால் இந்நூல் கேரளா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. 1917 ஆம் ஆண்டு திருவனந்தபுரம் வடமொழி வெளியிட்டில் முதன்முதல் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. கேரளா நாட்டில் இந்நூல் கிடைத்ததற்கான காரணத்தையும் விளக்குகிறார் மயிலை சீனி வேங்கடசாமி. பல்லவ நாட்டை கேரள மன்னன் ஆண்டு இருக்கிறான். நாடகம் மற்றும் கூத்தாடும் கலையை தம் தொழிலாக செய்யும் கேரளா நாட்டை சேர்ந்த சாக்கியர் என்பவர்கள் மத்த விலாச நாடகத்தை தம் கலைக்காக எடுத்து சென்றுவிட்டனர் என்றுரைக்கிறார்.
நாடகத்தில் வரும் நபரும் அவர்களின் சமயமும் 
01. சத்தியசோமன் 02. தேவசோமை இருவரும் கணவன் மனைவி. இந்நாடகத்தின் தலைவனும் தலைவியும் ஆவர். இருவரும் சைவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் (காபாலிக பிரிவு).
கபாலிகர் என்பவர் பைரவரை வழிபடுபவர். மண்டை ஓடுகளை மாலையாக அணிந்திருப்பவர்கள். மண்டை ஓட்டில் மதுவை அருந்துபவர்கள். மாட்டுக்கொம்பு ஒன்றையும் ஏந்தி திரிபவர்கள். எல்லா உயிர்களையும் பைரவருக்கு பாலியிடுபவர்கள். இறைச்சியையும் மதுவையும் எடுத்துக்கொள்பர்கள், உடம்பெங்கும் சாம்பல் பூசி கொள்பவர்கள். கள்ளும் காமமும், ஆடலும் பாடலும் வாழ்க்கையாக கொண்டவர்கள். பார்ப்பதற்கு அருவருப்பாக இருப்பார்கள். பிராமணனுக்கு பூணுல் எத்துணை சிறந்ததோ அத்துணைச் சிறந்தது கபாலிகானுக்கு கபால பாத்திரம். (வரலாற்று அறிஞர் இராசமாணிக்கம்)
03. நாகசேனன் (Nagasena) பௌத்த சமயத்தை சார்ந்த இளம் பிக்கு.
பௌத்தர்: பகவன் புத்தரின் போதனைகள் அனைத்தும் மூன்று பிரிவுகளாக (திரி பிடகமாக) பிரிக்கப்பட்டுள்ளது. மூன்று பிடகத்தில் வினாய பீடகம் பிக்குகளுக்குரியது. பிக்குகளுக்கு நடத்தை விதி கட்டாயம். நாகசேனன் இல்லறம் துறந்து துறவறம் மேற்கொண்டவர். பகவன் புத்தரை வழிகாட்டியாக (தாதகர்) ஏற்றுக்கொண்டவர். சீவர ஆடை அணிந்து தானம் ஏற்கும் பாத்திரத்துடன் துறவு வாழ்வை மேற்கொண்டவர். தலைமுடியை மழித்து இருப்பவர். தலைமுடியை மழிக்க சவரக்கத்தி வைத்திருப்பவர். சீலத்தை (அ) ஒழுக்கத்தை கடைபிடிப்பவர். சீவர ஆடையையும் பாத்திரத்தையும்  தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
04. பாசுபதன் (Pashupathas) சைவ சமயத்தின் இன்னொரு பிரிவை சேர்ந்தவர்.
பாசுபதர்: என்பவர் திருநீறு பூசி லிங்கத்தை வழிபாடு செய்பவர்கள். சிலர் மொட்டை அடித்தும் சிலர் குடுமி வைத்தும் இருப்பர், உயிர்களை பாலியிட்டு அதனையே உணவாக கொள்பவர்கள், (வரலாற்று அறிஞர் இராசமாணிக்கம்)
05. பைத்தியக்காரன் - சைவரா வைணவரா, பௌத்தரா சமணரா என்பது இங்கு அவசியமற்றது. ஏனெனில் பைத்தியக்காரன் மனநிலைசரியில்லாதவன்.

A1. சமணர்: இந்த நாடகத்தில் நாடக பாத்திரமாக வராமல் ஆனால் நாடகத்தில் பேசப்படும் ஒரு சமயமாக சமணம் வருகிறது. சமணரின் தத்துவங்களையும் அவர்களின் செயல்களையும் இழித்து கூறுவதால் இல்லறம் துறந்தவர்கள் (அ) தத்துவ போதகர்களை பார்ப்போம்.
தலை முடியை உபகரணம் ஏதுமின்றி தம் கையால் பிடுங்கி எடுப்பவர்கள், பற்றறுக்க அவர்கள் மேற்கொள்ளும் செயல்கள் 01. ஆடையும் மிகை என்று ஆடையை அணியாதவர்கள் 02. உடலில் உள்ள அழுக்கு மற்றும் வியர்வையை நீக்கினால் உடல் மீது பற்று ஏற்படும் என்றும் நீரினால் குளிப்பதானால் நீரில் உள்ள நுண்ணுயிர்கள் அழியும் என்றும் குளிக்காமல் இருப்பவர்கள் 03. பல் விலக்குவதால் பல் மீது பற்று ஏற்படும் மேலும் பல்லில் உள்ள நுண்ணுயிர்கள் அழியும் என்று பல் விலக்காமல் இருப்பவர்கள் 04.உணவு ஏற்க பாத்திரம் வைத்திருந்தால் பற்று ஏற்படும் என்று உணவை தம் கைகளில் பெற்று நின்று உணவை உண்பவர்கள். (தமிழ் ஆராய்ச்சி பேரறிஞர் மயிலை சினி வேங்கடசாமி - சமணமும் தமிழும்) சுருங்க சொல்லின் உயிர்களை துன்புறுத்தாதவர்கள், ஊன் உணவை ஏற்காதவர்கள், ஆடையணியாதவர்கள், பற்றறுப்பவர்கள் 
A2. கலாமுகர்: இந்த நாடகத்தில் வராத சைவ சமயத்தை சேர்ந்த இன்னொரு பிரிவு கலாமுகர். இவர்கள் சிறந்த படிப்பாளிகள், சமய நூல்களை கற்றறிந்தவர், இறைவனை பற்றி பாடி ஆடி மகிழ்வர். மந்திரம் சொல்பவர்கள், கடும் நோன்பிருப்பவர்கள், மண்டை ஓட்டில் உணவு எடுத்துக்கொள்பவர்கள். உடல் முழுவதும் பிண சாம்பலை பூசிக்கொள்பவர்கள், அச்சாம்பலை தின்பார்கள், மதுபாத்திரம் வைத்து இருப்பார்கள், தட்டேந்தி திரிப்பார்கள். (வரலாற்று அறிஞர் இராசமாணிக்கம்)

நாடக சுருக்கம்
காபாலிகன் சத்தியசோமன் தன் மனைவி தேவசோமையுடன் குடித்து மயங்கி பேசிக்கொண்டு வருகின்றனர். இருவரும் மோட்சம் (அ) விடுதலைக்கான வழி பற்றி பேசும் போது அருகதர் (ஜைனர்) அவர்களின் பெயரை தவறி சொல்லிவிடுகின்றனர். இதனால்  பெரிய பாவம் ஏற்பட்டு விட்டது என கருதுகின்றனர். அந்த பாவத்தை போக்கிக்கொள்ள தங்கள் நாக்கை மதுவினால் கழுவ நினைக்கின்றனர். அதனால் இலவசமாகப் மதுபானம் கிடைக்கும் கள்ளுக்கடையை தேடிச்சென்று குடித்து விட்டு செல்கின்றனர்.  

பிறகு பிச்சை பெறப்போகும் போது கபால பாத்திரம் (Skull-bowl) அவர்களிடம் இல்லாதது உணர்ந்து தங்களிடம் இருக்கும் மாட்டுக் கொம்பில் பிச்சையை பெற்றுக்கொள்கிறார்கள். கபால பாத்திரம் இல்லையென்றால் கபாலிகனாக முடியாது என்பதால் இருவரும் கபால பாத்திரத்தை தேடி கள்ளுக்கடைக்கு செல்கின்றனர். கள்ளுக்கடையில் அவர்களின் கபால பாத்திரம் கிடைக்காததால் அந்தக் கபாலபாத்திரத்தை யார் எடுத்திருப்பார்கள் என்று சிந்திக்கின்றனர். அந்தக் கபாலபாத்திரத்தில் வறுத்த இறைச்சியை வைத்திருந்ததால் அதை ஒரு நாயோ அல்லது ஒரு பிக்குவோ தான் எடுத்திருக்க வேண்டும் என்று முடிவு செய்கின்றனர். 

இருவரும் நடந்து சென்று கொண்டிருக்கும் போது நாகசேனன் என்ற ஒரு இளம் பௌத்த பிக்கு இராசவிகாரைக்கு செல்ல நடந்து வந்துகொண்டு இருக்கிறார். தானம் ஏற்கும் பாத்திரத்தை சீவர ஆடையால் மறைத்து எடுத்து கொண்டு வருதல் பிக்குகளின் மரபு. சீவர ஆடையால் மறைத்து கொண்டு வருவதால், கபால பாத்திரத்தை பிக்குதான் திருடியிருக்கவேண்டும் என்று முடிவு செய்கின்றனர். பிக்குவை வழி மறிக்கின்றனர்.

பிக்குவின் சீவரத்தை விலக்கி அவரின் தானம் ஏற்கும் பாத்திரத்தை காண்பிக்க வலியுறுத்துகிறார்கள். தான் வைத்திருக்கும் உணவு ஏற்கும் பாத்திரம் தம்முடையது என்று பிக்கு பதிலுரைத்தார். தம் கபால பாத்திரத்தை திருடி விட்டு பொய் சொல்கிறாய் என்று வாதம் செய்கின்றனர். பிக்கு மீண்டும் பதிலுரைக்கிறார் சீலத்தை பின்பற்றுவார்கள் நாங்கள், திருடுவதுமில்லை பொய் உரைப்பதுமில்லை என்று. பிக்கு உரைப்பதை ஏற்க மறுத்து பிக்கு வைத்திருக்கும் தானம் ஏற்கும் பாத்திரத்தை சத்தியசோமன் பிடுங்க முயற்சிக்கும் போது பிக்கு அவனை காலால் உதைக்கிறார். தேவசோமை பிக்குவின் தலையை பிடிக்க முயற்சித்து தவறி விழுகிறாள். இதனால் சத்தியசோமன் மற்றும் தேவசோமை இருவரும் உதவி கேட்டு கூச்சலிடுகின்றார்.

அவர்களின் பிரச்சனையை தீர்க்க அங்கு ஒரு பாசுபதன் வருகிறான். பாசுபதனிடம் பிக்கு நடந்தவற்றை விளக்குகிறார். மேலும் தன்னிடமிருக்கும் பாத்திரத்தை காண்பிக்கிறார். பிக்கு வைத்திருக்கும் பாத்திரத்தின் நிறம் செந்நிறமாகயிருக்கிறது. ஆனால் கபாலிகானின் பாத்திரத்தின் நிறம் வெண்ணிறம். பிக்கு அணிந்திருக்கும் அழுக்கு துணியால் கபாலிகனின் வெண்ணிற பாத்திரம் செந்நிறமாக மாறிவிட்டது என்று மீண்டும் வாதம் செய்கிறனர்.

பிக்கு மீண்டும் பதிலுரைக்கிறார் பாத்திரத்தின் நிறத்தை மாற்றினாலும் அதன் உருவத்தையும் அளவையும் மாற்ற முடியாது. எனவே இப்பாத்திரம் கபாலிகானுடையது இல்லை என்று பிக்கு பதிலுரைத்தார். பாத்திரத்தை மாற்றும் மாயக்காரன் பிக்கு என கபாலிகனின் வாதம் மீண்டும் நீண்டது.

எனவே பாசுபதன் நியாய மன்றத்திற்கு (Court) சென்று இவ்வழக்கை தீர்த்துக்கொள்ளலாம் என்று யோசனை அளித்தான். நீதி மன்றம் செல்வதாக இருந்தால் இந்த பாத்திரமே வேண்டாம் என்றனர். ஏனெனில்  நியாய மன்றத்திற்கு செல்ல தம்மிடம் பணம் இல்லை. காஞ்சிவரத்தில் இருக்கிற பல விகாரைகளில் இருந்து அதிக தானங்கள் பிக்குவிற்கு கிடைக்கிறது. தானங்களில் இருந்து கிடைக்கிற பணத்தை பிக்கு இராஜவிகாரையில் குவித்து வைத்திருக்கின்றனர். நீதிமன்றத்தில் இருக்கிறவர்களிடம் அந்தப் பணத்தை அளித்து நீதியரசர்களின் வாயை அடக்கி விடுவார் என்று வாதம் செய்தனர். பாசுபதன் நியாய மன்றத்தில் இருக்கிறவர்கள் நேர்மையானவர்கள் என்று விளக்கிய பிறகு அனைவரும் நீதி மன்றத்திற்கு சென்று கொண்டுடிருக்கின்றனர்.

அப்பொழுது ஒரு மனநிலை சரியில்லாதவன் அருகில் வந்து காபாலிகனை அணுகி, மண்டையோட்டை அவன் முன்பு வைத்து அவனை வலம் வந்து காலில் விழுந்து கும்பிடுகிறான். அப்பொழுது சத்தியசோமனும் தேவசோமையும் அந்த மண்டை ஓடு கிடைக்க பெற்று மகிழ்கின்றனர்.

மாமல்லபுரத்தில் உள்ள மகேந்திரவர்ம பல்லவன் 

மனதில் தோன்றும் ஐயங்கள்  

I. மகேந்திரவர்மப் பல்லவன் பிறப்பினால் வைணவன் என்பதனை மறைக்கும் மாரணம் என்ன ? 
மகேந்திரவர்மன் சமண சமயத்தை சார்ந்தவர். பின்னர் சைவத்திற்கு மாறினார் என்றே கிட்டதட்ட அனைத்து வரலாற்று ஆசிரியர்களும் கூறுகின்றனர். ஆராய்ச்சி பேரறிஞர் மயிலை சினி வேங்கடசாமி அவர்களும் இதில் விதிவிலக்கல்ல.
மகேந்திரவர்மன் சமணனாக இருந்ததற்கான அளிக்கப்படுகின்ற ஆதாரங்கள்
01. புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், சித்தன்னவாசல் கிராமத்தில் சித்தன்னவாசல் குகைக்கோயில் கட்டினான். தீர்த்தங்கரின் 3 சிலைகள் உருவாக்கப்பட்டது. அழகிய வண்ண ஓவியங்கள் வரையப்பட்டது.   
02. மகேந்திரவர்மன் திருநாவுகரசரை சைவத்தை தவிர்த்து சமணம் ஏற்க முயற்சி செய்தார். அதில் தோல்வியடைந்த  மகேந்திரவர்மன் சைவத்தை ஏற்றார். 
முனைவர் க.நெடுஞ்செழியன் : சித்தண்ண வாயில் சமணர்களுடையது இல்லை அது ஆசீவக மதத்தினருக்கு உரியது என்றுரைக்கிறார். அவரின் விளக்கங்களை விரிவாக அறிய சித்தண்ண வாயில் நூல் பாலம் பதிப்பகம் பேருதவியாக இருக்கும். 
01.01. காரணப்பெயர். சித்தண்ண வாயில் மலையின்  பின்புறத்தில் 17 கற்படுக்கைகள் உள்ளது. தலைமை துறவி கற்படுக்கையில் கல்வெட்டு  பொறிக்கப்பட்டுள்ளது.  இந்த கல்வெட்டின் மூலம் அறியப்படும் செய்தி குமிழூரை சேர்ந்த தலைமை பிக்குவிற்கு சிறு போசில் என்ற ஊரை சேர்ந்த மாணவரால் (இளைய துறவி) அமைக்கப்பட்ட கற்படுக்கை. சிறு போசில்  தான்  சித்தண்ண வாயில் என்றழைக்கப்படுகிறது. சித்தர்களை அண்ணல் என்றும் அறிவர் என்றும் அழைப்பது தமிழ் மரபு.  சித்தர் அண்ணல் வாயில் என்பதே அதன் பொருள்.  அண்ணலம் பெருந்த வத்து ஆசீவர்கள் - சிலப்பதிகாரம்   
01.02. கல்வெட்டு : இக்குடைவரை கோவிலின் தென்புறத்தில் உள்ள பாறையில் பொறிக்கப்பட்டுள்ள பாண்டிய பேரரசன் வரகுணன் சிரிவல்ல பாண்டியன் கல்வெட்டு அமணன் காணி என்றுரைக்கிறது அமணன் என்பது ஆசீவக சமயத்தை குறிப்பது. சித்தண்ண வாயில் குடைவரை என்பது பாண்டியர்களின் கலை கருவூலம்.  
01.03. மூன்று சிலைகளும் ஓவியங்களும் : இம்மூவரும் ஆசீவக மரபுபடி கழிவெண் பிறப்பினை கடந்தவர்கள்.  01. மற்கலி கோசலர் 02.பூரணர் 03. கணிநந்தாசிரியன் (பாண்டிய பேரரசன் வரகுணன் தந்தையின் நண்பர்  கணிநந்தாசிரியன்). சமணர்களுக்கு முக்குடை இருக்கும். ஆனால் இங்கே  இடையில் உள்ளவர் முக்குடையும், வலதுபுறம் உள்ளவர் இரு குடையும் இடது புறமுள்ளவர் கணிநந்தாசிரியன் ஒரு குடை கொண்டுள்ளார். தாமரை பொய்கையில் வரையப்பட்டுள்ள மூவரும் கருவறையில் உள்ள மூவரும் ஒருவரே (வேறுபட்டவர்கள் இல்லை)
சமணர்கள் ஆடையற்றவர்கள். அமணர்கள் அரை கோமணம் அணித்தவர்கள். சமணர்கள் தலை முடியை மழித்தவர்கள். அமணர்கள் அழகிய தலைமுடியை கொண்டவர்கள் ஓவியத்தில் இதனை எளிதாக கண்டறியலாம். கழுத்தினில் கயிறு உள்ளது எனவே இம்மூன்று சிலைகளும் ஓவியங்களும் ஆசீவகத்தை குறிப்பது
01.04. காலம் : சித்தண்ண வாயில் குகை கோவிலும் ஓவியத்தின் காலம் கி.மு 450. அதாவது மகேந்திர வர்மா பல்லவனுக்கு முற்பட்டது. இன்னும் பல ஆதாரங்களை அளித்துள்ளார் முனைவர்  க. நெடுஞ்செழியன். 
02. மகேந்திரவர்மன் திருநாவுகரசரை சைவத்தை தவிர்த்து சமணம் ஏற்க முயற்சி செய்தார். அதில் தோல்வியடைந்த  மகேந்திரவர்மன் சைவத்தை ஏற்றார். 
திருநாவுகரசர்  சைவர். அவர் இல்லறம் துறந்து சிவன் கோவில் கோவிலாக சென்று பணிசெய்தார். சிவனின் பார்வை அவர் மீது படவில்லை, அல்லது தாம் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்பதனை உணர்ந்து சைவத்தை விட்டு சமணம் ஏற்றார். சமண பள்ளியின் தலைமை பதவியையும் பெற்றார். 
சூலை நோயினால் துன்புற்றபொழுது சமண சமயத்தால் அந்நோயினை போக்க முடியவில்லை. எனவே சமண சமயத்தை துறந்து சைவம் ஏற்றார். சைவம் ஏற்ற உடன் நோயும் தீர்ந்தது. நோய்களை போக்கும் மதம் என்று உலகில் ஒன்று இருந்தால், உலகில் அந்த மதம் மட்டுமே நிலைத்திருக்கும். 
பகவன் புத்தர் நோயுற்று பரிநிர்வாணம் எய்தினார். வண. போதி தருமனுக்கு நெஞ்சு கலந்த உணவு கொடுக்கப்பட்டது. நோயை போக்கி கொள்ள முடியவில்லை என்பதனால் மதம் மாறினார் என்பது ஏற்புடையதாக இல்லை. சைவத்திலிருப்பவர்கள் அல்லது சிவனை வழிபடுப்பார்கள் நோயுறுவதில்லையா? நோயை போக்குகிறோம் இங்கே வாருங்கள் என்று சமணர்கள் அழைத்தனரா? திருநாவுகரசர் சமணராக துறவியாக மாறியது மனமுவந்தா அல்லது வற்புறுத்தலா?  சமண துறவி கோலம் பற்றி ஏதும் அறியாது சமண துறவு கொண்டாரா? சமண துறவியாக இருந்த போது பெண்களை கண்டு நாணத்தக்க கோலம் கொண்டார், தெருக்களில் இவர் வருவதைக்கண்டு பெண்கள் தம் வீட்டிற்கு விரைந்து வீட்டை பூட்டிக்கொள்வார் என்றால் சமண சமயத்தில் பெரும்பகுதியை கழிக்க கரணம் என்ன? 
சமணர்கள் மகேந்திரவர்மனிடம் சென்று முறையிடுகின்றனர். மகேந்திரவர்மன் திருநாவுகரசரை சைவத்தை தவிர்த்து சமணம் ஏற்ககட்டளையிடுகிறான். அதனை மறுத்ததால் மகேந்திரவர்மன் திருநாவுகரசரை கொல்ல பல முயற்சிகள் செய்கிறான்.  
01. திருநாவுகரசரை நன்றாக எரிந்து கொண்டிருந்த நீற்றறையில் அடைத்து கதவை முடிவிடுகின்றனர். 02. நஞ்சு கலந்த பால் சோற்றை திருநாவுகரசருக்கு கொடுக்கின்றனர். 03. யானையை கட்டவிழ்த்து திருநாவுகரசரை கொள்ள முயற்சிக்கின்றனர். 04. திருநாவுகரசரை படகில் ஏற்றிச்சென்று கல்லில் கட்டி கடலில் போட்டுவிடுகின்றனர். இத்தனை கொடுஞ் செயல்களும் அவரை பாதிக்காததற்கு கரணம் அவர் சிவனை பாடியதே என்பது புராணத்திற்கு பொருந்தும் வரலாற்றுக்கு பொருந்தாது. இது உண்மை என்றால் கீழே குறிப்பிடுவது   உண்மையல்ல. 
மகேந்திரவர்மன் போரை பற்றி குறிப்பிடும் போது இரண்டாம் புலிகேசி உயிருடன் சாளுக்கிய நாட்டை அடையாந்ததே  பெரியது என்றும் கங்கனையும் சாளுக்கியனையும் துரத்தி அடித்தான் என்றும் குறிப்பிடப்படுகிறது. மகேந்திரவர்மன் சிறப்பு பெயர்களானாக பாகப்பிடுகு (பகைவர் மீது இடிபோல என பாய்பவன்) கலகப்பிரியன் (போர் விரும்பி) என்று குறிப்பிடப்படுவது உண்மையல்ல.
மகேந்திரவர்மப் பல்லவன் சமணத்தை விட்டு சைவம் மாறினார் என்பதற்கு வரலாற்று அறிஞர் இராசமாணிக்கம் அளிக்கும் விளக்கங்கள்.
01. மகேந்திர வர்மன் முதலில் சமணனாக இருந்து பின் சைவனாக மாறியதாக பெரியபுராணம் கூறுகிறது 02. அப்பரால் (திருநாவுகரசர்) சைவ சமயத்தைப் பின்பற்றினார் 03. திருப்பதிபுலியூரில் இருந்த சமண பள்ளிகளை இடித்து அக்கற்களை கொண்டு திருவதிகையில் ஒரு சிவன் கோவிலை கட்டினார். அக்கோவிலுக்கு குணபரம் ஈச்சாரம் என்று தன் பெயரை சூட்டினார். 04. திருச்சிராப்பள்ளி மலைக்கோவில் கல்வெட்டு மகேந்திரவர்மன் சமணத்திலிருந்து சைவத்திற்கு வந்தபொழுது இலிங்க வழிபாடு செய்தான் என்று கூறுகிறது. 05. வல்லம், தளவனூர், சீயமங்கலம், பல்லாவரம், திருச்சிராப்பள்ளி முதலிய இடங்களில் சிவன் கோவிலை அமைத்துள்ளார். பல சிவா லிங்கங்களை உருவாக்கியுள்ளார். 06. சமணரை பற்றியும் ஓரளவு இழித்து மத்த விலாசப் பிரகசனத்தில் (கி .பி 620) கூறுவதால் மகேந்திர வர்மன் சைவம் மாறிய பிறகே எழுதப்பட்ட நூல் மத்த விலாசப் பிரகசனம்.
மகேந்திரவர்மப் பல்லவன் பிறப்பினால் சமணரா?   சமணத்தை விட்டு சைவம் மாறினார் என்பது இருக்கட்டும் அவர் பிறப்பினால் சமணரா? மகேந்திரவர்மன் தந்தை சிம்ம விஷ்ணு வைணவத்தை சேர்ந்தவர். மகேந்திரவர்மன் வைணவத்தில் இருந்து சமணத்திற்கு மாறினார் என்பதை மறைக்கும் காரணம் என்ன? வைணவன் என்றுரைத்தால் 35 ஆண்டுகாலம் வைணவனாக இருந்தவன் சமணம் ஏற்றதற்கான காரணத்தை விளக்கவேண்டிவரும் என்பதனால் மறைக்கின்றனரா? 35 ஆண்டுகாலம் வைணவனாக இருந்த மகேந்திரவர்மப் பல்லவன் வைணவத்தை பற்றி மத்த விலாச பிரகாசனம் என்னும் நாடகத்தில் ஏன் ஏதும் கூறவில்லை? 20 ஆண்டுகள் சமணனாக ஆட்சி செய்த காலத்தை பற்றி ஏதும் குறிப்பிடாமல் சைவனாக 10 ஆண்டுகள் ஆட்சி காலத்தை பற்றிய தகவல்கள் மட்டுமே அதிகம் குறிப்பிடப்பட்டுகிறது ஏன்? 
மகேந்திர வர்மா பல்லவன் சமணத்திற்கு செய்தது ஒன்றுமில்லை. எனவே அவர் சமணர் இல்லை. வைணவத்தில் இருந்து சைவம் மாறியவர். சைவத்திற்கு புகழ் வேண்டி புனையப்பட்டதாவே இருக்கலாம். 10 ஆண்டுகள் ஆட்சி காலத்தில் சைவத்திற்கும் வைணவத்திற்கும் செய்தது 
சிவன் கோவில் : 01. திருச்சிராபள்ளி குகைக்கோயில்- பல்லாபுரம் (சமணத்திலிருந்து சைவத்திற்கு வந்தபொழுது இலிங்க வழிபாடு செய்தான்) கல்வெட்டு 1890 02. வல்லத்துக் குகைக்கோயில் - திருக்கழுக்குன்றம் - வல்லம் கிராமம் கல்வெட்டு 1892 03. தளவனூர் குகைக்கோயில் திண்டிவனம் வட்டம் - தளவானூர் கிராமம் கல்வெட்டு 1905 04. மேலைச்சேரி குகைக்கோயில் - செஞ்சி வட்டம், மேலைச்சேரி 05. சியாமங்கலம் குகைக்கோயில் - வந்தவாசி வட்டம் -சியமங்கலம் கிராமம்  கல்வெட்டு  1900 06.  பல்லாவரம் குகைக்கோயில்- சென்னை 07. கபோதேசுவரன் கோவில் ஆந்திர மாநிலத்தில் குண்டூர் மாவட்டத்தில் சேர்ஜன விஷ்ணு (அ) திருமால் கோவில் 07. மகேந்திரவாடி குகை கோவில் -வாலாஜாபேட்டை வட்டம் -  மகேந்திரவாடி கிராமம் கல்வெட்டு  1896
சிவா மற்றும் விஷ்ணு கோவில் : 01. மண்டகப்பட்டு குகைக்கோயில் - விழுப்புரம் வட்டம் - தளவனூர் -மும்முர்த்தி கோவில் 02. மாமண்டூர் குகைக்கோயில்- காஞ்சிவரம் மாவட்டம் சிவன் மற்றும் திருமால் கோவில்
மகேந்திரவர்மன் தந்தை சிம்ம விஷ்ணு வைணவத்தை சேர்ந்தவர் என்று வரலாற்று அறிஞர் இராசமாணிக்கம்  அளிக்கும் விளக்கங்கள்.
01. சிம்ம விஷ்ணு என்னும் பெயரே அவரை வைணவன் என்றுரைக்கிறது. 02. மகாபலிபுரத்தில் உள்ள ஆதிவராக கோவிலில் சிம்ம விஷ்ணு  கட்டியது என்று பலர் கூறுகின்றனர். இங்கு  சிம்ம விஷ்ணுவின் சிலை உள்ளது. 03. நந்திவர்மன் II கல்வெட்டு சிம்மவிஷ்ணு விஷ்ணு பக்தன் என்றுரைக்கிறது.  
II. மத்த விலாசப் பிரகசன நாடகத்திலிருந்து வரலாற்று அறிஞர்கள் அளிக்கும் விளக்கங்கள் உள்ள சமநிலையற்று   இருக்கிறது.

பௌத்தத்தை பற்றி  வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுவது : 01. பிக்குகள் ஒழுக்கமின்றி இருந்தனர், விகாரைக்குச் சொந்தமான செல்வத்தை தனது சுய நலனுக்குச் செலவிட்டுள்ளனர் 02. நீதிமன்றங்களிலும் ஊழல் புரையோடியிருந்தது 03. பிறமொழி, பிற சமய ஆதிக்கம் இருந்தது
II.01. பிக்குகள் ஒழுக்கமின்றி இருந்தனர் இந்த நாடகத்தில் எவ்வாறு காபாலிகர், பாசுபதர் ஒழுக்கத்துடன் இருந்தனர் என்று விளக்கம் அளித்து விட்டு பௌத்தர்கள் எவ்வாறு ஒழுக்கமின்றி இருந்தனர் என்று   குறிப்பிட்டு இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். நாகசேனன் என்ற பிக்குவை இரண்டு விதமாக காட்டப்படுகிறது. தம் செயலினால் வெளிப்படுத்துவது ஒன்றாகவும் மனதினில் நினைப்பது ஒன்றாகவும். நாடக ஆசிரியரின் காழ்ப்புணர்வை நாகசேனன் மனதினில் நினைப்பதாக காட்டி அகமகிழ்ந்து இருக்கிறார். பகவன் புத்தரை குடிகாரன் அருவருக்கும் சொல்லால் கூறுவது பௌத்தத்தின் மீது மகேந்திரவர்மனுக்கு இருந்த காழ்ப்புணர்வை உறுதிசெய்கிறது. 
வரலாற்று அறிஞர்கள் மண்டை ஓடுகளை மாலையாக அணிந்திருப்பது, மது அருந்துவது, உயிர்களை  பாலியிடுவது, அதனையே உணவாக கொள்பவது, கள்ளும் காமமும் வாழ்க்கையாக கொண்டது இவைகள் எல்லாம் ஒழுக்க செயல்கள் என்று கருதுகின்றனரா?   
விகாரைக்குச் சொந்தமான செல்வத்தை தனது சுய நலனுக்குச் செலவிட்டுள்ளனர். உலகில் எந்த ஒரு மதமும் அதன் போதகருக்கு பகவன் புத்தரை போன்று கட்டுப்பாடுகளை விதித்தது இல்லை. புத்த விகாரைகளையும், புத்தபிக்குகளையும் மகேந்திரவர்மப் பல்லவனால் தம் கட்டுப்பட்டிருக்கு  கொண்டுவர முடியவில்லை, வைதிகத்திற்கு எதிராக இருக்கும் பௌத்தத்தை அழித்தொழிக்க முடியவில்லை என்பதனால் சொல்லப்பட்ட குற்றச்சாட்டே இது. காடுகளை அழித்து புதிய விளை நிலங்களை உருவாக்கி கொடுத்தது சங்கம். மிகப் பெருமளவில் நிலங்களை நிர்வகித்தது. பௌத்தம் தனியுடமையை அழித்தது என்பதற்கு சான்று களப்பிர்கள் மக்கள் பயன்பாட்டுக்கு அளித்த நிலங்களை எல்லாம் பொது நீக்கியது  பிராமணர்களுக்கு அளிக்கப்பட்டது. ஒரு ஊரையே இரு பிராமணர்களுக்கு தானமாக அளிக்கப்பட வரலாறு இருக்கிறது. இவர்கள் பிக்குகள் விகாரைக்குச் சொந்தமான செல்வத்தை  சுய  நலனுக்குச் செலவிட்டுள்ளனர் என்றுரைப்பது விந்தையாக உள்ளது.  
02. பௌத்த சமண சமயங்கள் செல்வாக்குப் பெற்றிருந்த பல்லவ நாட்டில், நீதிமன்றங்களிலும் ஊழல் புரையோடியிருந்தது.  
நீதி அரசர்களுக்கு பணம் அளித்து அவர்களின் வாயை பிக்கு அடைத்து விடலாம் என்று கபாலிகன் கூறியதற்கு பசுபதான் நீதி அரசர்கள் நேர்மையானவர்கள் என்று உரைக்கிறான். வரலாற்று அறிஞர்கள் ஒரே சமயத்தை சார்ந்த இருவர் வெவ்வேறு கருத்து கொண்டிருந்தாலும் குடிகாரனின் சொல் மட்டுமே உண்மை என்று எவ்வாறு கண்டறிந்தனர்? 
03 பிறமொழி, பிற சமய ஆதிக்கம் 
பௌத்தமும் சமணமும் தமிழ் நாட்டில் தோன்றியவை இல்லை எனவே இவ்விரண்டும் பிற மொழி, பிற சமயம்,  பிற சமய ஆதிக்கம்.
காபலிகம், பாசுபதம், காலாமுகம் இம்மூன்றின் பிறப்பிடம் தமிழ் நாட?  அது தமிழ் பண்பாடா? சைவம் மற்றும் வைணவத்தின் மொழி என்ன தமிழா? வேதங்களை ஆகமங்களை அடிப்படையாக கொண்ட சைவம் மற்றும் வைணவம். வேதங்களின் மொழி என்ன தமிழா? வேதங்கள் உரைப்பது தமிழ் பண்பாடா? கடவுளின் மொழி என்றழைக்கப்படும் வடமொழி பிறந்த இடம்  தமிழ் நாட? வடமொழி இயற்கையான மொழியா? தமிழ் மொழியை நீச மொழி என்றுரைத்தவர்கள் யார் சமண மற்றும்  பௌத்த சமயத்தவரா?  
தமிழை உலகறிய செய்தது சைவமா பௌத்தமா? இன்று நாம் எழுதும் தமிழ் எழுத்தின் மூலம் களப்பிரர் உருவாக்கிய வரிவடிவம். களப்பிரர் சைவரா பௌத்தரா? தமிழ் பண்பாடு என்பது வைதிக பண்பாடா?