திங்கள், ஜூலை 31, 2017

பகவன் புத்தர் எவற்றை போதித்தார்


அபி (Ambedkar and Buddha Intellectuals) இரண்டவது ஒரு தலைப்பு கொடுத்தது "பகவன் புத்தர் எவற்றை போதித்தார்" பாபா சாகிப் அவர்களின் புத்தரும் அவர் தம்மமும் என்ற நூலில் பகுதி (நூல்) 3. ஜூலை 16 அன்று என்னுரை

பகவன் புத்தர் எவற்றை போதித்தார் What the Buddha Taught என்ற வினாவிற்கு விளக்கமளிப்பதற்கு முன், பகவன் புத்தர் எவ்வாறு போதித்தார் என்ற வினாவோடு துவங்குகிறார் அறிவர் அண்ணல் அம்பேத்கர்.   
Moggallana மெக்கலன்னா (Accountant) என்பவர் பகவன் புத்தரிடம் ஒரு வினாவை எழுப்புகிறார். நாங்கள் வைதீகத்தில் (Step by Step Training) படி படியாக பயிற்சி அளிப்பது போன்று நீங்கள் பயிற்சி அளிக்கிறீர்களா? என்று. படி படியாகதான் பயிற்சியளிக்கப்படுகிறது என்பதனை விளக்குகிறார் பகவன் புத்தர். 5 விதமான பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒரு பயிற்சியில் தேர்ச்சி பெற்ற பிறகு தான் அடுத்த பயிற்சியளிக்கப்படுகிறது. 
01உணர்வு கட்டுப்பாடு : நல்லவனாய் இரு,  கட்டமை உணர்வுக்கு கட்டுப்பட்டு இரு, தீய செயல்களின் தீமையை உணர்ந்து நல் ஒழுக்க செயல்களில் திளைத்து இருங்கள் என்று பயிற்சி அளிக்கப்படுகிறது.
02. புலன் கட்டுப்பாடு  ஓசையை செவியினால் கேட்டும் பொழுதும்( 5வது புலன் (அ) அறிவு), நிறத்தையும் தோற்றத்தையும் கண்ணால் காணும் பொழுதும் (4வது புலன் (அ) அறிவு), வாசனை மற்றும் நறுமணத்தை மூக்கின் நாசி துவாரத்தின் மூலம் உணரும் பொழுதும் (3வது புலன் (அ) அறிவு), உணவின்  சுவையை நாவினால் உணரும் பொழுதும் (2வது புலன் (அ) அறிவு), தொடு உணர்வை உடலால் இஸ்பர்சிக்கும் பொழுதும் (1வது புலன் (அ) அறிவு) தோற்ற மயக்கம் கொள்ளாமல் உள்ளதை உள்ளபடி உணறும் பயிற்சி அளிக்கப்படுகிறது.  
03. உணவு கட்டுப்பாடு அளவாய் உண்ணுங்கள் ஆர்வமாய் உண்ணுங்கள் உடலினை உறுதிசெய்ய உண்ணுங்கள் ஆடம்பரத்திற்க்காக விளம்பரத்திற்க்காக உணவை எடுத்துக்கொள்ளாதீர்கள் என்று பயிற்சி அளிக்கப்படுகிறது.
04. சுய கட்டுப்பாடு : பகலில் விழிப்புடன் இருங்கள், இரவில் சிங்கம் போன்று வலது புறம் படுத்து, ஒருக்களித்து, கால் மேல் கால் போட்டு தன் உணர்வுடன் முக்குளியுங்கள். காலையில் மன மாசுகளை நீக்குங்கள் என்று பயிற்சி அளிக்கப்படுகிறது. 
05.   இந்த நான்கையும் சேர்ந்த தியானம் தனிமையான இடம் ஒன்றை தேர்ந்தெடுத்து, அமர்ந்து கால்களை தாமரை அமர்வில் அமர்ந்து, உடலினை நிமிர்த்து, மேற்சொன்ன நான்கையும் ஒரு முகப்படடுத்தும்  பயிற்சி அளிக்கப்படுகிறது.          
மெக்கலன்னா இரண்டாவது வினாவை பகவன் புத்தரிடம் எழுப்புகிறார். உங்களால் பயிற்சியளிக்கப்பட்ட அனைவரும் நிப்பாணம் அடைந்தனரா என்று. மெக்கலன்னா மற்றும் பகவன் புத்தரின் வினா விடைகள். 
பகவன் புத்தர் : ஒரு சிலர் நிப்பாணத்தை அடைந்தனர். பெருபாலானோர் அடையவில்லை.  
மெக்கலன்னா : ஒரே பயிற்சியை அளிக்கும் போது சிலர் மட்டும் நிப்பாணம் அடைகின்றனர் பெரும்பாலானோர் நிப்பாணம் அடைவதில்லை அது ஏன்?
பகவன் புத்தர் : இதற்கு பதில் அளிப்பதற்கு முன் என் வினாக்களுக்கு பதிலுரையுங்கள். ராஜாகிரகத்திற்க்கு செல்ல வழி தெரியுமா?
மெக்கலன்னா  ராஜாகிரகத்திற்க்கு செல்ல வழி நன்றாக  தெரியும்.  
பகவன் புத்தர் : ஒருவர் உங்களிடம் ராஜாகிரகத்திற்க்கு செல்ல வழி கேட்கிறார். நீங்கள் சொல்லிய வழியில் செல்லாமல் திசைமாறி வேறு பக்கம் சென்றுவிடுகிறார். இன்னொருவர் வருகிறார் அவரும் ராஜாகிரகத்திற்க்கு செல்ல வழி கேட்கிறார் நீங்கள் சொல்லிய வழியில் செல்கிறார். இவ்விரண்டு நபர்களில் யார் ராஜாகிருகம்  அடைவார்?
மெக்கலன்னா : இரண்டாவது நபர்.
பகவன் புத்தர் : இருவருக்கும் ஒரே வழியை காண்பித்தும் ஏன் முதலில் சென்றவர் அந்த இடத்தை அடையவில்லை
மெக்கலன்னாஅவர் சரியான வழியையில் செல்லாதது என் தவறு இல்லை.
பகவன் புத்தர் : மெக்கலன்னா புத்தர் என்பவர் ததாகர், மார்கா தத்தா, வழியை காண்பிப்பவர். பின்பற்றுவது அவரவர் விருப்பம் என்று என்றுரைத்தார்.
உலகில் எந்த ஒரு மத போதகரும் சொல்லாத சொல்லை சொல்லியிருக்கிறார் பகவன் புத்தர். இதனை கூர்ந்து கவனித்த அறிவர் உலகில் உள்ள அனைத்து மதங்களையும் இரண்டாக பிரிக்கிறார். ஒன்று வெளிப்படுத்தபட்ட மதம் (Reveled Religion) மற்றோன்று இயற்கையான மதம் (Natural Religion). 

வெளிப்படுத்தப்பட்ட மதம் இயற்கையான மதம் வேறுபாடுகள் 
வெளிப்படுத்தப்பட்ட மதங்கள் : வைதிகம், கிறித்துவம், இஸ்ஸாம் இவைகள் வெளிப்படுத்தப்பட்ட மதங்கள்.
இயற்கையான மதம் : பௌத்தம் .  
வெளிப்படுத்தப்பட்ட மதம் என்பது கடவுளால் வெளிபடுத்தப்பட்டது. இம்மதங்களுக்கு அடிப்படையாக கடவுள். உலகை படைத்தது இக்கடவுள், உயிரினங்களை படைத்ததும் இக்கடவுள்கள், இயக்க விதிகளையும் படைத்தது இக்கடவுள்கள் தான். எனவே மனிதர்கள் இக்கடவுளை வணங்க வேண்டும். இக்கடவுள் அருளிய பகவத் கீதையை, அல்லது குரானை அல்லது பைபிளை நம்ப வேண்டும் இல்லை எனில் அவர்களுக்கு சொர்க்கம் என்பது இல்லை நரகம் மட்டுமே. 
இயற்கையான மதம் : பௌத்தத்தில் கடவுள் இல்லை, தம்மை கடவுளின் மகன் என்றோ, இறை தூதர் என்றோ பகவன் புத்தர் சொல்லவில்லை அவ்வாறு பிறர் சொல்வதையும் மறுத்து இருக்கிறார். பௌத்தத்தில் எங்கும் தம்மை  முன்னிலை படுத்திக்கொள்ளவில்லை. தமக்கு பின் தன் மகன் ராகுலன் அல்லது தன்னுடன் பெரும்பகுதியை கழித்த பிக்கு அனந்தரையோ முன்னிறுத்தாமல் தம்மத்தையே முன்னிறுத்தியுள்ளார்.
நிப்பானத்தை அடைய தம்மை நம்பவேண்டும், தாம் போதித்தவையை ஏற்கவேண்டும் என்று எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. மேலும் உலகில் வேறு எந்த மத நிறுவனரும் செய்யாத/சொல்லாத ஒன்றை பகவன் புத்தர் அளித்துள்ளார்.  அது சிந்தனை சுதந்திரம்.
பகவன் புத்தர் கேஸபுத்த நகரத்திர்க்கு சென்றார். அங்கு வசித்து வந்த கலாம என்னும் மக்கள் மிக பயனுள்ள ஒரு வினாவை எழுப்பினர். புத்தரே நீங்கள் வருவதற்கு முன் ஒரு ஆன்மிக ஆசிரியர் வந்திருந்தார். அவர் சொல்வது தான் உண்மை என்றும் இவருக்கு முன் வந்து கற்பித்த ஆன்மிக அறிஞரின் கருத்துக்கள் தவறு என்றும் உரைத்தார். இவ்வாறு இங்கு வரும் ஒவ்வொருவரும் தாம் கூறுவது தான் உண்மை எனவே அதனை பின்பற்ற வேண்டும் என்றுரைக்கின்றனர். யாருடைய போதனை சரியானது? எந்த போதனையை நாங்கள் பின்பற்றுவது? என்று வினா எழுப்பினர்.    
பகவன் புத்தர் அம்மக்களுக்கு ஒரு சூத்திரத்தையே (Formula) கொடுத்துவிட்டார். பௌத்தத்தில் இதனை காலம சுத்த என்றழைக்கப்படுகிறது. பழைய நூல்கள் இப்படிப் பகர்ந்தன என்பதால் எதையும் நம்பிவிடாதே, பெருநாளாகப் பின்பற்றப்படுவது, வழக்கமாக இருந்து வருவது என்பதால் எதையும் நம்பிவிடாதே, பெரும்பான்மையினர் பின்பற்றுகின்றனர், இருப்பவர் பலரும் ஏற்றுக் கொண்டனர் என்பதால் எதையும் நம்பிவிடாதே, ஆண்டில் முதிர்ந்தவர், அழகியர், கற்றவர், இனிய பேச்சாளர் என்பதற்காக எதையும் நம்பிவிடாதே, ஒருவர் சொன்னதை ஆராய்ந்துபார், அறிவினால் உணர்வினால் சரிஎனில் அதனால் உனக்கும் அனைவருக்கும் நன்மை உண்டெனில் நம்ப வேண்டும் 
பகவன் புத்தர் எவற்றை போதித்தார் என்று வினா எழுப்பினால் ௦1. புத்தர் அகிம்சையை போதித்தார் ௦2. அன்பை போதித்தார் ௦3. அமைதியை போதித்தார் ௦4.சமத்துவத்தை போதித்தார் ௦5.சகோதரத்தை போதித்தார் ௦6.சுதந்திரத்தை போதித்தார் என்றுரைக்கின்றனர். இது தவறான பதில் என்று சொல்லிவிடவும் முடியாது. அப்படியெனில் புத்தர் எவற்றை போதித்தார்?.

ஒரு முறை பிக்கு  மாலுங்க்ய (Malunkya) தியானத்தில் இருக்கும் பொழுது பல சந்தேகங்கள்/வினாக்கள்  மனதில் எழுந்தது. உடனே பகவன் புத்தரிடம் சென்று அந்த வினாக்களுக்கான விளக்கம் பெற சென்றார். (01-02) உலகம் நிலையானதா? நிலையற்றதா? (02-04) உலகம் வரையர்க்கு உட்பட்டதா? வரையர்க்கு உட்படாததா? (Infinite) (05-06 ) மரணத்திற்கு பின் புத்தர் தொடர்ந்து இருக்கிறாரா? இல்லையா? (07-08) மரணத்திற்கு பின் புத்தர் இருந்தும் இல்லாமலும் இருக்கிறாரா? இருப்பதும்மில்லை இல்லாமலும் இல்லையா? (09-10)ஆன்மாவும் உடலும் ஒன்றா அல்லது வெவேறானதா?

பிக்கு  மாலுங்க்ய அவரின் இந்த ஒரு வினாக்களுக்கு பகவன் புத்தர் பதில் அளிக்கவில்லை. பிக்கு  மாலுங்க்ய கோபம் கொண்டு அங்கிருந்து சென்று மற்ற பிக்குகளிடம் சொன்னார் புத்தர் என் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். வினாக்களுக்கு விடை தெரிந்தால் விடை சொல்லவேண்டும், இல்லை எனில் எனக்கு பதில் தெரியாது என்று பதில் சொல்லவேண்டும். இல்லை என்றால் நான் சீவரத்தை நீக்கி, பிக்கு சங்கத்தில் இருந்து விலக்குவேன் என்றார். பகவன் புத்தர் பிக்கு  மாலுங்க்ய அவரை அழைத்து நான் உன் வினாக்களுக்கு விளக்கம் அளிக்கிறேன் வந்து சங்கத்தில் சேர் என்று சொன்னேனா? பதில் சொல்லவில்லை என்றல் சங்கத்தில் இருந்து விலகிடலாம் என்று சொன்னேனா? இந்த வினாக்கள் தம்மத்தோடு தொடர்பு இருக்கிறதா? இந்த வினாக்கள் துன்பத்தை போக்குமா? என்றார். இதில் இருந்து தெரிவது பகவன் புத்தர் போதித்தது தம்மம்.  

தம்மம் என்பது எது என்பதனை அறிவர் ஆறு வகையாக பிரித்து அளித்துள்ளார். 01. வாழ்வில் தூய்மையை கடைபிடிப்பது தம்மம் 02. வாழ்வில் நிறைவடைவது  தம்மம் 03. Nibbanam 04. ஆவா அறுத்தல் தம்மம் 05. கூட்டு பொருள்கள் நிலையற்றவை என்று உணர்தல் தம்மம் 06. கம்மா விதியை அறிந்து உணர்வது தம்மம். 

(5/6) கூட்டு பொருள்கள் நிலையற்றவை என்று உணர்தல் தம்மம்
கூட்டு பொருள் என்பதன் அறிவியல் பெயர் சேர்மம் (Bond). கூட்டு/சேர்மம் என்றால் என்ன?  ஒன்றுக்கு மேற்பட்டதனிமங்கள்  பிணைந்து இருப்பது சேர்மம். தனிமம் என்றால் என்ன? ஒரு சேர்மத்தை பகுத்து/பிரித்து வரும் பொழுது, எப்பொழுது அந்த சேர்மத்தை மேலும் பகுக்கவோ பிரிக்கவோ முடியாதோ அந்த நிலையில் உள்ள பொருள் தனிமம்.  அதாவது சேர்மங்களை பிரிக்க முடியும் தனிமங்களை பிரிக்க முடியாது. இதுவரை கண்டறியப்பட்ட  தனிமங்களின் எண்ணிக்கை 118 (Periodical Table - ஆவர்த்தன விதிகள்). 

தனிமங்கள் ஒன்றினையும் பொது  சேர்மங்கள் ஆகிறது. சேர்மங்கள் பிரியும் பொழுது தனிமம் ஆகிறது என்பது Morden Science. பகவான் புத்தரின் கூட்டு பொருள்கள் நிலையற்றவை என்ற Classical Science உடன் ஒப்பிடும் பொழுது இரண்டும் வேறுபாடு கொண்டதாக இல்லை. 

பகவான் புத்தரின் கோட்பாட்டை அசங்கர் விளக்குகிறார். எல்லா பொருள்களும், உயிருள்ளவை உயிர் அற்றவை அனைத்தும் காரண காரியத்தால் தோன்றுகிறது. தோன்றியவை அனைத்தும் மறைபவை. கூட்டு கலைந்தால் அழிவு உறுதி.

சேர்மங்கள் பிரிந்தால் தனிமம் ஆகிறது / கூட்டு கலைந்தால் அழிவு உறுதி என்பதுடன் பொருந்திவருகிறது.

உலகில் உள்ள அனைத்தையும் நான்கு பொருள்களாக பிரிக்கலாம். நிலம், நீர், காற்று, நெருப்பு   என்பதனையே 01. Solid Element திடப்பொருள்  02. Water Element திரவ பொருள்  03. Air Element  வாயுப்பொருள்  04. Fire Element தீ பொருள் என்று படித்து அறிந்து இருக்கிறோம். 
01. Solid Element  திடப்பொருள்  என்பது வடிவம் மற்றும் அளவை (Shape and Size) கொண்டது. மனித உடலில் உள்ள திடப்பொருள்கள் மொத்தம் 18. அவை 01. தலை முடி 02. தலை முடியை தவிர்த்து உடலில் உள்ள முடி  03. நகங்கள்  04. தோல் 05. திசுப்படலம் 06.  தசை 07. பற்கள்  08.  நரம்புகள் 09. எலும்புகள் 10. மச்சை (எலும்பு) 11. நுரையீரல் 12. மண்ணீரல்  13. கல்லீரல் 14. இதயம் 15. பெருங்குடல் 16. சிறுங்குடல்  17.சிறுநீரகம் 18. செரிமாணம் ஆகாத உணவு 
02. Water Element - திரவ பொருள் என்பது பள்ளத்தை/தாழ்வை நோக்கி ஓடக்கூடியது, உறிஞ்சக்கூடியது. மனித உடலில் உள்ள திரவப்பொருள்கள் மொத்தம் 12. அவை 01.வியர்வை 02. கண்ணீர்  03. சளி   04. உமிழ்நீர் 05. இரத்தம் 06. சீழ் 07. கொழுப்பு 08. எண்ணெய்ப் பசை  09. கூட்டு உராய்வு திரவம் 10. பித்த நீர் 11.கபம்  12. சிறுநீர்
03. Air Element  வாயுப்பொருள் கற்று அல்லது வாய்வு என்பது வீசும் தன்மை உள்ளது.  அடர்த்தி மிகுந்த காற்று கீழ் நோக்கி வீசும் அடர்த்தி குறைந்த காற்று மேல் நோக்கி வீசும். 01. உடல் மீது காற்று மேல்நோக்கி  வீசும் பொழுது தூக்கம் அல்லது மயக்கம் வருகிறது. 02.வயிற்றில் காற்று செல்லும் பொழுது வயிற்று வலி அல்லது வயிற்று பிரச்சனைகள் உருவாகிறது. 03. குடல்களில் காற்று செல்லும் பொழுது வாந்தி மற்றும் குடல் பிரச்சனைகள் உருவாகிறது. 04. மூக்கின் நாசி துவாரத்தின் மூலம் கற்று செல்லும் பொழுது மனிதன் உயிர் வாழ்கிறான் 05.உடலுக்குள் கற்று செல்லும் பொழுது உடல் முழுவதும் உணவையும், இரத்தத்தையும் கொண்டுசெல்ல உதவுகிறது.   
04. Fire Element தீ பொருள் என்பது இந்த மூன்று பொருள்களின் (திட, திரவ, வாய்வு) இயக்கத்தால் உருவாவது. 
அதாவது திடப்பொருள் பற்கள், எலும்பு திரவ பொருள் கண்ணீர், இரத்தம், வாயுப்பொருள் கற்று இவை அனைத்துமே சேர்மம் தான். மனிதன் என்பவன் 6 தனிமங்களின் சேர்மம் என்று உணரலாம். 
திரவ பொருள் - Oxygen (65%) Hydrogen (10%)  Nitrogen (3%)
திடப்பொருள் - Carbon (18%) Calcium (2%) Phosphorus (1%) 
எல்லாம் நிலையற்றவை என்பது பகவன் புத்தரின் கோட்பாடு. மனிதன் வாழ்வின் எந்த ஒரு இரண்டு கட்டத்திலும் ஒரே மாதிரியாக இருந்தது இல்லை. ஏன் என்றால் தொடர்ந்து வளர்ந்தும் மாறிக்கொண்டும் இருக்கிறான். தாயின் கருவில் ஒரு சிறு புழுவாக சென்று 40 வாரங்கள் கடந்து குழந்தையாக வருகிறது. பிறந்த குழந்தைக்கு 300 எலும்புகள் உண்டு இது வளர்ந்த பிறகு 206 ஆகா குறைகிறது.  பிறக்கும் போது இல்லாத பற்கள் வளர்ந்த பிறகு வருகிறது. வளர்ந்த குழந்தையாக இருக்கும் போது இல்லாத மீசையும் தாடியும் இளைஞாக உடன் வருகிறது.  இளைஞாக இருக்கும் பொழுது உள்ள வேகமும் துடிப்பும் வயது முதிர்ந்த பின் இல்லாமல் போகிறது, தசைகள் சுருங்கி போகிறது. ஒரு முறை சுவாச காற்றை உள்ளிழுத்து வெளியிடுவதற்குள் உடலும் மனமும் பல மாற்றங்களை கொள்கிறது.                      

சரி இந்த அறிவியலுக்கும் தம்மத்திற்கும் என்ன தொடர்பு. உலகில் நிலையானது என்று எதுவும் இல்லை. அனைத்தும் நிலையற்றவை. நிலையற்றவை மீது பற்று கொண்டால் அது துன்பத்தையே அளிக்கும். எனவே பற்று அறுப்பது  துன்பத்தை போக்கும் அறியாமையை விலக்கும்.  

(6/6)  கம்மா விதியை அறிந்து உணர்வது தம்மம் 
பௌத்தம் நியதி என்பதை நியமங்கள் என்றுரைக்கிறது. கோள்களின் இயக்கங்கள், பருவ நிலை மாற்றங்கள், விதைகள் மரமாய் வளர்வதும், மரங்கள் கனிகளை தருவதும், கனிகள் விதைகளை தருவதும் ஒழுக்க நியதி. இந்த ஒழுக்க நியதியை வெளிப்படுத்தப்பட்ட மதம் கடவுளுடன் இணைத்து விடுகிறது. உலகை படைத்தது கடவுள், உயிரினங்களை படைத்தது கடவுள், இந்த நியதிகளை உருவாக்கியது கடவுள் என்றுரைக்கின்றனர்.

இந்த நியதிகளை உருவாக்கியது கடவுள் என்றால் இந்த உலகில் ஒழுக்க சீரழிவுகள் மிகுந்து இருப்பது ஏன்? இதற்கு அவர்களின் பதில் அது கடவுளின் தவறு இல்லை, அது இயற்க்கையின் தவறு. ஒழுக்க நியதிகளை உருவாக்கிய கடவுள் ஒழுக்க சீரழிவுகளை போக்க வேண்டிய கடமை உள்ளவர். இந்த சீரழிவுகளை சரி செய்யாத பொறுப்பு அற்றவராக கடவுள் இருப்பது ஏன்?

பகவன் புத்தர் இதற்கு விளக்கம் அளிக்கிறார். பிரபஞ்சத்தின் ஒழுக்க நியதியை நிர்வகிப்பது கடவுள் இல்லை. அது கம்ம நியதி.  கம்மம் என்றால் என்ன? கம்மம் என்பது மனித செயல்கள். எல்லா செயல்களும் கம்மா ஆவதில்லை. விருப்பத்தோடு நோக்கத்தோடு செய்யும் செயல்களே கம்மம் ஆகும். தற்செயலாக, நோக்கம் இன்றி செய்யப்படும் செயல்கள் கம்மம் ஆவதில்லை. ஜேதவனத்தில் பார்வையில்லாத பிக்கு மழைக்காலத்தில் நடந்து சென்ற போழுது பல பூச்சிகள் இறந்து போய் விட்டது. இதனை பின் அறிந்த பிக்குகள் பகவன் புத்தரிடம் முறையிடுகின்றனர். பகவன் புத்தர் பிக்குவிற்கு கொல்வது அவரின் நோக்கமல்ல மேலும் தாம் நடப்பதால் அவ்வுயிர்கள் இறப்பதையும் அறிந்துணரவில்லை. எனவே நோக்கமெல்லாம் செய்யும் செயல் கம்மா ஆகாது என்றுரைத்தார்      

செயலுக்கு கம்மம் என்று பெயர். செயலின் விளைவுக்கு விபாக என்று பெயர். விபாக தீமையை அளித்தால் கம்மா என்பது தீய செயல்கள், விபாக நன்மையை அளித்தால் கம்மா என்பது நற்செயல்கள். அதாவது நற்செயல்கள் நன்மையையும் தீய செயல்கள் தீமையையும் அளிக்கும். எனவே தீய செயல்களை தவிர்த்து நற்செயல்களை செய்யுங்கள். 

நற்செயல்கள் என்பது என்ன? எந்த செயல்கள் தமக்கும் பிறருக்கும் நன்மையை தருகிறதோ அதுவே நற்செயல். கம்மம் என்ற செயலுக்கான விளைவின் காலம் ஒரே அளவு கொண்டது இல்லை. 01. சில கம்மாக்களின் விளைவு  எப்பொழுதும் நிகழும், 02. சில கம்மாக்களின் விளைவு உடனடியாக நிகழும், 03. சில கம்மாக்களின் விளைவு வேறு ஒரு காலத்தில் நிகழும். அதாவது அவரின் வாழ்நாளுக்குள்.
வந்தவாசியில் உள்ள பொன்னூர் மலை அருகில் உள்ள சமண கோவிலுக்கு சென்றேன். அங்கு சமண சமய நூல்களை நன்கு கற்றறிந்து பட்டம் பெற்ற உபாசகர் ஒருவர் சமண சமயத்திற்கும் பௌத்தத்திற்கும் பல ஒற்றுமைகள் இருப்பது போன்று பல வேற்றுமைகளும் உள்ளது. மிக முக்கியமான வேறுபாடாக கருதுவது விபாக என்றுரைத்தார். ஒருவன் கொலை செய்துவிடுகிறான், கொலைக்கான தண்டனை பெறுவதற்குள் இறந்து போகிறான். அவனை பற்றி பௌத்தம் என்ன சொல்கிறது என்றால் அவன் என்ற சேர்மம் அழிந்து போய்விட்டது, அவன் இறந்து விட்டான் எனவே அவனது கம்மா அவனை பாதிக்காது. மரணம் என்பது தண்டனை இல்லை. அது அனைத்து உயிர்க்கும் வருபது. எனவே பௌத்தம் குற்றம் செய்து விட்டு இறந்துபோவர்களை அவரின் தீய செயல் அவரை துன்புறுத்தாது, அதாவது வாழ்நாளுக்குள் நன்மையையும் தீமையும் நிகழும், இறந்தபின் விபாக அவரை பாதிக்காது என்றுரைக்கிறது.
ஆனால் சமணத்தில் குற்றம் செய்தவன் இறந்தாலும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. உடல் அழிந்தாலும் ஆன்மா இருக்கிறது. ஆன்ம வேறு உடல் எய்திய பின் அப்பிறப்பில் விபாக நிகழும். அதாவது தீய செயலுக்கான தண்டனையை அவர் இறந்ததால் மறுபிறப்பில் அடைவார்  என்று அவர் விளக்கம் அளித்தார்.
(4/6) ஆவா அறுத்தல் தம்மம்  
பேராசையே பெரும்துன்பத்திற்க்கு காரணம். பெருஞ்செல்வந்தரும் பெறுவதில் தான் இருக்கின்றனர் தருவதில் இல்லை. இங்கே பொருளாதார அறிஞர் மாஸ்லோ அவர்களின் தேவை கோட்பாடு நினைவுக்கு வருகிறது. தேவைகள் எப்பொழுதும் முற்று பெறுவதில்லை. ஒரு தேவை நிறைவேற்றப்பட்ட பின்னர் அடுத்த தேவையை நோக்கி நகருதல் என தேவைகள் தொடர்ந்த வன்னமாக இருக்கும். அறிஞர் மாஸ்லோ அவர்களின் தேவை கோட்பாட்டில் தேவை (Need/Wants) என்ற சொல்லுக்கு பதில் தன்கா என்று மாற்றினால் அது பகவன் புத்தரின் கோட்பாட்டில் இருந்து முரண்பட்டதாக இல்லை.
       
(1/6)  வாழ்வில் தூய்மையை கடைபிடிப்பது தம்மம் 
ஆறு புலன்களை (அ) அறிவுகளை கொண்டவன் மனிதன். இந்த ஆறு புலன்களில் மூன்று புலன்கள் மட்டுமே வெளிப்படுத்துபவை. முதல் அறிவு (அ) முதல் புலன் என்ற உடல், இரண்டாவது அறிவு (அ)  இரண்டாவது புலன் என்ற நாக்கு (வாய்), ஆறாவது அறிவு (அ) ஆறாவது புலன் என்ற மனம். எனவே உடலால், உரையால், உள்ளத்தால்  சீலத்தை (ஒழுக்கத்தை) ஒழுகுதல் தம்மம். 

(2/6) வாழ்வில்  நிறைவடைவது    தம்மம்
உடலால், உரையால், உள்ளத்தால் நிறைவடைவது    தம்மம்

(2/6) நிப்பாணத்தில் வாழ்வது  தம்மம்
நிப்பாணம் என்பது பற்று அற்ற நிலை. பற்று தான் இன்பத்தையும் துன்பத்தையும் தரும். பற்றற்ற நிலை இன்பத்தையோ துன்பத்தியோ அளிக்காது. எனவே இது மறுபிறப்பை அளிக்காது. நன்மை செய்தால் நன்மையும் தீமை செய்தால் தீமையும் விளையும் என்பதனை எரியும் அனல் (The Fire Sermon) என்று விளக்குகிறார் பகவன் புத்தர்.

கண் எரியும் போது, கண்ணால் காணும் உருவம் எரிகிறது. கண்ணால் காணும் உருவம் காட்சி உணர்வை ஏற்படுத்துகிறது. கண்ணால் காணும் உருவம் எரியும் போது காட்சி உணர்வு எரிகிறது. காட்சி உணர்வு குறிப்பை பதிவிடுகிறது. காட்சி உணர்வு எரியும் போது காட்சி குறிப்புகள் எரிகிறது. காட்சி குறிப்புகள் எரியும் போது, காட்சி குறிப்பினால் எழும் இன்பம் அல்லது துன்பம் எல்லாம் எரிகிறது. எதனால் எரிகிறது என்றால் காமம், வெகுளி மயக்கம் இவற்றினால் எரிகிறது. இது போன்று ஒவ்வொரு புலன்களும் எரிகிறது என்று விளக்குகிறார் பகவன் புத்தர். 
  
தம்மல்லாதது எது 
தம்மல்லாதது எது என்பதனை அறிவர் எட்டு வகையாக பிரித்து அளித்துள்ளார். 01.  இயற்க்கைக்கு அப்பாற்பட்டதை நம்புவது தம்மம்மல்ல 02. கடவுளை நம்புவது  தம்மம்மல்ல  03.   பிரம்மத்தை அடிப்படையாக கொண்டது தம்மம்மல்ல 04. ஆன்மாவை அடிப்படையாக கொண்டது தம்மம்மல்ல 05.யாகத்தை அடிப்படையாக கொண்டது தம்மம்மல்ல 06.யூகத்தை அடிப்படையாக கொண்டது தம்மம்மல்ல 07.தம்ம நூற்களை கற்றல் தம்மம்மல்ல 08.தம்ம நூல்களில் தவறு நிகழாது என்று நம்புவது தம்மம்மல்ல

01.  இயற்க்கைக்கு அப்பாற்பட்டதை நம்புவது தம்மம்மல்ல       
இங்கு இரு வேறு கருத்துக்கள் நிலவுகிறது   01. உலகில் நிகழும் எல்லா நிகழ்வுக்கும் காரணம் இருந்தாகவேண்டும் என்பது இல்லை (பகவதா). 02.உலகில் நிகழும் எல்லா நிகழ்வுக்கும் காரணம் இருக்கிறது.  அது மனிதனால் இல்லை இயற்க்கையினால், இயற்க்கை நிகழ்வும் முன்கூட்டியே நிர்ணயிக்கப்படுகிறது   (கோசலர் மகாலி)

இவ்விரண்டு கோட்பாடுகளையும் பகவன் புத்தர் புறக்கணிக்க மூன்று நோக்கங்கள் இருக்கிறது. 01. மனிதனை பகுத்தறிவு பாதைக்கு அழைத்து செல்வது 02.உண்மையை தேடிச்செல்ல மனிதனை சுதந்திரமாக்குவது 03. மூட நம்பிக்கைகளை விட்டு விட்டு தீர விசாரித்தறியும் உணர்வை வளர்ப்பது.

மறுக்கிறார். புத்தரின் விளக்கம் எல்லா நிகழ்வுக்கும் காரணம் உள்ளது. காரணமின்றி ஏதும் நிகழ்வதில்லை. இந்த நிகழ்வுக்கு இரு கரணங்கள் உள்ளது ஒன்று மனித செயல்கள் மற்றோன்று இயற்க்கை விதியால் நிகழ்கிறது.            

02. கடவுளை நம்புவது  தம்மம்மல்ல
வெளிப்படுத்தபட்ட மதம் சொல்வது என்னவென்றால் உலகம் படைக்கப்பட்டது.  உலகத்தை படைத்தது கடவுள்.  கடவுளை யார் படைத்தது என்றால் கடவுள் தானே தோன்றினார்  என்றுரைக்கின்றனர்.  கடவுள்  ஒன்றில் இருந்து உலகத்தை படைத்தாரா? அல்லது வெறுமையில் இருந்து  உலகத்தை படைத்தாரா? இல்லாததில் இருந்து மற்றோன்றை உருவாக்க முடியாது. எனவே ஒன்றில் இருந்து மற்றோன்றை உருவாக்கினார் என்றால் கடவுளுக்கு முன்பே அப்பொருள் உள்ளது. கடவுளுக்கு முன்பே அப்பொருள் உள்ளதால் அதை படைத்தவர் கடவுள் இல்லை.

கடவுளை நம்புவது ஆபத்தானது என்றுரைக்கின்றார். காரணம்   கடவுள் நம்பிக்கை பூசையையும், பிராத்தனையையும்  உருவாக்கும். இதனை செய்ய புரோகிதர்கள் வேண்டும். தீய புத்திசாலியான புரோகிதர்கள் தங்கள் வாழ்வை வாழ்வை வளப்படுத்திக்கொள்ள மூட நம்பிக்கைகளை உருவாக்குவார்.  
03.   பிரம்மத்தை அடிப்படையாக கொண்டது தம்மம்மல்ல
உண்மைகளை நிரூபிக்க வேண்டும். உண்மையை நிரூபிக்க கபிலரின் சாங்கிய தத்துவத்தின் படி இருவழிகள் உள்ளது.  ஒன்று புலன்களுக்கு புலப்படல் மற்றோன்று அனுமானத்திற்கு அகப்பட்டால். அனுமானத்திற்கு அகப்பட்டால் என்றால் காரணத்தைக் கொண்டு காரியத்தை அறிதல் (அ) காரியத்தைக் கொண்டு காரணத்தை  அறிதல் (அ) ஒப்பீட்டின் மூலம் அறிதல்  சாங்கிய தத்துவத்தின் படி பிரமத்தை அறிய முடியவில்லை.  எனவே பிரமம் ஒன்று இல்லை என்றுரைக்கிரார் பகவன் புத்தர்.

கண்களுக்கு புலப்பட வேண்டும் என்றால் மின்சாரம் கண்களுக்கு புலப்படவில்லை. எனவே மின்சாரம் இல்லை என்று சொல்லிவிட முடியுமா? சாங்கிய தத்துவத்தின் முதல் விதி படி புலன்களுக்கு (கண்ணுக்கு) புலப்படவில்லை ஆனால் இரண்டாவது விதி படி அனுமானத்திற்கு அகப்படுகிறது.  மின் ஆற்றல் மிக இன்றியமையாத ஆற்றலாக நமக்கு உள்ளது. அதனை வெப்ப ஆற்றலாகவும், ஒளி ஆற்றலாகவும், ஒலி ஆற்றலாகவும் பயன்படுத்திக்கொண்டு வருகிறோம்.     

இதுவரை வேதங்களை நன்கு கற்றுணர்ந்த மாணவர்கள் யாரும் பிரம்மத்தை கண்டதில்லை. அவர்களின் ஆசிரியர்கள் யாரும் பிரம்மத்தை கண்டதில்லை, ஏழு தலைமுறையில் ஒருவர் கூட கண்டதில்லை, ரிஷிகள் யாரும் கண்டதில்லை. யாரும் கண்டறியாத என்று இருப்பதாக ஏறக்க முடியாது என்றுரைக்கிறார் பகவன் புத்தர்.   

இவ்வாறு சொல்வது எப்படி இருக்கிறது என்றால் ஒருவன் தான் அழகிய பெண் மீது காதல் கொண்டு இருப்பதாக  சொல்கிறான். அவனிடம் அப்பெண்ணின் பெயர் என்ன என்றால் தெரியவில்லை என்கிறாரன். அவள் நிறம் என்ன என்றால் தெரியவில்லை என்கிறாரன்.  அவள் எங்கிருக்கிறாள் என்றால் தெரியவில்லை என்கிறாரன்.  அவளை பற்றி எதுவும் தெரியாது என்கிறாரன். இவனை என்ன சொல்வது?   கண்டுணராத பெண் மீது காதல் கொண்டது போன்று உள்ளது பிரமத்தை பற்றிய பேசசு என்றுரைக்கிறார் பகவன் புத்தர்.

04. ஆன்மாவை அடிப்படையாக கொண்டது தம்மம்மல்ல 
ஆன்மா உண்டு என்றே பெரும்பாலான மாதங்கள் கூறுகின்றது. பௌத்தம் மட்டும் ஏன் ஆன்மாவை மறுக்கிறது. உண்மை என்றால் அது நிருபிக்கப்பட்ட வேண்டும். பௌத்தம் அனிச்சா (நிலையாமை) கோட்பாட்டை கொண்டுள்ளது (எல்லாம் நிலையற்றவை).

ஆன்மாவை பற்றி வெளிப்படுத்தபட்ட மாதத்திலேயே இரு வேறு கருத்துக்கள் உள்ளது. ஒன்று ஒரே கருத்து உடையவை மற்றோன்று பல்வேறு கருத்துக்கள் கொண்டவை.

ஒரே கருத்து உடையவை 01. ஆன்மா என்பது உயிர்/ உடல் தோன்றும் போது உடலில் உட் புகுகிறது. உடலில் உயிர் இருக்கும் வரை உடலில் தங்கியிருக்கிறது. உடல் மரணம் அடையும் போது உடலை விட்டு ஆன்மா சென்றுவிடுகிறது. அது வேறு ஒரு உடலுக்கு உட்புக காத்துக்கொண்டு இருக்கிறது. அதாவது ஆன்மா அழிவற்றது/ நிலையானது   

பல்வேறு கருத்துக்கள் 01. ஆன்மாவிற்கு உருவம் உண்டு/ இல்லை  02.   ஆன்மா என்பது உணர்வு/ உணர்வல்ல  03.   ஆன்மா என்பது புலனறிவுடையது/ புலனறிவற்றது  04.  உடல் மரணம் அடையும் போது ஆன்மா துன்பம் அடைகிறது/ அடைவதில்லை  

பகவன் புத்தர் தன்னுணர்வை தான் ஆன்மா என்று கருதுகின்றனர் என்றுரைக்கிறார். இதனை நாமரூபம் என்ற கோட்பாட்டால் விளக்குகிறார். நாம ரூபம் என்றால் புலன் அறிவு உள்ள உயிர்கள். நாம ரூபம் என்பதனை Closed System என்று சொல்லலாம். பல்வேறு கந்தங்களை அதாவது திடப்பொருள், திரவப்பொருள் மற்றும் வாயு பொருள்கள் அனைத்தையும் போர்வையாக போர்த்து தோல் இருக்கிறது. இந்த ஆறு புலன் அறிவு இந்த நான்கு கந்தங்களால் ஆனது. இதனை நாம ரூபம் என்கிறது.  இந்த புலன்களின் தன்னுணர்வை தான் ஆன்மா என்றுரைக்கின்றனர்.      

05.யாகத்தை அடிப்படையாக கொண்டது தம்மம்மல்ல
யாகங்களை அடிப்படையாக கொண்டது வைதிகம்.  யாகங்கள் உயர்வனை இல்லை. ஏனெனில்   யாகத்தில் மது அருந்தப்படுகிறது, உயிரினங்களை பாலியிடப்படுகிறது, கேளிக்கைகளில்  ஈடுபடப்படுகிறது, யாகங்கள் நடத்தப்படும் இடங்களை சுற்றி தூண்கள் நடப்பட்ட ஏராளமான மரங்கள் அழிக்கப்படுகிறது, ஏராளமான புள்களை அறுத்து யாகம் நடத்தப்படும் இடங்களை சுற்றி நிரப்பப்படுகிறது, பணியாட்கள் அடித்து புன்புறுத்தப்படுகின்றனர்.

யாகங்கள் செய்ய விரும்பினால் அது குலகுரு என்ற பிராமணர் மன்னர் மகாவிதேர்க்கு செய்ததை போன்று செய்ய வேண்டும் என்று பகவன் புத்தர் (கூடதண்டர், உதயினர், உஜ்ஜயர்) என்ற மூன்று பிராமணர்களுக்கு விளக்கமளித்தார்.  
யாகங்கள் செய்ய மேலே சொன்னவைகளை தவிர்த்து  பால், நெய், வெண்ணை, எண்ணெய், தேன், சக்கரை இவற்றைக்கொண்டு யாகம் நடத்தப்படவேண்டும். மக்கள் அனைவரையும் அழைக்கப்படவேண்டும், அதில் நற்செயல்களை செய்தவர்களை அழைத்து அவர்களை பெருமை படுத்தவேண்டும். அறநிலையங்களை அமைத்து அறச்செயல்களை செய்யவேண்டும்          

06.யூகத்தை அடிப்படையாக கொண்டது தம்மம்மல்ல
அறிவு என்பது இறுதியானது இல்லை. அது எப்பொழுதும் அறிய வேண்டடியுள்ளது. அனைத்தையும் அறிந்தவர் உலகில் இல்லை. பகவன் புத்தரும் தன்னை அனைத்தையும் அறிந்தவர் என்று கூறிக்கொள்ளவில்லை. கற்பனையில்/ யூகத்தில் வாழ்வது தம்மம் அல்ல.    

07.தம்ம நூற்களை கற்றல் தம்மம்மல்ல
பிராமணர்கள்  நூல் அறிவுக்கு மேல் ஒன்றுமில்லை என்று நினைக்கிறார்கள்.  அதாவது படிப்பது, மனப்பாடம் செய்வது ஒப்பிப்பது .   பாபா சாகிப் அறிவை பற்றி பேசும் பொழுது அறிஞர் டிலோ வை குறிப்பிடுகிறார். அறிவென்பது வயது முதிர்ச்சியை போன்று ஒருவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவரை வந்தடையும் பொருளல்ல. அறிவு வேண்டுமெனில் முதலில் ஆர்வம் ஏற்பட்ட வேண்டும் பின்பு ஐயங்களை போக்கிக்கொள்ளவேண்டும். பகவன் புத்தர் அறிவை பற்றி பேசும் பொழுது அதனை வாழ்வில் நடைமுறைப்படுத்த வெண்டுமென்கிறார்.  அறிவு ஒழுக்கத்துடன் இணைந்து இருக்கவேண்டும்.  ஒழுக்கமில்லாத அறிவு ஆபத்தானது. 

1000 செய்யுட்களை அறிந்து இருப்பதை விட ஒரே ஒரு செய்யுளை அறிந்து உணர்ந்து அதன்படி நடப்பதே தம்மம் என்றுரைக்கிறார்.  தம்ம நூல்களை படிப்பது தம்மமல்ல அதன்படி நடப்பதே தம்மம்.

பதிசேனர் என்ற பிக்கு வயதில் முதிந்தவர், மந்த புத்தியுள்ளவர். அவரை  பலர் கேலியும் கிண்டலும் செய்துகொண்டறிந்தனர். ஒரு முறை பகவன் புத்தர் அவரை அழைத்து அவர்க்கும் ஒரு செய்யுளை விளக்கினார்.
நகாப்பவன் எவனோ
நினைவை கட்டுக்குள் நிறுத்துபவன் எவனோ
தன்னுடலால் துன்பம் ஏழைக்காதவன் எவனோ ..
ஒருமுறை பதிசேனரை பகவன் புத்தர் பிக்குணிகளுக்கு போதிக்க அனுப்பினார். இவர் வருவதை அறிந்த பிக்குணிகள் அவரை நன்கு குழப்ப முடிவெடுத்து இருந்தனர். அவர்களின் செயல்கள் அத்தனையும் தோற்றுப்போனது. பதிசேனர் ஒரே ஒரு செய்யுள் அறிந்த பிக்கு என அறியப்பட்டார்.   பதிசேனர் பொருளறிந்து அதனை தம் வாழ்வில் கடைபிடித்து வந்ததால், பகவன் புத்தர் தம் தானம் ஏற்கும் பாத்திரத்தை அவருக்கு அளித்தார். ஒரு முறை பகவன் புத்தரை விருந்திற்கு அளித்தார் மன்னர், அதனை ஏற்று புத்திசேனரை தன்னுடன் அழைத்து சென்றார். வாயில் காப்பாளன் பதிசேனரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. பகவன் புத்தரை மட்டுமே அனுமதித்தனர். பகவன் புத்தர் உணவு ஏற்க சென்ற போழுது, புத்திசேனரிடம் சென்று அவரின் கைகளை கழுவினார். புத்தரின் செயலை கண்டு அதிந்த மன்னரும் பிறரும் வியந்து கேட்டது ஒரே ஒரு குறள் அறிந்த ஒருவரின் கைகளை ஏன் நீங்கள் கழுவுகின்றீர் என்றனர். ஒரு குறள் என்பது முக்கியமல்ல அதனை வாழ்வில் கடைபிடிப்பதே தம்மம் என்றுரைத்தார் புத்தர். 

 08.தம்ம நூல்களில் தவறு நிகழாது என்று நம்புவது தம்மம்மல்ல
த்விஜ்ஜ சுத்தத்தில் வேதங்கள் நீர் இல்லாத பாலைவனம். பாதையில்லா பெருவனம், உண்மையில்  வேதங்கள் பூரண அழிவுகள், அறிவு தாகமும் ஒழுக்கமும் உடைய எந்த மனிதனும் தன் தாக்கத்தை தணிக்க வேதங்களை நாடி செல்ல மாட்டான்.

புதன், ஜூலை 26, 2017

தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள்

அகழாய்வுகள் பண்டைய தலைநகரம், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் வணிக சிறப்புமிக்க இடங்களில் நடத்தப்படும். மதம் அல்லது சமயம் சார்ந்து தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்படுவதில்லை. பின் இங்கு பௌத்த தொல்லியல் ஆய்வுகள் என்ற தலைப்பின் நோக்கம் பௌத்த தடயங்கள் பாதுகாப்பதில் தொல்லியல் துறை, அரசு, வரலாற்று அறிஞர்கள் கவனம் செலுத்தவேண்டும் என்றும் பொதுமக்கள் தம் முன்னோர்களின் வரலாற்று தடயங்களை தமக்கு பின் வரும் தலைமுறை அறிந்துக்கொள்ள பாதுகாக்க வேண்டும் என்றும் இவர்கள் எல்லோரையும் விட பௌத்தர்கள் கூடுதல் பொறுப்புமிக்கவராக இருக்கவேண்டும் என்ற ஒற்றை இலக்கு தான்.

தமிழகத்தில் 200 இடங்களில் 600க்கும் மேற்பட்ட புத்தர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. 1863லிருந்து 2011வரை 132 இடங்களில் சிறிதும் பெரிதுமாக அகழாய்வுகள் நடைபெற்றுள்ளது. தொல்லியல் துறை Tamilnadu Ancient and Historical Monuments and Archaeological Sites and Remains Act 1966 சட்டத்தின் கீழ் தொன்மையான கோவில்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள், மலை படுக்கைகள், சிற்பங்கள் மற்றும் கோட்டைகளை பாதுகாத்து வருகின்றது. இச்சட்டத்தின் கீழ் 88 நினைவுச்சின்னங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இதில் ஒன்று கூட பௌத்த தளமோ, சிலையோ இல்லை, பெரும்பாலும் பல சிவன் கோவில்கள் இதில் கொண்டுவரப்பட்டுள்ளது. கஞ்சிவரத்தில் இரு ஜைன கோவில்கள் மற்றும் மதுரையில் உள்ள தீர்த்தங்கரர் சிலைகள் இதில் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகமே பௌத்த தளமாகயிருந்தது, பௌத்த சமய அடையாளங்கள் இந்த பாதுகாப்பு சட்டத்தின் படி ஏன் ஒன்றுகூட பாதுகாக்கப்படவில்லை? 

இந்த அக்கறையின்மையினால் தான் பகவன் புத்தர் சிலைகள் உடைக்கப்படுவதும், களவாடப்படுவதும், களவாடப்பட்ட சிலைகளை காவல் துறையில்  பதிவு செய்தும் மீட்கப்படாமையும், தடயங்கள் அழிக்கப்படுவதும், மறைக்கப்படுவதும் தொடர்ந்தவன்னமாக இருக்கிறது. 

தமிழகமே  பௌத்த தளமாகயிருந்தது 
01. ஆண் பெண் என பாலின வேறுபாடோ, பிறப்பு வேற்றுமையோ பாராமல் மக்கள் அனைவரும் சமம் என்றுரைத்தது பௌத்தம். பகவன் புத்தரின் போதனைகள் ஒழுக்கமும் அறிவும் நிறைந்தவையாக இருந்தது, மக்கள் மொழியில் கற்பிக்கப்பட்டது. உயிரினங்கள் பலியிடுதலை தடுத்தது. சங்கங்கள் அமைத்து கல்வி, மருத்துவம் அளித்தது.
02. இன்று தமிழர்கள் பின்பற்றும் பல சடங்குகள் பௌத்தம் சார்ந்தவையே. ஆனால் அவற்றில்  அறிவுக்கு பொருந்தாத இழிவான பல கற்பனை கதைகளை கற்பித்து திருத்தியமைக்கப்பட்டு பின்பற்றப்படுகிறது என்றுரைக்கிறார் பண்டித அயோத்திதாசர். எடுத்துக்காட்டாக  மர வழிபாடு, கோவிலில் தலைமுடி மழிப்பு, மஞ்சள் ஆடை உடுத்துவது, பௌர்ணமி வழிபாடு, தீபாவளி, கார்த்திகை தீபம், காமாட்சியம்மன் விளக்கு, பாத சேவை, மஞ்சள் உடுத்தி கரகம் எடுத்தல், ஆயுத பூஜை 
03. உலகத்தின் பல்வேறு நாடுகளில் பாதுகாத்து வைத்து இருக்கின்ற திரிபீடகத்திற்கு உரை எழுதிய 12 பௌத்த அறிஞர்களில் ஒன்பது அறிஞர்கள் தமிழர்கள் என்றுரைக்கிறார் வண. பிக்கு போதிபால.
04. இன்று உலகம் முழுவதும் தமிழ் பரவியிருக்க காரணம் கடல்வணிகம் தான். உலகமுழுவதும் உள்ள கடலோடிகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு தமிழ் பௌத்தம் தான். கடல் தெய்வம் என்று அழைக்கப்படும் மணிமேகலையை தாய்லாந்தில் மணிமேகலை என்றும் பிற நாடுகளில் தாரா தேவி என்றும் வழிபடப்படுகின்றனர் என்றுரைக்கிறார் கடல் ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்கள்.
05. சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பின்பற்றும் தியானம் மற்றும் பயிலும் தற்காப்பு கலையை கற்று கொடுத்தவர் காஞ்சிவரத்தில் பிறந்த வண. போதி தருமன். அவரை தமிழராகவே இங்கு கற்பிக்கப்படுகிறதே தவிர பௌத்தராக கற்பிக்கப்படுவதில்லை.            
06. தர்க்கவியலின் தந்தை என்று அழைக்கப்படும் திக்நாதர் (தின்னாகர்) செங்கல்பட்டு அருகில் உள்ள சிங்க பெருமாள் கோவில் என்ற ஊரில் பிறந்த பௌத்த அறிஞர். நூற்றுக்கும் மேற்பட்ட தர்க்கம் (விவாதங்களை) எழுதியவர்
07. வட இந்தியாவில் புகழ்பெற்று விளங்கிய நாளந்தா  பல்கலைக்கழகத்தின் தலைமைப் பேராசிரியராக வண.தருமபால ஆசிரியர் இருந்திருக்கிறார்.  இது போன்று பல சிறப்புகளை தந்தது தமிழ் பௌத்தம்
A காவிரிப்பூம்பட்டினம்
விரிவஞ்சி இங்கு காவிரிப்பூம்பட்டினம் மற்றும் காஞ்சிவரம் ஆகிய இரு இடங்களை எடுத்துக்கொள்ளப்படுகிறது. புகழ் பெற்ற சிறந்த துறைமுகம், வணிக முக்கியம் மற்றும் பௌத்தம் தழைத்தோங்கிய இடமாக இருந்த காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பை பட்டினப்பாலை, சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை மூலம் அறிந்துகொள்ளலாம். தமிழகத்தின் முதல் பிக்கு என அறியப்படும் வண.அறவணடிகள் தமிழகத்தின் முதல் பிக்குணி என்று அறியப்பட்டும் மணிமேகலையும் வாழந்த இடம்.
அறிஞர் T. ராமச்சந்திரன் மற்றும் ஐயப்பன்
மால்யா, ஜாவா போன்ற கிழக்கத்திய நாடுகளுக்கு செல்வதற்கு இந்தியாவிலிருந்த முதல் துறைமுகம் நாகப்பட்டினம் தான். எனவே பௌத்தத்தை கிழக்கத்திய நாடுகளுக்கு கொண்டுசெல்ல பிக்குகளுக்கும், பௌத்த அறிஞர்களும் இங்கு வந்து தங்கியிருந்து சென்றனர்.  
தொல்லியல் துறை  இயக்குநர் அறிஞர் திரு Dr D தயாளன்
பண்டைய காலத்தில் இருந்த இரண்டு வணிக வழி தடங்கல் கடல் வழி (Maritime) மற்றும் நில வழி (Overland). பகவன் புத்தர் பிறந்த பண்டைய இந்தியாவில் இருந்து இந்தியா முழுவதும் மற்றும் மற்ற ஆசிய நாடுகளுக்கு செல்ல இவ்விரண்டு வணிக வழி தடங்கல் பௌத்தர்களுக்கு முதன்மையான வணிக வழி தடமாக இருந்தது. 
இந்த பண்டைய இணைப்பு வழிகள் பௌத்த சமயத்தையும், பண்பாடு மற்றும் கலை செல்வாக்கினை கண்டங்களுக்கும் அதற்கப்பாலும் கொண்டுசெல்ல வைத்தது. நாகப்பட்டினத்தில் ஏராளமான வெண்கல சிலை கிடைத்தது குறிப்பிடுவது என்னவென்றால் நாகப்பட்டினம் பௌத்த மையம் மட்டுமல்ல உருவாக்கப்பட்ட புத்தரின் வெண்கல சிலைகளை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் மையமாக திகழ்ந்துள்ளது.  
தமிழக கடற்கரையில் இருந்து ஆந்திர, ஒரிசா, பெங்கேல் வரை 127 பௌத்த விகாரங்கள் இருந்ததாக தொல்லியல் துறை தகவல் ஒன்றை அளிக்கிறார்.
கடல் வணிகத்தில் சிறப்பு பெற்றிருந்த இடமாதலால் வெள்ளையன் இருப்பு என்ற இடத்தில் அழகாய்வு செய்தபொழுது ரோமானிய நாணயமும்  வாணகிரி என்ற இடத்தில் மட்பாண்டங்களும் கிடைத்தது. 

காவிரிப்பூம்பட்டினத்தில் அகழாய்வுகள்  

இந்திய தொல்லியல் துறையினரால்  காவிரிப்பூம்பட்டினத்தில் 1962-67, 1970-71, 1972-73 ஆகிய ஆண்டுகளில் அகழாய்வு நடத்தப்பட்டது. அதன் பிறகு தமிழக அரசு தொல்லியல் துறையினரால் 1994-95, 1997-98 பூம்புகாரிலும், 2007-08 செம்பியன் கண்டியூரிலும், 2008 ட்ரங்க்பார்  (Tranqebar) அகழாய்வு நடத்தப்பட்டது.

வானோக்கி நின்ற புத்த விகார் அழிப்பும் கண்டெடுத்த சிலையை கொடையாக அளித்து தடயங்கள் மறைப்பும்  
01.  அன்பு பொன்னோவியம்
பதினெட்டாம் நூற்றாண்டு இடைக்காலம் 1867 வரை வானோக்கி நின்ற புத்த விகார் தலைவாசல் ஆங்கிலேயரால் இடித்து தள்ளப்பட்டதை தமிழர் கண்டஉண்மை சம்பவமாகும். இங்கிருந்த விகாரையில் பௌத்தர்கள் வணங்கி வந்த பொன்னாலான புத்தர் சிலையை எடுத்து சென்று ஸ்ரீரங்கம் கோவில் கட்டுமான பணிக்கு பயன்படுத்தினார்கள். (நூல்- உணவில் ஒளிந்திருக்கும் சாதி) 

02. அறிஞர் T. ராமச்சந்திரன்
1867ம் ஆண்டுவரை நாகப்பட்டினத்தில் புதுவெளி கோபுரம் (அ) சீனா கோபுரம் (அ) ஜெயின் பகோடா என்று அழைக்கப்படும் பௌத்த விகாரை இடித்து கிறித்துவ தேவாலயம் கட்ட அரசு அனுமதியளித்தது. 
இவ்விகார் அருகில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த இலுப்பை மரத்தின் அடியில் 3 அடிக்கு கீழ் 5 புத்தர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. நாகப்பட்டினத்தில் கண்டறியப்பட்ட முதல் புத்தர் சிலைகள் இச்சிலைகள் தான். இந்த 5 புத்தர் சிலைகளில் 4 சிலைகள் வெண்கலத்தால் (Bronze) ஆனது  ஒரு சிலை பீங்கான் பொருள் கலவையினால்(Porcelain) ஆனது. இந்த 5 புத்தர் சிலைகளில் ஒரு சிலையின் பீடத்தில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது. 
புத்த விகார் மீது புதிதாக கட்டப்பட்ட கிறித்துவ தேவாலயத்தை காணவந்த சென்னை கவர்னர் நேப்பியர் பிரபுவிற்கு 1868ல் கொடையாக ஒரு சிலையை அளிக்கப்பட்டுவிட்டது. மேலும் நான்கு சிலைகளை 1871ல் பிரான்ஸ்க்கு கொடையாக அளிக்கப்பட்டுவிட்டது. 
03. கோவை இளஞ்சேரன் - தமிழ் பல்கலைக்கழகப் பதிவு துறை
நகருக்கு வெளியே அதாவது நாகர்கள் வாழ்ந்த பட்டினத்திற்கு வெளியே கோபுரம் கட்டப்பட்டதால் வெளிக்கோபுரம் எனப்பெயர் பெற்றது. ஏற்கனவே இருந்த ஒளி தரும் வெளிக்கோபுரம் பழுது அடைந்ததால் புதிதாக கட்டப்பட்ட வெளிக்கோபுரம், புதுவெளி கோபுரம் என்று அழைக்கப்பட்டது. புதுவெளி கோபுரம் கலங்கரை விளக்கமாக கட்டப்பட்டதன்று. ஆனால் கலங்கரை விளக்கமாக பயன்பட்டது. 
சீனர்களின் வருகளை பெரியதாகியதால், சீன மன்னனும் இரண்டாம் நரசிம்ம வர்மா பல்லவனும் (700-728) வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். சீன மன்னன் வேண்டியதற்கு இணங்க இரண்டாம் நரசிம்ம வர்ம பல்லவன் இந்த கோபுரத்தை கட்டினான். எனவே இக்கோபுரம் புதுவெளி கோபுரம்,  சீன  பகோடா (China Pagoda), மல்லன் கோபுரம் என்று அழைக்கப்பட்டது.  கி. பி 8 ஆம் நூற்றாண்டைசேர்ந்த கோபுரம்.
அரசின் குறிப்புப்படி 1846 கோபுரத்தின் புகைப்படமும் வரைபடமும் உருவாக்கப்பட்டன. ஆங்கில அரசு 11-10- 1858 கோபுரத்தின் நிலையை பற்றிய விபரத்தின் அறிக்கையை தஞ்சை ஆட்சியாளர் காப்பன் ஏஃப் ஒக்சு என்பவருக்கு எழுதியது 
01. ஐந்து அடுக்கு மாடங்களை கொண்டது புதுவெளி கோபுரம். 68 அடி உயரமுள்ளது. 41 சதுர அடி பரப்பளவு கொண்டது.  செங்களாலும் மண்ணாலும் கட்டப்பட்டது 
02. கூரையின் சுற்று பக்கங்களில் அமைந்த பிதுக்கம் சிற்ப வேலைப்பாடுகள் உடையது. இதில் இருந்து ஒரு புத்தர் சிலையும் கிடைத்தது.
03.இதன் ஐந்தாவது மாடம் சிதைவுற்று இடிபாடு அடைந்ததால், இடிந்து விழுந்து பேராபத்து நேராமல் இருக்க வேண்டி அதனை இடித்து விட்டனர். பின்னர் நான்காவது மாடம் சிதைவுற்றது. இக்கோபுரத்தின் பின்புறத்தில் இயேசு சபையினர் (Jesus Society) ஒரு தொழுகை அறை அமைத்து இருந்தனர். அதற்க்கு இது இடைஊறு எனக்கருதி நான்காவது மாடத்தை இடித்து விட்டனர். எஞ்சிய மூன்று மாடம் 50 அடி உயரம். இதனை சுற்றி மண் பாதுகாப்பு அமைக்க காப்டன் ஒக்சு திட்டமிட்டு உருவாக்க 400 செலவாகும் என்று அதற்க்கு இசைவு வேண்டி 19/04/1859 ல் அறிக்கை அனுப்பினார்
04. அதற்கு இசைவு கிடைத்தும் செயல்படவில்லை. காரணம் ௦1 இயேசு சபையார் இதனை இடித்து விட வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் அனுப்பினர். அதற்கு அவர்கள் அளித்த விளக்கம் 01 கோபுரம் பாதுகாப்பாக இல்லை 02.  பின் உள்ள தொழுகை அறைக்கு வெளிச்சமும் காற்றோட்டமும் இல்லை 03. இந்த நிலத்தை வாங்க வேண்டியுள்ளது 04   கோபுரத்தை இடித்து எடுப்பதால் கிடக்கும் செங்கல் கட்ட இருக்கும் கல்லூரிக்கு பயன்படும். (நூல் நாகப்பட்டினம்)       
ஆகழ்வாராய்வில் கண்டறியப்பட்ட புத்த விகார், புத்த பீடைகை மற்றும் சிலைகள்  
1963-64ஆம் ஆண்டு மேலையூர் என்னும் பகுதியில் பல்லவனீச்சுரம் என்னும் கோவிலுக்கு அருகாமையில் புத்தவிகார் கண்டுபிடிக்கப்பட்டது. பகவன் புத்தரை வழிபடுவதற்கும், பிக்குகள் தங்குவதற்கும் ஏற்ற வகையில் அறைகள் கட்டப்பட்டிருந்தது, இவ்விகாரையின் ஒரு அறையில் ஓர் சிறிய வெண்கல புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது, மற்றோரு அறையில் சலவைக்கல்லால் ஆனா பகவன் புத்தரின் பாத பீடிகை எனப்படும் புத்த பாதமும் கண்டெடுக்கப்பட்டது. இந்த பாத பீடிகை நாகார்ஜூனா கொண்டவை ஒத்து இருக்கிறது
புத்த பீடைகை
கோவை இளஞ்சேரன் - தமிழ் பல்கலைக்கழகப் பதிவு துறை
சுமத்ரா தீவு சிரி விஜய மன்னன் சிரி விசய சூளாமணி வர்மன் நாகையில் வணிகத்தொடர்பு கொண்டிருந்தான். அவன் புத்த விகாரை ஒன்றை எழுப்ப விரும்பினான். இடையில் அவன் புகழும் எய்தவே அவன் மகன் சிரி விசய யோத்துங்க வர்மன் அப்பள்ளியை நிறைவேற்றி அதற்க்கு தம் தந்தை நினைவாக சூளாமணி விகாரை என்று பெயரிட்டான். விகார் கட்டுமான பணிகள் சோழ அரசன் இராஜராஜ I (985-1016) காலத்தில் துவங்கியது. ஆனால் அவரது மகன் இராஜேந்திர I (1012-1044) காலத்தில் நிறைவடைந்தது.   இரண்டு செப்பேடுகள் இங்கு கிடைத்தது, இலெய்டன் செப்பேடு என்றே அழைக்கின்றனர்.  காரணம் இலெய்டன் என்பது அயர்லாந்து நாட்டினுள் உள்ள ஒரு நகரம். நாகப்பட்டினத்தில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு ஆணை மங்கலம் செப்பேடுகளை எடுத்து சென்று இலெய்டனில் வைத்திருந்தனர். பல ஆண்டுகள் அங்கு இருந்ததால் இலெய்டன் செப்பேடு என்று அழைக்கப்பட்டது.
சிறிய செப்பேடு : தமிழ் எழுத்தில் உள்ளது. ஒன்பது அலகு நிலம் கொடையளிக்கப்பட்டதை குறிப்பிடுகிறது 
பெரிய  செப்பேடு : தமிழ் மற்றும் வடமொழியில் உள்ளது. அரசன் ஆனைமங்கலம் என்ற கிராமத்தை உயரமான புத்த விகாருக்கு அளித்ததை குறிப்பிடுகிறது.
சத்திரிய சிகாமணி வளநாட்டின் பட்டினக் கூற்றத்தில்
உலகத்திற்கு திலகம் போன்ற நாகப்பட்டினத்தில் தன்
உயரத்திற்கு பொன் மலையையும் சிறிதாக காட்டி
தன் அழகினால் வியப்படையச்  செய்கின்ற சூளாமணி   விகாரை  
மண்ணிலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட வெண்கல சிலைகள், இஸ்துபா, விளக்கு மற்றும் மணிகள் 350

1910 ஆண்டு நாகப்பட்டினத்தில் பல்வேறு இடங்களில் இருந்து ஒரு சில சிலைகளும் 1926 ஆம் ஆண்டு வெளிப்பாளையம் என்ற இடத்திலிருந்தும் 1934 ஆம் ஆண்டு நாணயக்கார தெரு என்ற இடத்திலிருந்தும் ஏராளமான சிலைகள் தோண்டியெடுக்கப்பட்டது. அதாவது 1856லிருந்து புத்தர், அவலோகித்தர், மைத்ரே, தாராதேவி, ஜம்பாலா, வசுதாரா, ஆனந்தா சிலைகள் மற்றும் இஸ்துபா, விளக்கு மணி ஆகிய பொருட்கள் என மொத்தம் 350 வெண்கலங்கள் மண்ணிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டது. இதில் 70 சிலைகள், 3 இஸ்துபா, 1 விளக்கு 1 மணி என மொத்தம் 75 வெண்கலன்களை மட்டும் சென்னை அருங்காட்சியகத்தில் வைத்து விட்டு மற்ற சிலைகளை இந்தியா முழுவதும் உள்ள அருங்காட்சியகத்திற்கு அனுப்பபட்டுவிட்டது.  புத்தர் சிலையின் ஒளிப்படங்கள் சில கீழ் இணைத்து இருக்கிறேன்.

(*வெளியே பாளையம் - நகருக்கு வெளியே அதாவது பட்டின நகருக்கு வெளியே அமைந்த பாளையம். பாளையம்  என்றால் போர் வீரர்கள் வாழும் இடம். வெளிப்பாளையம்  என்றால் நகருக்கு வெளியே போர் வீரர்கள் வாழும் இடம்)

 நாகபட்டின புத்தர் சிலைகள் சென்னை அருங்காட்சியகத்தில் 


முன்பு மும்பையில் உள்ள இளவரசர் வேல்ஸ் அருங்காட்சியம் என்று அழைக்கப்பட்ட அருங்காட்சியகம் இன்று சத்திரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்கரஆலய அருங்காட்சியம் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள நாகபட்டின புத்தர் சிலையின் ஒளிப்படம்
நாகபட்டின புத்தர் சிலை,
இளவரசர்  வேல்ஸ் அருங்காட்சியகம்  மகாத்மா காந்தி சாலை, மும்பை 

               நாகபட்டின புத்தர் சிலை அருங்கலை அருங்காட்சியகம் (Fine Arts Musuem)
பாஸ்டன் (Boston)   அமெரிக்கா ஐக்கிய நாடுகள் (USA) 

                              நாகபட்டின புத்தர் சிலை ப்ரூக்ளின் அருங்காட்சியகம்
(Brooklyn Museum)  அமெரிக்கா ஐக்கிய நாடுகள் (USA) 
நாகபட்டின புத்தர் சிலை -  நார்டன் சிமோன் அருங்காட்சியகம் (Norton Simon Museum) , கலிபோர்னியா, அமெரிக்கா ஐக்கிய நாடுகள் (USA)
                              நாகபட்டின புத்தர் சிலை - லாஸ் ஏஞ்சல் CCU அருங்காட்சியகம்,
கலிபோர்னியா, அமெரிக்கா ஐக்கிய நாடுகள் (USA)

நாகபட்டின புத்தர் சிலை -  சிகாகோவின் கலைத்துறை (The Art Institute of Chicago)  அமெரிக்கா ஐக்கிய நாடுகள் (USA)   
பதிரி திட்டா 
பதிரி திட்டா என்பது பாலி மொழி சொல். பதிரி என்றல் இலந்தை.  திட்டா என்றால் மேட்டு நிலம். பதிரி திட்டா என்றால் இலந்தை மரங்கள் நிறைந்த மேட்டு நிலம் என்று பொருள்.  இந்த பதிரி திட்டா விகார் அசோகா மன்னனால் நிறுவப்பட்டது. இங்கு தம்ம பாலா தங்கிருந்தார். நாகை வரலாற்றுக்கு கிடைத்த முதல் வரலாற்று தடம் இந்த பதிரி திட்டா. சீன அறிஞர் இந்த விகாரையை தாம் கண்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்த பதிரி திட்டா தமிழகத்தில் முதன் முதலில் தோன்றிய விகார் என்பதால் இதனை ஆதிவிகார் என்று சிறப்பித்து கூறப்பட்டது. கி மு 265-270ல் கட்டப்பட்டிருக்கலாம். கி. மு 3 ஆம் நூற்றாண்டு  (கோவை இளன்சேரன் - தமிழ் பல்கலைக்கழகப் பதிவு துறை)

இன்னும் கண்டறியாப்பட்டதா புத்த விகார்களும் சிலைகளும்  
தமிழ் ஆராய்ச்சி பேரறிஞர் மயிலை சினி வேங்கடசாமி
01.  கி மு மூன்றாம் நூற்றாண்டில் அசோக மன்னனின் உறவினன் மகேந்திரன் இலங்கைக்கு செல்வதற்கு முன் ஏழு புத்த விகார்களை நாகப்பட்டினத்தில் காட்டினார் என்று மணிமேகலை மற்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது. இந்த விகாரையின் தலைவராக இருந்தவர் தான் அறவணடிகள்.

02. கணதாசர் காவிரிப்பூம் பட்டினத்தில் ஒரு பௌத்த விகாரை காட்டினார். இந்த விகாரையில்  ஆச்சாரிய புத்த தத்த மகா தேரர் அபிதம்மவதாரம் மற்றும் மதுராத்த விலாசினீ என்னும் நூலை இயற்றினார்.  
03.நாகப்பட்டினம் நாகநகரம் என்றும் கூறப்படுகிறது. நாகர்கள் வாழ்ந்த இடம். நாகர்கள் முன் முதலில் குடியேறிய மண் தமிழ் மண். கி. பி 5 ஆம் நூற்றாண்டில் நாகமன்னனின் துணையுடன் கசபதேவர் நாகனான விகாரை கட்டினார். 

B காஞ்சீவரம்

காஞ்சீவரத்தின் சிறப்பு

சீன வரலாற்று ஆசிரியர் யுவான் சுவாங்
கி.பி 639 ஆம் ஆண்டில் பல்லவர் காலத்தில் காஞ்சி நகருக்கு பயணம் வந்த சீன அறிஞர் குறிப்பிடுவது காஞ்சி நகரத்தில்நூற்றுக்கணக்கான பௌத்த சங்கங்களும், 10,000 புத்த பிக்குகளும் இருந்தனர். ஸ்தவீரா என்ற புத்த சக்கர போதனைகளைப் படித்துக்கொண்டு இருந்தனர். அசோகரும் மகேந்திரரும் கட்டிய விகாரங்களும் தூபிகளும் இடிந்து கிடந்ததைக்கிறதென்று குறிப்பிடுகிறார்.
முனைவர் G. சேதுராமன் (பௌத்தக் கலை வரலாறு)
தென்னிந்திய வரலாற்றில் காஞ்சீவரம் அளவிற்கு எந்த ஒரு நகரமும் சிறந்த பௌத்த மையமாக திகழவில்லை. இன்றும் உலகமுழுவதும் அறியப்படும் இடமாக காஞ்சீவரம் உள்ளது. புகழ்பெற்ற  நாகார்ஜுனர் மகாயானத்தை காஞ்சியில் அறிமுகப்படுத்தினார்
வரலாற்று ஆசிரியர் இராஜமாணிக்கம்   
பல்லவ மன்னர் சமண சமயம், சைவம் மற்றும் வைணவத்திற்கு ஆதரவு காட்டினார், கோவில்கள் அமைத்தனர் என்பதற்கு சான்றுகள் கிடைக்கிறது ஆனால் அவர்கள் பௌத்தத்தை ஆதரித்தனர் என்பதற்கு சான்றுகள் கிடைப்பது அரிதாக இருக்கிறது. இதனால் பல்லவர் காலத்தில் அரசியல் செல்வாக்கை இழந்துவிட்டது என்றுரைக்கிறார் வரலாற்று ஆசிரியர் இராஜமாணிக்கம் பல்லவ பேரரசர் என்ற நூலில். அவர்களின் கருத்திற்கு மறுப்பு
அறிஞர் டி .ஏ. கோபிநாத் ராவ்:
1915 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில் காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் பல்லவ காலத்து புத்த சிலையை கண்டுபிடித்தார். அச்சிலை 7’ 10” உயரம் (7 அடி 10 அகலம்). கி பி 7ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. இச்சிலை தற்பொழுது சென்னை அரசு அருங்காட்சியில் இருக்கிறது.

தொல்லியல் துறை  இயக்குநர் அறிஞர் திரு Dr D தயாளன் 1990-91 ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் உள்ள குன்றில் (Draupathi Bath) அகழாய்வு மேற்கொண்டபொழுது மூன்று அடி உயரமுள்ள தலையில்லா பல்லவ காலத்து புத்த சிலையை கண்டுபிடித்தார். Dr D தயாளன் அவர்கள் கண்டுபிடித்த சிலையை 21/03/2016 அன்று மகாபலிபுரம் தொல்லியல் துறைக்கு சென்று பார்த்தேன். தொல்லியல் துறை படம் எடுக்க அனுமதிக்கவில்லை

தமிழ் ஆராய்ச்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி
கி பி 720 ஆம் ஆண்டு நரசிம்ம போத்த வர்மன் என்னும் பல்லவ மன்னன் காலத்தில் நாகப்பட்டினத்தில் ஒரு விகார் கட்டப்பட்டது.காஞ்சிவாரத்தில் பல்லாவரம் அடுத்த கணிக்கிலுப்பை என்ற கிராமத்தில் ஒரு புத்தர் சிலையும் தம்ம சக்கரமும் உள்ளது. இங்கிருந்த புத்தர் சிலையை அழித்து அங்கே விநாயர் கோவில் கட்டப்பட்டது. இங்கு கட்டப்பட்ட இருந்த புத்தர் கோவில் பல்லவர் காலத்தை சேர்ந்தது.          
பீகாருக்கு காஞ்சியின்  கொடை 1930ஆம் ஆண்டு கயா மாவட்டத்தில் உள்ள குர்கிஹார் என்ற ஒரு மலை கிராமம் இக்கிராமத்திலிருந்து 226 வெண்கல தொல்பொருள்களும் 5 பிற பொருள்களும் வெளி கொண்டுவந்து உலகறிய செய்யப்பட்டது. அவைகள் புத்தர், அவலோகித்தர், லோகநாதர், தாரா தேவி, மணி, குவி மாடம், பீடம். இவைகள் அனைத்தும் 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. பெரும்பாலும் வெண்கலத்தால் ஆனவை. 231ல் 93ல் நாகரி எழுத்து பொறிக்கப்பட்டு இருந்தது. இந்த குறிப்பில் இருந்து கஞ்சிவரத்தை சேர்ந்த பௌத்த பிக்குகள் கொடையாக அளிக்கப்பட்ட வெண்கல சிலைகளும், பீடங்களும், மணிகளும் தெரிய வந்திருக்கிறது. அதன் விவரங்கள் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் வர்மர் என்னும் பெயருடையவர்கள் பல்லவ அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்றுரைக்கிறார் தமிழ் ஆராய்ச்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி.

#கஞ்சிவரத்தை சேர்ந்த பௌத்த பிக்குகள்நூற்றாண்டுகொடை விவரம்
1அம்ருதவர்மன்11நின்ற நிலையில் உள்ள புத்தர் சிலை
2புத்தவர்மன்10அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை
3தர்மவர்மன்10அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை
4தூதசிம்மன்10நின்ற நிலையில் உள்ள தாரா தேவி சிலை
5பிரபாகரசிம்மன்10அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை மற்றும் நின்ற நிலையில் உள்ள தாரா தேவி சிலை
6மஞ்சுஸ்ரீ வர்மன்11அமர்ந்த நிலையில் உள்ள அவலோகித்தர் சிலை & நின்ற நிலையில் உள்ள அவலோகித்தர் சிலை
7வீரியவர்மன்9அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலைகள் இரண்டு
8புத்தவர்மன்9அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை & மணி
9புத்த ஞானர்10பீடம்
10சுகசுகர்10பீடம்
11விரோசன சிம்ம ஸ்தவிரர்10பீடம்
12நாகேந்திரவர்மன்9அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை
13சந்திரவர்மன்10அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை
14ரகுலவர்மன்10அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை
15வீரவர்மர்9அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை
16அவலோகித சிம்மர்10பீடம்
17புத்தவர்மன் (கந்த குடி3 மணிகள்

பல்லவ மன்னன் புத்தவர்மன் பல்லவ இளவரசன் வண.போதி தருமன் என பல்லவ அரச குடும்பத்தினர் பௌத்தத்தில் இருக்கின்றனர். பௌத்தத்தை மிக கீழ்த்தரமாக இழிவாக எழுதிய மகேந்திர வர்மா பல்லவன் காலத்திலே பௌத்தம் செழித்தோங்கி இருந்தது என்பதை அவரால் மறுக்க முடியவில்லை. காஞ்சிவரத்தில் உள்ள பல்லவ மேடு என்பது பாலி மேடு என்பதன் மருவு. ஆதாரம் இன்றும் மக்கள் பாலி மேடு என்று அழைக்கின்றனர்   
காஞ்சிவரத்தில் அகழாய்வுகள்
01. பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக் கழகம் 
காஞ்சி காமகோடி மடவளாகத்தில் 1962-63ல் அகழ்வாய்வு செய்தபோது கி.பி 2ஆம் நூற்றாண்டை சார்ந்த சாதவாகன மன்னன் 'ருத்ர சதர்கனி ' என்பவரின் காசு கிடைத்துள்ளது. சாதவாகனர் (பௌத்தர்கள்) காசுகள் கண்டறியப்பட்டிருப்பது. 

02. சென்னை பல்கலைக்கழகத்தின் தொல்பொருள்ஆய்வுத்துறை
சென்னை பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆய்வுத்துறையினர் 1969-70 ஆம் ஆண்டுகளில் காமாட்சியம்மன் கோவிலின் அருகிலும், எகாம்பரேஸ்வர் கோயில் அருகிலும், ஞானப்பிரகாசு சுவாமிகள் மாடத்தின் வளாகத்திலும் அகழாய்வு செய்தனர். அத்துறையினரே மீண்டும் 1970-71 ஆம் ஆண்டுகளில் காமாட்சி அம்மன் கோவிலின் அருகில் அகழாய்வு செய்தனர்.

1969-70ஆம் ஆண்டு "புதலதிச" என்ற பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ள சாம்பல் நிறப் பானை ஓடு அகழாய்வில் கண்டெடுத்தனர். இந்த எழுத்துகள் கி.பி ஒன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்தமைபில் காணப்படுகின்றது. "புதலதிச" என்பது ஒரு பௌத்த பிக்குவின் பெயராக இருத்தல் வேண்டும் எனக் கூறப்படுகிறது.

1970-71ஆம் ஆண்டு பௌத்த ஸ்தூபி கட்டிடப்பகுதியை கண்டுபிடித்தனர். இந்த விகார் அசோகா மன்னர் காட்டியது இல்லை கி.பி 2 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டை அரசாண்ட கிள்ளி வளவன் என்னும் சோழன் தம்பி இளங்கிள்ளி காட்டியது என்றும் வரலாற்று அறிஞர்களிடியே இருவித கருத்து உள்ளது. மேலும் இளங்கிள்ளி தருமத வனம் ' என்னும் ஒரு பூந்தோட்டம் அமைத்து ஒரு புத்த பீடிகை அமைத்தார் என்று மணிமேகலையினால் அறியப்படுகிறது. 

காஞ்சியில் காமாட்சிக் கோட்டத்தில் உள்ள அன்ன பூரணியம்மன் சன்னதி முன்னர் மணிமேகலையின் கோவிலாக இருந்ததாகும் என்றும், தருமராசர்   என்ற புத்தருக்கு கட்டிய கோயில் பின் தருமன் கோயிலாயிற்று  என்றும் சிந்தாதேவி, தாரா தேவி ஆகிய பெண் தெய்வங்களின் கோயில்கள் அம்மன் கோயில்களாயின என்றுரைக்கிறார் தமிழ் ஆராட்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி

03. காஞ்சிவரம் ஏனாத்தூர் ஸ்ரீசந்திரசேகரேந்திர விஸ்வ வித்யாலயா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் ராமகிருஷ்ண பிசிபதி தலைமையிலான தொல்லியல் ஆய்வுக்குழு 2008-09 ம் ஆண்டு புத்தகரத்தில் அகழாய்வு மேற்கொண்டது. காஞ்சிவரம் புத்தகரத்தில் அமைந்துள்ள விநாயகர் கோவிலுக்கும் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கும் இடையே உள்ள இடத்தில் அகழாய்வு மேற்கொண்டனர். இங்கு சிலையின் உடைந்த தொடைப்பகுதி கிடைத்தது. இங்குள்ள ஒரு பெருமாள் கோவிலில் ¾ அடி உயர ஒரு புத்தர் சிலை உள்ளது. கட்டவாக்கம்  என்ற இடத்தில் 2001-02 அகழாய்வு செய்த பொழுது பௌத்த கட்டிட அமைப்பு மற்றும் திரிரத்தினம் கிடைத்தது.     

கட்டவாக்கம்  அகழாவில் கிடைத்த பௌத்த கட்டிட அமைப்பு மற்றும் திரிரத்தினம்
விரிவாக படிக்க