வியாழன், செப்டம்பர் 08, 2016

புத்தரா காரல் மார்க்சா ?

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் 

 நூல் தொகுதி 7 

( பகுதி 2 - இயல் 14 - பக்கம் 403 - 434)

பகவன் புத்தரின் தம்மத்திலும் காரல் மார்க்சின் புதிய பொருளாதார கொள்கையிலும் ஆர்வம் கொண்டவர் அறிவர் அண்ணல் அம்பேத்கர். பௌத்தர் மற்றும் பொருளாதார மேதையுமான அறிவர் அண்ணல் அம்பேத்கர் பகவன் புத்தரின் தம்மத்தையும் காரல் மார்க்சின் பொருளாதார கோட்பாட்டையும்  ஒப்பிட்டு அளித்துள்ளார்.

எளிமையை மனதில் கொண்டு சுருக்கமாக கொடுத்துள்ளேன். ஆர்வலர் மற்றும் ஆய்வாளர்கள் அறிவர் அண்ணல் அம்பேத்கரின் நூல் தொகுப்புபை படிப்பது பயனளிக்கும்.

பகவன் புத்தர் பண்டைய காலத்தை சேர்ந்தவர் (கி.மு. 563). காரல் மார்க்ஸ் நவீன காலத்தை சேர்ந்தவர் (கி.பி. 1818). புத்தருக்கும் காரல்  மார்க்ஸ்க்கும் 2381 (563+1818) ஆண்டுகள் கால இடைவெளி உள்ளது. புத்தரின் நோக்கமும் காரல் மார்க்சின் நோக்கமும் பொதுவானதாக இருக்கிறது ஆனால் நோக்கத்தை அடையும் வழிவகைகள் தான் வேறுபாடானதாக .உள்ளது என்றுரைக்கிறார் அறிவர்.  

A) கருத்தொற்றுமைகள்
01. உலகத்தின் தோற்றம்: பகவன் புத்தர் மற்றும் காரல் மார்ஸ் ஆகிய இருவரின் நோக்கம் உலகத்தின் தொடக்கத்தையும் முடிவையும் பற்றி விளக்குவதில்லை. உலகத்தை மகிழ்ச்சிக்குரியதாக மாற்றுவது தான் இருவரின் நோக்கம். கடவுள், ஆத்மா, சொர்க்கம், நரகம் போன்றவற்றை புத்தரோ காரல் மார்க்சோ கொண்டிருக்கவில்லை. 
மேற்கோள்பகவன் புத்தருக்கும் போத்தபாதா என்ற பிராமணருக்கும் இடையே நடந்த உரையாடல். 
மேற்கோள் விளக்கம்: போத்தபாதா என்பவர் பகவன் புத்தரிடம்   கீழ் காணும் வினாக்களை எழுப்புகிறார். உலகம் நிரந்தரமானதா? இல்லையா? உலகம் அளவுக்கு உட்பட்டதா? அளவற்றதா? ஆன்மாவும் உடலும் ஒன்றா? வெவ்வேறானதா? இவ்வினாக்களுக்கு பகவன் புத்தர் கருத்து ஏதும் தெரிவிப்பது இல்லை என்று விடையளித்தார். காரணம் கீழ்கண்ட வினாக்களுக்கு பகவான் புத்தர் விடையளிப்பது இல்லை.
 01) பயன் விளைவிக்காத வினாக்கள்
02) தம்மத்துடன் சம்பந்தபட்டாத வினாக்கள்
03) பற்றின்மை, காமத்தில் இருந்து தூய்மை பெற, அமைதியாய் இருப்பதற்கு, அறிவை பெறுவதற்க்கு, உயர் ஞானத்திற்கு உதவாத வினாக்கள். 

02. துன்பத்திற்கு காரணம்:
தனிஉடமையே உடைமையாளர்கள் உழைப்பாளர்கள் என்ற இரண்டு வர்க்க முரண்பாடுகளுக்கான காரணம் என்றுரைக்கிறார் காரல் மார்க்ஸ். துக்கம் என்பதற்கு சுரண்டல் என்று வைத்தால் பகவன் புத்தர் மற்றும் காரல் மார்ஸ் ஆகிய இருவரின் கோட்பாடுகளுக்கும் ஒன்றே என்றுரைக்கிறார் அறிவர் அண்ணல் அம்பேத்கர்..
மேற்கோள்: நான்கு உயரிய உண்மைகள் 
மேற்கோள் விளக்கம்: பகவன் புத்தரின் அட்டாங்க மார்க்கம் (எண் வகை பாதை) வர்க்க முரண்பாடு இருக்கிறது என்று ஒப்புக்கொள்கிறது. இந்த முரண்பாடு தான் துன்பத்திற்கு காரணம்.
01) துக்கம் உள்ளது
02) துக்கத்திற்கு காரணம் உள்ளது
03) துக்கத்திற்கு நிவாரணம் உள்ளது
04) துக்க நிவாரணத்தை அடைவதற்கு வழி அட்டாங்க மார்க்கம்.
03. தனிஉடமை:
தனிஉடமை ஒரு வர்க்கத்தாருக்கு அதிகாரத்தையும் மற்றொரு வர்க்கத்தாருக்கு துன்பத்தையும் தருகிறது.
மேற்கோள் பகவன் புத்தருக்கும் ஆனந்தருக்கும்  இடையே நடந்த உரையாடல்.  
மேற்கோள் விளக்கம்: பேராசைக்கு காரணம் உடமைதான். உடமைக்கு காரணம் விடாப்பிடி தன்மை. யாருக்கும் எதற்கும் எந்தவிதமான உடமையும் இல்லை என்றால் பேராசை தோன்றாது. 

04. பொது உடமை:
தனிஉடமையை ஒழிப்பதன் மூலம் சுரண்டலை ஒழிப்பது அவசியம்.
மேற்கோள் பிக்கு சங்க விதிகள்.  
மேற்கோள் விளக்கம்: ஒரு பிக்கு கீழ்கண்ட எட்டு பொருட்களை மட்டுமே தனிஉடமையாக வைத்திருக்கலாம். இந்த விதிகள் ரஷ்யாவில் கம்யூனிசத்தில் உள்ளவற்றை விட மிக கடுமையானது. தினசரி உடுப்பதற்கு ஆடைகள் ( 3 ) இடையில் கட்டுவதற்கு பந்தனம் ( 1 ) உணவு ஏற்கும் பாத்திரம் ( 1 ) சவரக்கத்தி ( 1 ) ஊசி ( 1 ) தண்ணீர் வடிகட்டி ( 1 )

B) முரண்பாடுகள்  
01) வன்முறை 
மார்சியம்: பொதுவுடைமையை நிறுவுவதற்கு உள்ள முதல் வழி வன்முறை. சுரண்டலை தடுக்க போராட்டம் மற்றும் கொடுஞ்செயலை ஊக்குவிக்கிறது. இது இரு வர்க்கங்களுக்கு இடையே எப்பொழுதும் வன்முறை தொடர்ந்த வண்ணமாக வைத்திருக்கிறது. குறிக்கோளை அடைவதற்கு பலரை கொன்று இருக்கிறது. .
பௌத்தம்: பகவன் புத்தர் காட்டிய வழி வன்முறையற்றது, அறநெறியுடையது. ஒருவன் தானே மனமுவந்து செல்லும்படி அவனது அறநெறி உணர்வை செம்மைப்படுத்துவது. 
மனிதனின் துன்பத்திற்கு காரணங்கள் இரண்டு 01. தம் சொந்த செயலினால் விளையும் தீமை 02. பிறர் செயலினால் விளையும் விளையும் தீமை. தீமையை தவிர்க்க வழிகளும் இரண்டு 01. தம் சொந்த செயலினால் விளையும் தீமையை தவிர்க்க வழி பஞ்ச சீலம் 02. பிறர் செயலினால் விளையும் தீமையை தவிர்க்க வழி உன்னத எண் வழி பாதை.
எண் வழிபாதையை பின்பற்றுவதற்கு இடையூறாக பத்து தடைகள் உள்ளது. எனவே தினசரி வாழ்க்கையில் கடைப்பிடக்க வேண்டிய ஒழுக்கங்கள். 01. அறியாமையை போக்கிக்கொள்ள அறிவுடையோருடன் பழகி அறிவை வளர்க்க வேண்டும் 02. தவறு செய்ய நாணாவும், நன்மை செய்ய பேணவும் (பழகவும்) வேண்டும் 03. உலக இன்பத்தை துறக்க வேண்டும் 04. பிறர் நன்மைக்காக பயன் எதிர்பார்க்காமல் தானமளித்தல் வேண்டும் 05. எடுத்துக்கொண்ட செயலை முழு திறனுடன் செய்யவேண்டும் 06.வெறுப்பை தணிக்கும் பொறையுடைமையை பின்பற்றவேண்டும் 07. உண்மையை பேசவேண்டும் 09.குறிக்கோளை அடைவதற்கு உறுதி ஏற்கவேண்டும் 10. எல்ல உயிர்களிடத்தும் அன்பு செலுத்தவேண்டும்.
வன்முறையை எதிர்த்த பகவன் புத்தர் நீதிக்கு அவசியமாயிருந்தால் வன்முறையை பயன்படுத்துவதை அவர் அனுமதித்தார்.
மேற்கோள் : புத்தருக்கும் வைசாலி படை தலைவருக்கும் (சிம்ம சேனாதிபதி)  இடையே நிகழ்ந்த உரையாடல். 
மேற்கோள் விளக்கம்: படைத்தலைவர் புத்தரிடம் எழுப்பிய வினா: நீங்கள் அகிம்சையை போதிக்கிறீர்கள். எனவே குற்றம் செய்த ஒருவனுக்கும் தண்டனையில் இருந்து விடுதலை அளித்திட வேண்டுமா? மக்களையும் செல்வங்களையும் காப்பாற்ற போர் செய்யக்கூடாதா? பகவன் புத்தர் அளித்த பதிலுரை, குற்றம் செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும். குற்றமற்றவன் விடுவிக்கப்பட வேண்டும். குற்றம் செய்தவனை தண்டிப்பது நீதியின் தவறு அல்ல.போர் இருக்கலாம் ஆனால் அது சுயநல நோக்கங்களுக்காக இருக்கக்கூடாது. 

02) சர்வாதிகாரம்
மார்சியம்: பொதுவுடைமையை நிறுவுவதற்கு உள்ள இரண்டாவது வழி உழைப்பாளர்களின் சர்வாதிகாரம். இது இரு வர்க்கங்களுக்கு இடையே எப்பொழுதும் சர்வாதிகார ஆட்சி தொடர்ந்த வண்ணமாக வைத்திருக்கிறது. ஒன்று உடமையாளர்களின் சர்வாதிகார ஆட்சி (அ) உழைப்பார்களின் சர்வாதிகார ஆட்சி. 
பௌத்தம்: சர்வாதிகாரத்தை புத்தர் விரும்பவில்லை. அவர் எப்பொழுதும் ஜனநாயகவாதியாக இருந்தார்.  ஆதாரம்   
01. புத்தர் வாழ்ந்த காலத்தில் 14 முடியரசும் 4 குடியரசும் இருந்தது. புத்தர் பிறந்தது கோசல நாட்டில். அது ஒரு குடியரசு நாடு. புத்தர் பரிநிர்வாணம் அடைவதற்கு முன் தங்கியிருந்த வைசாலியும் ஒரு  குடியரசு நாடு. தமது வழக்கப்படி வைசாலியை விட்டு வேறு எங்கேனும் செல்ல முடிவு எடுத்தார். சிறிது தூரம் சென்றபின் வைசாலியை திரும்பி பார்த்து ஆனந்தரிடம் புத்தர் வைசாலியை பார்ப்பாது இது தான் கடைசி முறை என்றார். அந்த குடியரசிடம் அவ்வளவு பிரியம் வைத்து இருந்தார்.
02. ஆரம்பத்தில் புத்தர் உட்பட எல்லா பிக்குகளும் கிழிந்த துணிகளால் ஆனா ஆடைகளை அணிந்தார்கள். மாபெரும் மருத்துவரான ஜீவகன் முழுமையான துணியால் ஆனா ஆடை ஒன்றை புத்தர் ஏற்றுக்கொள்ள செய்தார். புத்தர் உடனே ஆடை பற்றிய விதிகளை மாற்றி எல்லோருக்கும் அது பொருந்துமாறு செய்தார்          
03. புத்தரின் வளர்ப்பு தாயான மகாபிரஜாபதி கோதமி பிக்குணி சங்கத்தில் சேர்ந்து இருந்தார். ஒருமுறை அவர் புத்தருக்கு குளிர் ஏற்பட்டிருப்பதாக  கேள்விப்பட்டார். உடனே அவர் புத்தருக்கு என தலைக்கு கட்டும் துணி ஒன்றை செய்து புத்தரை அணிந்துக்கொள்ள வேண்டினார். ஆனால் அதை புத்தர் ஏற்க மறுத்துவிட்டார். அது அன்பளிப்பாக இருந்தால் அது சங்கம் முழுவதற்கும் அது அன்பளிப்பாக இருக்கவேண்டும். சங்கத்தின்  ஒரு உறுப்பினருக்கு இருக்க கூடாது என்று மறுத்துவிட்டார். 
04. புத்தர் பரிநிர்வாணம் எய்துவதற்கு முன் இரண்டு முறை புத்தருக்கு பின் சங்கத்தை நிர்வகிக்க அதன் தலைவராக ஒருவரை நியமிக்கும் படி கேட்டுக்கொள்ளபட்டார். ஒவ்வொரு முறையும் அவர் மறுத்துவிட்டார். தம்மம் சங்கத்தை வழிநடத்தும் என்று மறுத்துவிட்டார்.    
 03) நின்று நிலைத்து நீண்டு பயனளிப்பது
மார்சியம்: காரல் மார்க்சின் தத்துவத்தின் பயன் குறுகிய காலத்திற்குரியது. ஏனெனில் சர்வாதிகாரம் பலத்தினை பயன்படுத்து கிறது. பலம் தற்காலிகமானது எனவே இது நின்று நிலைத்து நீண்டு பயனளிக்காது. 
காரல் மார்க்சின் தத்தும் பொருளாதார நன்மைகளை மட்டுமே கொண்டது. சமய வளர்ச்சியை கொண்டதாக அது இல்லை. பொருளாதார சமத்துவத்தை ஏற்படுத்த  சகோதரத்துவம்  மற்றும் சுதந்திரம் ஆகிய இரண்டையும் தியாகம் செய்துவிடுகிறது. சர்வாதிகாரத்தில் கீழ்ப்படியும் கடமை மட்டுமே உள்ளது உரிமை ஏதும் இல்லை.   . 
பௌத்தம்: பகவன் புத்தரின் தத்துவத்தின் பயன் நீண்ட காலத்திற்குரியது. புத்தர் சர்வாதிகாரம் இல்லாமலே பிக்கு சங்கத்தில் பொதுஉடமையை நிறுவினார். எந்த  பலத்தையும் பயன்படுத்தாமல், கட்டாயம் இல்லாமல் தாங்களாகவே மனமுவந்து செய்யும் வகையில் மனித மனங்களை மாற்றுவதே புத்தரின் செயல் முறை. சகோதரத்துவம், சுதந்திரம், சமத்துவம். இந்த மூன்றும் சேர்ந்து இருப்பதால் புத்தரின் செயல் முறையே நின்று நிலைத்து நீண்டு பயனளிப்பது.
 இணைப்பு :  அம்பேத்கர் பேசும் எழுத்தும் நூல் தொகுதி 7   

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக