திங்கள், ஜூன் 06, 2016

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் XV கச்சபேஸ்வரர் கோயில்

கச்சபேஸ்வரர்  கோயில் 

அமைவிடம்
ஊர்                            : பெரிய காஞ்சிவரம், நெல்லுகாரத்தெரு,  ராஜவீதி
வட்டம்                    : காஞ்சீவரம் வட்டம்
மாவட்டம்              : காஞ்சீவரம் மாவட்டம்
காஞ்சிவரம் நகர பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கி. மீ தொலைவில் அமைந்துள்ளது கச்சபேஸ்வரர்  கோயில். மிகப் பழமையான (பருமனில் பெருத்து) போதி மரம் ஒன்று இக்கோவிலில் உள்ளது. கச்சபேஸ்வரர்  கோயிலில் புத்தர் மற்றும் போதி சத்துவர்களின் புடைப்பு சிற்பங்கள் & பௌத்த அடையாள சின்னங்கள் அமைந்துள்ள இடங்கள்.
01. முன்கோபுரத்தின் அடித்தள கட்டிடம் 
02. நடராஜர் சந்நிதிக்கு அருகில் உள்ள சதுர் முருகேஸ்வரர் சன்னதி தூண்
01. முன்கோபுரத்தின் அடித்தள கட்டிடத்தில் உள்ள புத்தர் சிலைகள்
சிலையமைப்பு  
இரு புத்தர் சிற்பங்களும் சிந்தனை கையில் அமைந்துள்ளது. அரை அடி உயரம் கொண்டது.   




02. நடராஜர் சந்நிதிக்கு அருகில் உள்ள சதுர் முருகேஸ்வரர் சன்னதி தூண்களில் உள்ள புத்தர் மற்றும் போதி சாத்துவார்களின் புடைப்பு சிற்பங்கள். 
இரு வரிசைகளை (Rows) கொண்ட ஐந்து தூண்கள் என மொத்தம் பத்து தூண்கள் இங்குள்ளது. முதல் வரிசை தூண்களில் 11 சிற்பங்களும் இரண்டாம் வரிசை தூண்களில் 4 சிற்பங்களும் உள்ளது. இந்த தூண்களில் மூன்று பக்கங்களில் சிற்பங்களும், பிற அடையாளங்களும் காணப்படுகின்றது. நான்காவது பக்கம் பொதிகைகளை கொண்டுள்ளது. இச்சிற்பங்கள் அனைத்தும் ஒரு அடி உயரம் கொண்டவை.

முதல் வரிசை தூணில் பதினோரு பௌத்த சிற்பங்கள் உள்ளது  
  • முதல் தூணில் எட்டு பௌத்த சிற்பங்கள்
  • மூன்றாவது தூணில் பௌத்த இரண்டு சிற்பங்கள்
  • நான்காவது தூணில் ஒரு பௌத்த சிற்பம்
இரண்டாம் வரிசை தூண்கள் நான்கு பௌத்த சிற்பங்கள் உள்ளது
  • முதல் தூணில் ஒரு பௌத்த சிற்பம்
  • இரண்டாம் தூணில் ஒரு பௌத்த சிற்பம்
  • மூன்றாவது தூணில் இரண்டு சிற்பங்கள்
முதல் தூண் (8): தூணில் எட்டு பௌத்த சிற்பங்கள் மற்றும் ஒரு தாமரை மலர் அமைந்துள்ளது. தூணின் முன்புறமுள்ள சிற்பங்கள் மூன்று. இச்சிற்பங்கள் அனைத்தும் சிந்தனை கையில் அமைந்துள்ளது தோள்கள் வரை உள்ள தோரணத்தை கொண்டுள்ளது.

தூணின் பின்புறமுள்ள சிற்பங்கள் இரண்டு. தூணின் மேல்புறம் உள்ள சிற்பம் வழங்கும் கையுடன், தூணின் கீழ் பகுதியில் உள்ள சிற்பம் சிந்தனை கையுடன் அமைந்துள்ளது. இவ்விருசிற்பங்களும் தோள்கள் வரை உள்ள தோரணத்தை கொண்டுள்ளது. இந்த இரு சிற்பங்களுக்குமிடையே தாமரை மலர் பொதியப்பட்டுள்ளது.

இடதுபுறமுள்ள சிற்பங்கள் மூன்று. தோள்கள் வரை உள்ள தோரணத்தை கொண்டுள்ள இரண்டு சிற்பங்களும் சிந்தனை கையில் அமைந்துள்ளது. தோரணமின்றி தூணின் மையத்தில் அமைந்திருக்கும் சிற்பம் வழங்கும் கையில் அமைந்துள்ளது.  சிற்பங்களை பார்க்க இந்த தொடர்பு பயனளிக்கும் 

மூன்றாவது தூண் (2) இரண்டு சிற்பங்கள் தூணின் மேற்பகுதியில் காணப்படுகிறது. துணின் முன்புறம் ஒரு சிற்பமும் பின்புறம் ஒரு  சிற்பமும் உள்ளது.
நான்காவது தூண் (1) இடது புறம் மேற்பகுதியில் ஒரு சிற்பம் காணப்படுகிறது.

இரண்டாம் வரிசை தூண்கள் (4):
முதல் மற்றும் இரண்டாவது தூணின் வலது புறம் கீழ்பகுதியில் உள்ள சிற்பங்கள் சிந்தனை கையில் அமைந்துள்ளது.


மூன்றாவது தூண் (2) : தூணின் பின்புறம் மேற்பகுதியில் தியான முத்திரையுடன் ஒரு சிற்பமும் மையப்பகுதியில் நிலத்தை தொடும் முத்திரையுடன் ஒரு சிற்பமும் அமர்ந்துள்ளது. இவ்விரு சிற்பங்களும் சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளது.சிற்பங்களை பார்க்க

கச்சீஸ்வரர் கோயில் பூர்வ புத்தர் கோயில்.  
காஞ்சிபுர கச்சீஸ்வரர் கோயில் பூர்வத்தில் புத்தர் கோயில் என்பதற்கு அறிஞர்கள்  அளிக்கும் ஆதாரங்கள்/ விளக்கங்கள் .

01) ஆராட்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி: 
01. இக்கோயிலின் முன் கோபுரத்தின் அஸ்திவாரக் கல் கட்டடத்தில் சில புத்த உருவங்கள் இப்போதும் இருக்கின்றன. இன்னும் சில முன்பு இருந்த உருவம் தெரியாமலிருக்குமாறு அழிக்கப்பட்டிருக்கின்றன.
02. கோயில் உள்மண்டபத்திலும் சில கல்தூண்களில் புத்த உருவங்கள் இப்போதுமிருக்கின்றன.
03. இக்கோயில் அருகில் உள்ள ஏரிக்கு 'புத்தேரி' என்றும் தெருவிற்கு 'புத்தேரித்தெரு' என்றும் பெயர்கள் ஏற்பட்டு இப்போதும் வழங்கிவருகின்றன. புத்தேரித் தெரு என்னும் பெயர் 'புத்தர் தெரு' என்பதன் மரூஉ. இத்தெரு முற்காலத்தில் புத்தர் தெரு என்று வழங்கப்பட்டு அவ்வாறே விக்கிரபத்திரங்களிலும் எழுதப்பட்டு வந்தன.
02 ) வரலாற்று  ஆராய்சியாளர் Dr.மா . இராசாமாணிக்கனார் 
01. புத்தர் கோவிற் பகுதிகளைக்கொண்டு கச்சபேசர் கோவில் புறச்சுவர் கட்டப்பட்டது.
02. இன்றுள்ள "புத்தேரி"த் தெரு என்பது புத்தர் சேரி என்று இருத்தல் வேண்டும். புத்தேரி தெரு என்றே சோழர் கல்வெட்டுகளில் பயின்று வருதல் இதன் பழமையைக் காட்டுகிறது (பல்லவர் வரலாறு - பக்  327 )
03) தமிழக தொல்பொருள் ஆய்வு துறை, கல்வெட்டு ஆய்வாளர் Dr. பத்மா தெய்வ சுந்தரம் 
01) இக்கோவிலில் வழிபட்டோர் தாராதேவியை வழிபட்ட பௌத்த மதத்துறவியாவர். ஐஞ்சந்திலும்  வழிபட்ட தாராதேவி  கோவில் துர்க்கை கோவிலாக மாறிய போது அத்துர்க்கா தேவியும் ஐஞ்சந்தி துர்க்கா பட்டாராகி என அழைக்கப்பட்டாள்.
02) துர்க்கா பட்டாராகி என்னும் இத்தேவி  தாரா தேவியாகவும், இத்தேவி உள்ள கச்சிஸ்வரர் என்னும் சிவபெருமாளின் பெயர் பௌத்த சமயக் காஸ்யப்பர் ஆகவும் இருத்தல் வேண்டும். இப்போதுள்ள கச்சிஸ்வரர் கோவில் மாற்றப்பட்ட பௌத்த கோவிலாக உருவத்தில் இல்லாவிட்டாலும் கூட பௌத்தத்தின் உள்ளடக்கத்தை கொண்டிருக்கிறது (பக் 64)
04) பௌத்த ஆர்வலர் தி ராஜகோபாலன் : .
இக்கோவிலின் பின் பாதாதிட்டை (மேடு) சிதைந்துள்ளது, இக்கோவில் ஆதியில் புத்தர் கோவிலே. (போதி மாதவர் பக்கம் 163)

வெள்ளி, ஜூன் 03, 2016

தமிழகத்தின் தலைநகரில் புத்தர் சிலைகள் - மயிலாப்பூர்

மைலாப்பூரில் பௌத்தாலயம்


அன்பு பொன்னோவியம் 
ஐயா அன்பு பொன்னோவியம் அவர்கள்  சென்னையில் உள்ள மயிலையில் புத்த விகாரை இருந்தது என்பதற்கு அவர் அளிக்கும் விளக்கங்கள்.
01. புத்த கோஷர் 'விசுதி மக்க' என்ற தம் நூலில் மயூர சத்த பட்டணம் என குறிப்பிட்ள்ளர் .
02. புத்த தத்த தேரர் 'பபஞ்ச சூடாமணி' என்ற நூலை மயிலையில்   இருந்த ஒரு விகாரையில் எழுதியனார்.( உணவில் ஒளிந்திருக்கும் சாதி  - பக்கம் 330)
ஆராய்சி பேரறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் புத்த தத்த தேரர் குறிப்பிடும் மயூரபட்டணம் என்பது மாயவரமாக இருக்கலாம் என்றுரைக்கிறார். அதற்க்கு அவரின் விளக்கம்
01. மயூரபட்டணம் சில பிரதிகளில் மயூரரூபப் பட்டணம் என்றும் எழுதப்பட்டுள்ளது. எனவே  இது மாயவரம் ஆக இருக்கலாம்
02. இவ்வூரில் கி.பி 5 ஆம் நூற்றாண்டில் பௌத்தவிகாரையும் பௌத்தர்களும் இருந்தனர்.
மயூரபட்டணம் என்பது சென்னையில் உள்ள மயிலாப்பூர் என்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மாயவரம் என்றும் பல அறிஞர்களிடம் இருவேறு கருத்துகள் நிலவுகின்றது. உதாரணமாக

K.R.சினிவாசன் கண்காணிப்பாளர், சென்னை தொல்லியல் துறை 
மயிலாப்பூர் கிறிஸ்துவ நூற்றாண்டு முன் பௌத்த முக்கியத்துவம் பெற்ற இடங்களில் ஒன்றாக இருந்ததாக தெரிகிறது.  மயில் ஆர்ப்பு என்ற சொல்லின் மருவு தான் மயிலாப்பூர். அதாவது மயில்கள் ஆரவாரம் செய்யும் இடம் என்று பொருள். புத்த கோஷர் எழுதிய 'விசுதி மக்க' (Way of Purity - தூய்மை வழி) என்ற தம் நூலில் மயூர சத்த பட்டணம் என்ற சொல் பல இடங்களில் காணப்படுகின்றது.
Ayacito sumatina therena bhadanta Buddhamittena pubbe Mayurasuttapattanamahi saddhim vasantena;
Ayacito sumatina therena bhadanta jotipalena Kancipura disu maya pubbe saddhim vasantena;
விசுதி மக்க என்ற பாரதிய வித்யா பவன் பதிப்பு முன்னுரையில் (PP XVII and XVIII)  இந்த வர்ணனைகளில் இருந்து பௌத்த அறிஞர் புத்த மித்திரர் மற்றும் ஜோதி பால மயிலாப்பூர் தங்கினார் என்பது தெளிவாக தெரிகிறது. அவர்கள் அவரது சமகாலத்தவர்கள்

விசுதி மக்க (பாரதிய வித்யா  பவன் பதிப்பு பக் 506) புத்த கோசரின்  சொந்த ஊர் மொரண்டக கேதக (Morandakhetaka) என்றும் அவர் மயூர சத்த பட்டினத்தில் (அ) மயூரரூபா  பட்டினத்தில் சில காலம் வசித்தார் என்றும் கூறுகிறது.இதிலிருந்து ஒரு புத்த மடாலயம் மயிலாப்பூர் நிலவி வந்தது தெளிவாகிறது மொரண்டக கேதக - மயில் முட்டை கிராமம் என்று பொருள் (Story of Buddhisim with special reference to South India பக் 158). 

ஆனால் மதுரையில் உள்ள பிக்கு வண. போதி பாலா (தமிழகத்தில் தற்பொழுது தமிழ் மற்றும் பாலி மொழியில் புலமை பெற்று இருப்பவர்)  அவர்கள் மயிலை சினீ . வேங்கடசாமியின் கருத்தையே  ஏற்கிறார்.

மயிலாப்பூரில் பௌத்த ஆலயம் இருந்ததற்கு  "மயூரபட்டணம்" என்ற சொல்லை தவிர வேறு சான்றுகள் இல்லையா? பண்டித அயோத்திதாசரிடம் 1909 ஆம் ஆண்டு சமரபுரி முதலியார் அவர்கள் சென்னையில் உள்ள மயிலையில் பௌத்த ஆலயம் இருந்ததற்கான ஆதாரம் வேண்டி எழுதியதற்கு மகா பண்டிதர் அளித்த விளக்கங்களும் அவரின் கபாலீஸன் சரித்திர ஆராய்ச்சியும் மயிலாப்பூர் தொன்மையான பௌத்த தளம் என்றுரைக்கிறது.

பண்டித அயோத்திதாசர் 
பண்டித அயோத்திதாசர் சென்னையில் உள்ள மயிலையில் பௌத்த ஆலயம் இருந்தற்க்கு  அவர் அளிக்கும் விளக்கங்கள்.

01. மயிலாப்பூரில் உள்ள தெருக்களும் மடங்களும் பௌத்தர்களின் பெயரால் அழைக்கப்பட்டிருந்தது.
கணிதாதி சகல சாஸ்திர பண்டிதர் மார்க்கலிங்க நாயனார் "சுத்த ஞானம்" என்ற தம் நூலில் குறிப்பிட்டுள்ளார் 
02.மயிலாபூரில் பௌத்தர்கள் குடியிருந்தார்கள்
வள்ளுவர்கள், சாக்கியர்கள் என்ற வம்ச வரிசையோர்கள் விசேசமாக குடியிருந்தார்கள்    - மயிலை குப்புலிங்க நாயனார். 
03. புத்தர் ஆலயம் / புத்தர் சிலை 
கொன்றை ராஜன் என்ற சிற்றரசன் அந்நாட்டு பெயர் விளங்க அல்லமா என்னும் பிரபுவால் ஓர் மடம் கட்டி புத்தர் சிலை நிறுவினார். திரு மயிலை மடத்திற்கு அல்லமா பிரபு மடம் எனவும் குழந்தைவேற் பரதேசி  மடம் எனவும்  பெயர். 
04. பௌத்த பண்டிகை கொண்டாட்டம்  
பௌத்தர்கள் பகவன் புத்தரின் ஞபாக தினங்களை, பண்டு ஈகை, பண்டைய ஈகை, பண்டீகை என்று வழங்கி கொண்டாடி வந்தனர். மயிலாப்பூரில் அல்லமாப்பிரவால்   புத்தர் மடம் கட்டி மூன்று திங்கள்  பௌர்ணமி நாளில் ஆனந்தமாக கொண்டாடிய வந்தார்கள்.
  • பகவன் புத்தர் துறவடைந்த நாள் - மாசி மாத பௌர்ணமி
  • பகவன் புத்தர் மெய் ஞானம் (நிருவாண முற்ற) நாள் - பங்குனி மாத பௌர்ணமி
  • பகவன் புத்தர் இயற்க்கை எய்திய (பரிநிர்வாணமடைந்த) நாள் - மார்கழி மாத பௌர்ணமி
05. பௌத்தர்கள்  பாடிய கரபோலீஸன் பஞ்ச ரத்ன தியான படல் 
வருடந்தோறும் மயிலாபூரில் நடைபெறும் கபாலீஸன் கொண்டாட்டத்தைக் காண மணிவண்ணன் என்னும் அரசன் தனது மனைவி பூம்பாவையுடன் வந்திருந்தான். பூம்பாவை அங்கிருந்த சோலையில்  உலாவும் பொழுது பாம்பு கடித்து இறந்து விடுகிறாள். இதை வள்ளுவர்கள் துக்கங்கொண்டாடினார்கள். இதனை அவ்வருட கபாலீஸன் பாடலுடன் பாடி வைத்தார்கள். (சாக்கியர்கள் பாடிய கர போலீஸன் பஞ்ச ரத்ன தியான படலை இணைப்பில் பார்க்கவும்).
06. மயிலையை  தவிர வேறு எந்த சிவா ஆலயத்திலும் சிவனுக்கு பிச்சாண்டி வேட பெரிய விழா கொண்டாடுவது இல்லை.
சிவனின் பிட்ச பாத்திரத்திற்கு பிரம கபாலம் என்று பெயர். கபாலம் என்பது மண்டையோடு.   மண்டையோடு எப்படி உணவு ஏற்கும் பாத்திரமாகும்?  
இந்த கபாலத்தை எப்படி பெற்றார்?  சிவனுக்கு ஐந்து தலைகள் இருந்தது. அதைப்போல பிரமனுக்கும் ஐந்து தலைகள் இருந்தது. இதனால் பார்வதிக்கு சிவனென்றும், பிரம்மனென்றும் பல நாளாக தெரியாமல் இருந்தது. ஒருநாள் இதை பார்வதி சிவனிடம் உரைத்தாள். இதனால் சிவன் பிரமனின் ஐந்து தலைகளில் ஒரு தலையை கிள்ளி எடுத்து விட்டார். அத்தலை சிவன் கையில் ஒட்டிக்கொண்டது.  எனவே சிவன் கையில் இருக்கும் பாத்திரத்திற்கு (கபாலம் -மண்டையோடு) பிரம கபாலம் என்று பெயர் வந்தது.  இந்த கபாலம் கையில் ஒட்டிக்கொள்ளும் முன் எவ்வாறு உணவு ஏற்றார்?
சித்தார்த்தர் துறவு ஏற்று கர பாத்திரம் கொண்டு உணவு ஏற்றதை, திரித்து  சிவனுக்கு ஏற்றப்பட்டுள்ளது. சதுர் என்பது சது எனவும், கர்ம்மா என்பது கம்மா எனவும், கர்ப்பம் என்பது கப்பம் எனவும் ரகரம் மறைந்து வரும்.   ஆனால் கர, கரம் என்ற சொற்கள் தமிழில் க என வர வேண்டும். அது கை என்று வழங்கப்படுகிறது. கர + போல் = கபோல், கைபோல், கரபோலம்   என்னப்படும். 
மயிலை கபோலீஸன் விழாவை தவிர வேறு எந்த சிவா ஆலயத்திலும் சிவனுக்கு பிச்சாண்டி வேட பெரிய விழா கொண்டாடுவது இல்லை என்பதில் இருந்து திரித்து ஏற்றப்பட்டதை அறிந்துகொள்ளலாம்.   (க .அயோத்தி தாச பண்டிதர் சிந்தனைகள் -- தொகுதி ஒன்று -தலித் சாகித்ய அகாடமி முதல் பதிப்பு - கபாலீஸன்  சரித்திர ஆராய்ச்சி - பக் 85-106) 
தமிழக தொல்லியல் துறை கி.பி 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இரண்டு தலையில்லாத புத்தர் சிலைகளை மயிலாப்பூரில் 1972 ஆம் ஆண்டு கண்டுபிடித்தனர். அச்சிலைகள் தலையில்லாமல் இருப்பதால் சென்னை அருங்காட்சி காட்சி கூடத்தில் பார்வைக்கு வைக்காமல், பாதுகாப்பு கிடங்கு அருகில் வைத்து இருக்கின்றனர்.


சிலையமைப்பு
கை சிந்தனை கை கால் செம்பாதி தாமரை அமர்வு  சீவர ஆடை இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டு இருக்கிறது சிலை உயரம் 3  & 3 1/2 அடி உயரம் நூற்றாண்டு கி.பி 10 நூற்றாண்டு. 

இணைப்புகள் 
01. புத்த கோஷர் மற்றும் புத்த தத்த தேரர் பற்றி அறிய - ஆராய்சி பேரறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் பௌத்தமும் தமிழும் தமிழ்நாட்டுப் பௌத்தப் பெரியார்

02. க .அயோத்தி தாச பண்டிதர் சிந்தனைகள் -- தொகுதி ஒன்று தலித் சாகித்ய அகாடமி முதல் பதிப்பு - கபாலீஸ்ன் சரித்திர ஆராய்ச்சி

03. க .அயோத்தி தாச பண்டிதர் சிந்தனைகள் -- தொகுதி இரண்டு - மைலாப்பூரில் பௌத்தாலயம் - பக்கம் 102 முதல் 104. மைலாப்பூரில் பௌத்தாலயம்