போதிசத்துவரின் கடைசி உணவு
போதிசத்துவர் என்பவர் புத்தர் ஆகமுனையும் ஒருவர். அந்நிலையை அடைவதற்கு முந்திய நிலை. இளவரசர் சித்தார்த்தா தமது 29 வயதில் துன்பத்திற்கான காரணமும் அவற்றை நீக்கும் வழியையும் கண்டறிய துறவு பூண்டார். அப்பொழுது சித்தார்த்தா இரு வகையான சமணத்துறவிகள் இருந்ததை அறிந்தார்.
01 தியான (மனக்குவிப்பு) பயிற்சி செய்பவர்கள் ஒரு வகையினர்
02 உடலை வருத்தி பயிற்சி செய்பவர்கள் மாற்றோ வகையினர்.
வைசாலில் தியான மார்கத்தில் புகழ்பெற்று விளங்கியவர்களிடம் சென்று முழு திறன் எய்தினார்.
01 . ஆராதகலாம் என்பவரிடம் ஏழு தியான நிலைகள்
02 . உத்தக இராமபுத்ரர் என்பவரிடம் எட்டாவது தியான நிலை
இத்தியானத்தினால் துன்பத்திற்கான காரணமும் அவற்றை நீக்கும் வழியையும் அறியமுடியவில்லை என்பதால் இத்தியான முறையை விட்டு விட்டார்.
பின்னர் உடலை வருத்திகொள்வதின் மூலம் மனத்தில் உள்ள அழுக்குகளை அகற்றிட முடியும் என்ற நம்பிக்கையை வைத்திருந்தவர்களில் சிறந்த விளங்கியவர்களிடம் பயிற்சிபெற உருவேலத்தில் - காயாவில் உள்ள நிரஞ்சனை ஆற்றங்கரைக்கு சென்றார். 01. கொண்டண்ண, 02. பத்திய, 03.வாப்பா, 04, மகா நாமா, 05. அச்சாசி ஆகிய 5வரிடம் ஆறு வருடங்கள் வரை உடலை வருத்தி கொள்ளும் பயிற்சியை மேற்கொண்டார்.
ஒவ்வொரு நாளும் ஒரு கையளவு உணவு, சில சமயம் இருநாட்களுக்கு ஒரு முறை, எழு நாட்களுக்கு ஒரு முறை, 15நாட்களுக்கு ஒரு முறை என்ற வகையில் கடுமையான உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்றினார். குளிர்மிக்க மாதத்தின் பகலை எல்லாம் புதர்களுக்குள்ளும் இரவை எல்லாம் வெட்ட வெளியிழும், கோடைகாலத்தில் பகலை எல்லாம் சுட்டரிக்கும் சூரியனுக்கு நேர்கீழும், இரவை எல்லாம் அடர்ந்த புதர்களுக்குள்ளும், எலும்புகளை தலையாணையாய்க் கொண்டு இடுகாடுகளில் கூடப்படுத்தார். தன் வயிற்றை தொட்டு உணர எண்ணினால் அவர் தொட்டது முதுகெலும்பாய் இருந்தது. அவர் முதுகெலும்பைத் தொட்டு உணர எண்ணினால் வயிற்றைத்தான் அவரால் தொட முடிந்தது. அவ்வளவு தூரம் அவர் வயிறு முதுகெலும்போடு ஒட்டி இருந்தது. இதன் காரணமாய் அவர் எழுந்து நடப்பது கூட கடினமாகி விட்டது. மேலே அவர் எழுந்து கொள்ள முயற்சி செய்தால் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுவார்.
உடல் செயல்படுவதோ செயல்படாமல் இருப்பதோ மனதின் அதிகாரத்தின்படி தான். எனவே எண்ணங்களை கட்டுப்படுத்துவது மட்டுமே பொருத்தமானது என்பதால் கடும் விரத முயற்சியை கைவிட்டார். சோனானி என்பவரின் மகளான சுஜாதாவிற்கு அக்காட்டு பகுதியில் உள்ள அரச மரத்தின் தேவதையிடம் பெரும் நம்பிக்கை இருந்தது. இந்த தேவதையின் ஆசியால் தான் தமக்கு திருமணம் நிகழ்ந்தது யசன் என்னும் மகன் பிறந்தான் என்று நம்பிக்கை கொண்டு இருந்தாள். அத்தேவதைக்கு நன்றி செலுத்துவதற்கு ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சேனா கிராமத்திற்கு வந்து அந்த அரச மர தேவதைக்கு மரியாதை செலுத்துவதுண்டு.
இம்முறை மிகவும் சுவையான பாயாசம் செய்து இருந்தாள். அரச மரத்தின் பகுதியை சுத்தம் செய்வதற்கு சுஜாதா தன் பணிப்பெண் புன்னாவை அனுப்பி வைத்தாள். அங்கே சென்ற பணிப்பெண் சித்தார்த்தர் அரச மரத்தடியில் தியான நிலையில் அமர்ந்து இருப்பதை கண்டாள். அவருடைய பளபளக்கும் முகத்தோற்றத்தையும் வசிகரிக்கும் ஆளுமையையும் கண்ட அந்த பெண் பரவசத்துடன் நின்று விட்டாள். மரதேவதையே உருவம் எடுத்து வந்திருப்பதாக ஒரு பிரம்மை ஏற்பட்டது அந்த பணிப்பெண்ணுக்கு. அவள் மகிழ்வோடு இந்த மங்கலமான செய்தியை சுஜாதாவிடம் கூறினாள். இதை கேட்டதும் பரவசம் அடைந்து தங்க பாத்திரத்தில் பாயசத்தை நிரப்பிகொண்டு சென்றாள். அவள் சித்தார்த்தரை பார்த்த உடனே தவம் மேற்கொள்ள வந்த துறவி என்று அவள் புரிந்து கொண்டாள். இளம் தியானியான சித்தார்தருக்கு பாயசம் படைத்து "தங்கள் தவம் முழுமை பெறட்டும்" என்று அவரை ஆசிர்வதித்தாள்.
போதிசத்துவரின் கடைசி உணவு இதுவாகவே இருந்தது. அடுத்த இரவு அவருக்கு சம்மா சம்போதி அதாவது பூரண ஞானத்தை அடைய வேண்டி இருந்தது. அதனால் தான் இந்த உணவு தானத்தை மிகுந்த மகத்துவம் வாய்ந்ததாக கருதுகின்றனர். சித்தார்த்தர் தம்முடைய 35 வயதில் புத்தர் ஆனார்.
புத்தரின் கடைசி உணவு
புத்தர் தொடர்ந்து 45 ஆண்டுகள் தம்மத்தை போதித்து வந்தார். போதிசத்துவற்கு உடலை வருத்தி கொள்ளும் பயிற்சி அளித்த அந்த 5வரே பகவன் புத்தரின் முதல் சீடர்கள் (பிக்குகள்) ஆவர். தமது 80வது வயதில் புத்தர் வைசாலி என்னும் இராசியத்தை அடுத்த ஓர் ஊரில் இருக்கையில் புத்தருக்கு உடல் நலக்கேடு ஏற்ப்பட்டது. இனி நாம் பிழைக்க மாட்டோம் என்று உணர்ந்து ஆனந்தரிடம் மற்ற பிக்குகளையும் வரவழைக்கும் படி செய்து தம் கருத்தை தெரிவித்தார். பின்னர் புத்தர் வைசாலியை விட்டு புறப்பட்டு பாவா என்னும் இடத்திற்கு சென்றார்.
உலோக வேலை செய்து கொண்டிருந்த சுந்தன் புத்தரையும் சங்கத்தினரையும் தன் வீட்டில் அன்று பகல் உணவருந்தி செல்ல வேண்டும் என்று மிகவும் வேண்டிக்கொண்டான். சுந்தனின் விருப்பத்திற்கு இணங்கி புத்தரும் பிக்குகளும் அன்று பகல் சுந்தனின் விட்டில் உணவு எடுத்துக் கொள்ள சென்றனர். புத்தர் சுந்தானிடம் சுகரமத்தவா (Sukaramaddava) என்ற உணவை தமக்கு மட்டும் பரிமாறும் படியும், பிக்குகளுக்கு வேறு உணவுவை பரிமாறும் படியும் கேட்டுக்கொண்டார். உணவுண்டு முடித்தபின் உயர்வெய்திய புத்தர் சுந்தானிடம் சுகரமத்தவா மீதம் ஏதும் இருந்தால் அவற்றை மண்ணில் புதைக்கும் படி கேட்டுக்கொண்டார்.பிறகு புத்தர் சுந்தாவிற்கு சமயம் பற்றி பேருரை நல்கினார்.
சுந்தாவால் அளிக்கப்பட உணவு புத்தருக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அவர் உடல் நலம் கேட்டுப்போயிற்று. சீதபேதியால் அவதியுற்றார். கடுமையான தாங்க முடியாத துன்பத்திற்குள்ளானார். இறக்குமளவிற்கு அவர் உடல் நலம் கேடுற்றது. பின்னர் குசினரா என்னும் பட்டினத்தை நோக்கி சென்றனர். புத்தருக்கு தளர்ச்சியும், இளைப்பும் அதிகமாகி கொண்டே வந்தது. அதனால் அடிக்கடி இளைப்பாறும் பொருட்டு மரங்களின் அடியில் வீற்றிருந்து பின்னர் எழுந்து மெதுவாக நடக்கத் தொடங்கினார். அவர் இவ்விதம் சென்றுகொண்டிருக்கையில் அவர்க்கு நீர் வேட்கை ஏற்ப்பட்டது. புத்தர் ஆனந்தரிடம் தமக்கு குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டார். சற்று நேரத்திற்கு முன்தான் சரக்குகளை ஏற்றிக்கொண்டு ஒரு கூட்டத்தார் சென்றதால் அருகில் இருக்கும் சிறிய குளத்தில் உள்ள தண்ணீர் கலக்கப்பட்டிருக்கும் என்று எண்ணி ஆனந்தர் உடனே சென்று தண்ணீர் கொண்டு வரவில்லை. ஆனால் புத்தர் மேன் மேலும் தண்ணீர் கேட்டுக்கொண்டிருந்தார். அதனால் ஆனந்தர் அக்குளத்திற்கு சென்று நீர் தெளிந்திருப்பதை கண்டு மகிழ்ந்தார். தண்ணீர் கொணர்ந்து புத்தருக்கு கொடுத்தார். புத்தர் அந்நீரை பருகி களைப்புத் தீர்ந்தார். பின்னர் புத்தரும் பிக்குகளும் மெல்ல மெல்ல நடந்து சென்று குசினராவை அடைந்தார்கள்.
புத்தர் இந்த நிகழ்ச்சிக்கு முன்பு 3 மாத காலம் கடுமையான நோய்வாய்ப்பட்டு இருந்தார். அதனால் அவருடைய உடலில் வன்மை இல்லை சுந்தன் கொடுத்த உணவு அவருடைய பரிநிர்வாணத்திர்க்கு (இறத்தல்) நிமித்தமாயிற்று. ஆதலால் இதற்காக மக்கள் சுந்தன் என்ற கொல்லனை வீணாக பழிக்கலாகாது என்று புத்தர் கருதினார்.
பரிநிர்வாணத்திர்க்கு (இறப்பதற்கு) முன்பு ஆனந்தரிடம் புத்தர் கூறினார். சுந்தன் என்ற கொல்லனிடம் யாராவது, சுந்தா புத்தர் நீ கொடுத்த உணவை ஏற்று பரிநிர்வாணம் எய்தினார். இது உனக்கு பெருந்தீமை என்று கூறி மனத்துயரை உண்டாக்கினால் நீங்கள் அவனுடைய துயரை போக்குங்கள். சுந்தா உன் உணவை உண்டு புத்தர் பரிநிர்வாணம் எய்தியதனால் உன் தானம் உண்மையில் பயனுடையது. மற்ற தானத்தை விட புத்தருக்கு கிடைத்த இரண்டு தானங்கள் மிகப் பயனும் பெருமையும் வாய்ந்தவை என்று அவரே சொல்ல நாங்கள் கேட்டிருக்கிறோம் என்று புத்தர் கூறினார் .
~*~ ~*~ சுகரமத்தவா என்பதின் பொருள் திட்டவட்டமாக கூற முடியாமல் பலர் பல விதமாக குழப்பமான கருத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.சுகரமத்தவா என்பது பூலால் உணவு என்றும் காளான் என்றும் பூண்டு மற்றும் செடிகள் போன்றவற்றால் ஆக்கப்பட்டது என்றும் கருத்துக்கள் நிலவுகின்றன. அகிம்சையை பேர் அறமாக கருதும் புத்தரும் அவர் கொள்கையை பின்பற்றுபவர்களும் இப்படி புலால் உண்டு ஒழுகுவது முரண்பாடாக உள்ளது. புத்தர் புலால் உண்டு இருக்கிறார் என்பதற்கு அங்குத்தரநிகாயத்தில் பஞ்சக நிபாதத்தில் சான்று கிடைக்கிறது.
நமக்காக உயிரைக் கொன்றதை நாம் பார்த்தாலோ, கேட்டாலோ, அப்படி சந்தேகம் உண்டாலோ அந்த உணவு விலக்கதக்கது என்றார் புத்தர். ஆகமந்தர் என்னும் பிராமணர், மீனையும் இறைச்சியையும் உண்ணுவதை தடை செய்யவில்லை என்பதை கேட்டு அதை உறுதி செய்துக்கொள்ள விரும்பி புத்தர் தங்கியிருந்த ஷராவஸ்தியில் சென்று கூறினார். கம்பு, அவரை, பட்டாணி, உண்ணத்தக்க இலைகள், கிழங்குகள், பழங்கள் ஆகியவற்றை நல்வழியில் பெற்று உண்ணும் நன்னெறியாளர் மகழ்ச்சிக்காக பொய் உரைப்பதிலை.
புத்தர் பதிலுரைத்தார்: தீயச் செயல்களே கவனத்துக்கு உரியது உணவன்று
உயிரெடுத்தல், அடித்தல், வெட்டுதல், அடக்குதல், பொய்கூறல், வஞ்சித்தல், ஏமாற்றுதல், தவறான காம ஒழுக்கம் இவையே தீமைகள். இறைச்சி உண்பதல்ல.
பேராசையாலோ, விரதத்தாலோ, உயிர்களைத் தாக்குபவர், தீமையிலே குறியாய் இருப்பவர் இவர்களே தீயவர். இறைச்சி உண்பதல்ல.
இறைச்சியும், மீனும் உண்பதில் இருந்து தவிர்த்தல் நிர்வாணமாய் இருத்தல் குடுமி வைத்தல், மழித்தல் உரோம உடை உடுத்தல் யாகத் தீ வளர்த்தல் எதிர்கால பேரின்பத்தை வங்கப் போதிய வழிமுறைகள் இவைகள் அன்று தன்னை வருத்தலும் வேள்வித்தீயில் தானப் பொருள் இடுதலும், சடங்குகளும் மனிதனை தூய்மை படுத்தி விடாது.
உங்கள் புலன்களை அடக்குங்கள் சக்தியை ஆளுங்கள் உண்மையை கண்டறியுங்கள் அனைத்துக் கட்டுகளையும் விட்ட தீமையை வென்ற துறவி தான் கண்பவற்றாலும் கேட்டவற்றாலும் களங்கப்படுவதில்லை இதைக்கேட்ட பிராமணர் தன்னை பிக்குவாக ஏற்றுக்கொள்ள வேண்டினார்
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக