புத்தவேடு
புத்தவேடு கிராமம், இரண்டாம் கட்டளை ஊராட்சி
குன்றத்தூர் ஓன்றியம், காஞ்சிபுரம் மாவட்டம்.
சென்னைலிருந்து 20 கி. மீ தொலைவில் குன்றத்தூர்
அருகில் (அ) போரூரில் இருந்து குன்றத்தூர் செல்லும் சாலையின் இடது புறத்தில் அமைந்துள்ளது புத்தவேடு கிராமம்.
மண்ணை உழும்போது கிடைத்த 3 அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்ட சோழர் காலத்தினுடைய புத்தர் சிலையை 11 தேதி மே மாதம் 2003ல் சிலை திறந்து தொடக்கி வைக்கப்பட்டது.
இவ்வூரில் கிடைத்த தமிழ் கல்வெட்டு முதலாம் கோனேரின் மெய்கண்ட சுந்தர பாண்டிய தேவர் (கி.பி 1251- 64 ) காலத்தில் இந்த கிராமம் கொடையாக வழங்கப்பட்டது எனவும். புத்தவேடு கிராமத்தில் மூன்று புத்தர் திருமேனிகள் நிறுவப்பட்டதாகவும் மற்றும் போதி மரங்கள் நிரம்ப இருந்தது எனவும் மாற்றோருச் செய்தி கூறுகிறது.
பண்டைகாலத்தில் பௌத்த கோட்டையாக விளங்கியது காஞ்சிபுரம். காஞ்சிபுரம் என்பது சீவரம் என்பதின் மருவு. சீவரம் எனபது புத்தரும் புத்தரின் சங்கத்தினரும் (பிக்குகள்) அணியும் ஆடை.
அறிஞர்கள்
01.
யுவாங் சுவாங் தனது 20 ஆவது வயதில் ஒரு முழுமையான புத்த துறவி ஆனார். அக்காலத்தில் சீனாவில் இருந்த பௌத்த நூல்களில் இருந்த பெரும் தொகையான முரண்பாடுகள், அவரை இந்தியாவுக்குச் சென்று, புத்த சமயத்தின் பிறப்பிடத்திலேயே கல்வி கற்கத் தூண்டின. புத்தர் பிறந்த பூமியான இந்தியாவிற்கு கி.பி 629-ல் வந்தார்.
- காஷ்மீரத்தில் கி.பி 632 வரையிலும்
- கன்னோசியில் கி.பி 636 வரையிலும்
- நாலந்தாவில் கி.பி 637 வரையிலும்
- ஆந்திராவில் கி.பி 639 வரையிலும்
- காஞ்சியில் கி.பி 640-ல் வரையிலும்
- மஹாராஷ்ட்ராவில் கி.பி 641 வரையிலும்
- மீண்டும் நாலந்தாவில் கி.பி 642 முதல் 643 வரையிலும் ஹர்ஷருடனும் இருந்தார்.
கி.பி 640 இல் காஞ்சிபுரத்திற்கு வந்த யுவாங் சுவாங்
- கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அரசாண்ட அசோக சக்கரவர்த்தியினால் கட்டப்பட்ட 100 அடி உயரம் கொண்ட ஒரு பௌத்த தூபியும்.
- 100 பௌத்தப்பள்ளிகளும் 10,000 பிக்குகளும் இருந்ததாகக் கூறுகிறார்.
- இலங்கையிலிருந்து 300 பௌத்த பிக்குகள் யோக தத்துவத்தை கற்றுக்கொள்ள வந்து இருந்தார்கள் என்றும் கூறுகிறார்.
02.
நாகர்ஜுனர் மகாயானத்தை காஞ்சியில் அறிமுகப்படுத்தினார். இவர் பல தென்னிந்திய மன்னர்களையும் ஏராளமான பிராமணர்களையும் பௌத்ததிற்கு மாற்றினார்.
03.
தின்னகர் யோகம் பற்றிய தத்துவத்தை உருவாக்கினார். இத்ததுவத்தை மணிமேகலையில் கூறப்படும் அறவணடிகள் பின்பற்றினார்.இவர் காஞ்சிபூரத்திற்குத் தெற்கில் இருந்த சிம்ம வக்த்ரம் என்னும் ஊரில் பிறந்தவர். இவருக்கும் இவருடைய குருவுக்கும் கொள்கை முரண்பாடு ஏற்பட்டு, குருவைவிட்டுப் பிரிந்து, காஞ்சியிலிருந்து வடநாட்டிற்குச் சென்றார். அங்கே சிறந்து விளங்கிய வசுபந்து என்பவரிடம் மகாயான பௌத்த நூல்களைக் கற்றுத் தேர்ச்சியடைந்தார். பின்னர், நாளந்தாப் பல்கலைக்கழகஞ் சென்று அங்கும் பல நூல்களைக் கற்றார். பின்னர் நாளாந்த பல்கலைக்கழகத்தில் சிறந்த தத்துவ ஞானியாக விளங்கினார்.
a. வடமொழியில் இயற்றிய தர்க்க நூல்கள்
- நியாயப் பிரவேசம்
- நியாயத்துவாரம்
b. இவரது சிறந்த மாணவர்கள்
- சங்கர சுவாமி
- ஆசாரிய தரும பாலர் என்பவர்கள்.
04.
தர்மபாலர் (கி.பி. 528-560) (தர்மபாலாவின் ஆசிரியர் தின்னகர்) நாளந்தாவில் மாணவராக சேர்ந்து நாளந்தா பல்கலைக் கழகத்தின் தலைமைப் பேராசிரியராக அமர்ந்தார். இவர் ஒரு சிறந்த தர்க்க வாதி. இலக்கான நூலில் வல்லவர். காஞ்சியில் பிறந்தவர்.
05.
அநுருத்தர் கி.பி 12ம் நூற்றாண்டு- காஞ்சியில் பிறந்தவர். அபிதம்மாத்த சங்கிரகம் நூல்களை இயற்றியவர். இவர் காஞ்சியில் இருந்த மூல சோம விகாரையில் இருந்தவர்.
06.
அறவண அடிகள் கி.பி 2ம் நூற்றாண்டு- காவிரிப்பூம் பட்டினத்தில் பௌத்தப் பள்ளியின் தலைவராக இருந்தவர். பிற்காலத்தில் காஞ்சிபுரத்தில் வந்து தங்கிப் பௌத்தத்தைப் போதித்து வந்தார்.
a. இன்றைக்கும், காஞ்சிபுரத்தில் அறப்பணஞ்சேரி என்னும் ஒரு தெரு உண்டு. அது 'அறவணஞ்சேரி' என்பதன் மரூஉ. அறவண அடிகள் தங்கியிருந்த சேரி (சேரி = தெரு) ஆதலின், அத் தெரு இப்பெயர் பெற்றது. இப்போது அப்பெயர் அறப்பெருஞ்செல்வி தெரு எனமாற்றப்பட்டிருக்கிறது.
b. அன்றியும், 'புத்தேரித் தெரு' என்னும் பெயருடன் ஒரு தெரு காஞ்சிபுரத்தில் இருக்கிறது. அது 'புத்தர் தெரு' என்பதன் மரூஉ. மாதவி மகள் மணிமேகலை பௌத்த தருமங் கேட்டுத் துறவு பூண்டபின் காஞ்சிபுரத்திலே கடைநாள் வரையில் இருந்ததாக மணிமேகலை கூறுகின்றது.
07.
புத்தகோஷ ஆசாரியர், கி.பி. 5ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவர். திரிபிடகநூல்களுக்கு உரைகளை எழுதியவர்.
a. புத்தகோஷர் காஞ்சியில் இருந்த போது அவருக்கு அண்டாத்தகதா என்னும் நூல் கிடைத்ததாகவும், அந்நூல் தாம் திரிபிடகங்களுக்கு உரை எழுதுவதற்குத் துணையாக இருந்தது என்றும் சாமந்தபாசாதிகா என்னும் உரையில் இவர் கூறுகிறார்.
b. தமது நண்பர்களான சுமதி, ஜோதிபாலர் என்னும் பௌத்த பிக்குகளுடன் காஞ்சிபுரத்தில் வசித்திருந்தார். தமது நண்பர்களின் வேண்டுகோளின்படி, இலங்கைக்குச் சென்றார் என்று தமது மனோரதபூரணீ என்னும் உரையில் குறிப்பிடுகிறார்.
08. இவர்கள் அன்றியும்,காஞ்சிபுரத்தில், கி.பி 9முதல் 11ஆவது நூற்றாண்டு வரையில் இருந்த சில பௌத்தப் பெரியார்கள்.
o அம்ருதவர்மன்
o புத்தவர்மன்
o தர்மவர்மன்
o தூதசிம்மன்
o பிரபாகரசிம்மன்
o மஞ்சுஸ்ரீ
o வீரியவர்மன்
o புத்தவர்மன்,
o புத்த ஞானர்
o சுகசுகர்
o விரோசன சிம்ம ஸ்தவிரர்
o ரகுலவர்மர்
o சந்திரவர்மர்
o நாகேந்திரவர்மர்
o வீரவர்மர்
o அவலோகித சிம்மர்
பாடலிபுரத்தில் உள்ள பொருட்காட்சிச் சாலையில் வைக்கப்பட்டுள்ள இந்த பௌத்த உருவங்கள், கயா ஜில்லாவில் உள்ள குர்கிஹார் என்னும் இடத்தில் இருந்து கிடைத்தன. இங்கிருந்து கிடைத்த பௌத்த உருவங்களில் 17 உருவங்கள் காஞ்சிபுரத்திலிருந்த பௌத்தப் பெரியவர்களால் அளிக்கப்பட்டவை. (Ninety Three Inscriptions on the Kurkihar bronzes. Patna Museum. by A. Banerji Sastri. The journal of the Bihar andOrissa Research Society Vol. xxvi. 1940 ).
09.
நாதகுத்தனார் குண்டலகேசியின் ஆசிரியர்- கி.பி 4ஆம் நூற்றாண்டு
10.
போதி தர்ம கி.பி 6ஆம் நூற்றாண்டு -இவர் காஞ்சிபுரத்தை அரசாண்ட ஓர் பல்லவ அரசனுடைய குமாரர். 'தியான மார்க்கம்' என்னும் பௌத்த மதப்பிரிவைச் சேர்ந்தவர். சீன தேசம் சென்று தியான மார்க்கத்தைப் போதித்தார். இவரது தியான மார்க்கத்திற்கு ஜப்பானியர் ஸென் (Zen) மதம் என்றும், சீனர் சான் (Ch'an) மதம் என்றும் பெயர் கூறுவர். ஜப்பான் தேசத்திலும் சீன தேசத்திலும் இவருக்குக் கோவில்கள் உண்டு. இந்தக் கோயில்களில் இரவும் பகலும் எண்ணெய் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன
11.
மணிமேகலை கி.பி 2ம் நூற்றாண்டு -அறவணடிகளிடம் பௌத்தத்தை ஏற்று மக்களுக்கு சேவை செய்தும் வந்தார். இவருக்காக ஒரு தனி விகாரா காஞ்சியில் கட்டப்பட்டதாகவும், இந்த மணிமேகலை விகாரா தான் பிற்காலத்தில் திரெளபதி அம்மன் கோயிலாக மாற்றப்பட்டதாகவும் சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர்
அரசர்கள்
01.
இளங்கிள்ளி கி.பி இரண்டாம் நூற்றாண்டில் சோழநாட்டை அரசாண்ட கிள்ளிவளவன் என்னும் சோழனின் தம்பி
a. காஞ்சிபுரத்தைத் தலைநகராகக்கொண்டு தொண்டை நாட்டை அரசாண்ட காலத்தில், 'பைம்பூம் போதிப் பகவற்கு' ஒரு தேசியம் அமைத்தான் என்றும்
b. இளங்கிள்ளி அரசாண்ட நூற்றாண்டிலே, காஞ்சிபுரத்துக்குத் தென்மேற்குத் திசையில், 'தருமத வனம்' என்னும் ஒரு பூந்தோட்டம் இருந்ததென்றும், அதில் இளங்கிள்ளி ஒரு புத்த பீடிகையை அமைத்து விழாவும் சிறப்பும் செய்தானென்றும் மணிமேகலை கூறுகின்றது.
02.
புத்தவர்மன் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக்கொண்டு அரசாண்ட பல்லவ அரசர்களுள் பௌத்தத்தைச் சேர்ந்தவன் என்று கூறப்படுகிறான். இவன் பௌத்தர்களுக்காகப் பள்ளிகளைக்கட்டி அவர்களை ஆதரித்திருக்கக்கூடும்.
பௌத்த விகாரங்கள்
01.
கச்சீஸ்வரர் கோயில்
a. இக்கோயிலின் முன் கோபுரத்தின் அஸ்திவாரக் கல் கட்டடத்தில் சில புத்த உருவங்கள் இப்போதும் இருக்கின்றன.
b. இன்னும் சில, முன்பு இருந்த உருவம் தெரியாமல் இருக்குமாறு அழிக்கப்பட்டிருக்கின்றன.
c. கோயில் உள்மண்டபத்திலும் சில கல்தூண்களில் புத்த உருவங்கள் இப்போதுமிருக்கின்றன.
d. இக்கோயில் மேல்புறம் வீதிக் கடைசியிலிருந்து வரும் ஏரிக்கு 'புத்தேரி' என்றும், வீதிக்கு 'புத்தேரித்தெரு' என்றும் பெயர்கள் ஏற்பட்டு இப்போதும் வழங்கிவருகின்றன." (பக்கம் 126. திருக்குறள் ஆராய்ச்சியும், ஜைனசமய சித்தாந்தமும், தி.அ.அநந்தநாத நயினார் எழுதியது. 1932)
e. புத்தேரித்தெரு புத்தர் தெரு என்று வழங்கப்பட்டு அவ்வாறே விக்கிரபத்திரங்களிலும் எழுதப்பட்டு வந்தன.
02.
காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில்
a. வெளிமதில் சுவரில் சில புத்த உருவங்கள் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மதிற்சுவர் விஜயநகர அரசனான கிருஷ்ணதேவராயரால் 1509 இல் கட்டப்பட்டது
b. பழைய புத்தர் கோயில்களை இடித்து அக்கற்களைக்கொண்டு இந்த மதிற்சுவர் கட்டியிருக்க வேண்டும். அதனால்தான் இப்புத்த உருவங்கள் இச்சுவரில் காணப்படுகின்றன.
c. கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள காவல் நிலையத்தின் கட்டடத்தில் ஒரு புத்த உருவம் இருக்கிறது. இது பூமியைத் தோண்டியபோது கிடைத்தது. புத்தர் நிர்வாணம் அடையும் நிலையில் கற்சிலையொன்று ஏகாம்பர ஈசுவரர் கோயில் மதிற்சுவரின் கீழே வைத்துக் கட்டப்பட்டிருக்கிறது.
03. காமாட்சியம்மன் கோயில்
a. ஆதியில் பௌத்தரின் தாராதேவி ஆலயம்.
b. இவ்வாலயத்தில் பல புத்த உருவங்கள் இருந்தன.
c. அவைகளில், 6 அடி உயரம் உள்ள நின்றவண்ணமாக அமைக்கப்பட்ட "சாஸ்தா" (இது புத்தர் உருவம்) என்னும் உருவம் இப்போது சென்னைப் பொருட்காட்சிச்சாலையில் இருக்கிறது.
d. சென்னை தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தியதற்கு முன்னரே 1915 ஆம் ஆண்டில் அறிஞர் டி.ஏ. கோபிநாதராவ் அவர்கள் காமாட்சி கோயிலின் உள் பிரகாரத்தில் நடத்திய ஆய்வில் 7 அடி 10 அங்குல உயரமுள்ள கி.பி 7 ம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலையைக் கண்டு எடுத்தார்.
e. காமாட்சி அம்மன் குளக்கரையில் இருந்த புத்தச் சிலைகள் இப்பொது காணப்படவில்லை.
f. இக்கோயிலில் இருந்த வேறு புத்த உருவங்கள் (கருங்கல் சிலைகள்) சில ஆண்டுகளுக்குமுன் நன்னிலையில் இருந்தது. ஆனால், அவை பிறகு துண்டு துண்டாக உடைக்கப்பட்டது. இப்போது அவை இருந்தவிடமே தெரியவில்லை.
g. காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் புத்த உருவம் ஒன்று இப்போதும் நன்னிலையில் இருக்கிறது. இத்தோட்டத்தில் இப்போது உள்ள மண்டபத்தைக் கட்டியபோது, அதன் அடியில் சில புத்த உருவங்களைப் புதைத்துவிட்டார்களாம்.
h. 1971 ஆம் ஆண்டு கஞ்சியில் முதலாம் மற்றும் இரண்டாம் நூற்றாண்டு காலத்திய பௌத்த ஸ்தூபி, கஞ்சி காமாட்சி அம்மன் கோயில் மத்தியில் கண்டு பிடிக்கப்பட்டது.