வெள்ளி, அக்டோபர் 18, 2024

அசோகர் தூண் (Ashok Pillar) சென்னை ( பகுதி I)


அசோக் நகர் என்று பெயர் வைத்தபின் அசோகர் தூண், கலிங்கா காலனி, கலிங்கா பூங்கா, அசோகா காலனி என்று பௌத்தத்தை அடையாளப்படுத்தும் பெயர் வைக்கப்பட்டது. கலிங்கா காலனி அடுத்து அசோகா காலனி இருந்தது. இன்று நன்கு வளர்ச்சியடைந்த பின் அவ்வடையாளங்கள் பல மறைந்து போனது. 

வடபழனி 100 அடி சாலை வழியாக அசோக தூண் சென்றடைய முடியும். PT ராஜன் சாலை முடிவிலிருந்து (முதல் நிழற்சாலை, ஒட்டகப்பாளையம்)  லக்ஷ்மன் சுருதி இடையில் இருந்த பல வீடுகள் அகற்றப்பட்டு சாலை அமைக்கப்பட்டது. இச்சாலை வழியாக கோயம்பேடு பேருந்து நிலையம் வரை செல்லமுடியும். இச்சாலையில் இருந்த அசோகா காலனி (அசோகா தூண் - வடபழனி 100 அடி சாலை) காணாமல் போனது. தற்பொழுது ஜவாஹர்லால் நேரு சாலையாக மாற்றப்பட்டது.  தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் காலனி, அரசு குடியிருப்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம் ஆகியவை அசோகா காலனியில் அமைந்தவை.   

ஏ வி எம், வடபழனி ஆலயம், வடபழனி அரசு பள்ளி, கோடம்பாக்கம் போன்றவை அசோக் நகர் உருவாக்குவதற்கு முன் அமைந்திருந்தவை. AVM இருந்து ஒட்டகப்பாளையம் வரை நீர் நதி போன்று ஒட்டிக்கொண்டு இருந்தது. இங்கு மீன் பிடிப்பர், பாம்புகள் அதிகம். 

கோடம்பாக்கம் ஆற்காட் நவாப் அவர்களின் குதிரை கோட்டையாக இருந்தது. நல்ல காட்டு பகுதியாக இருந்த கோடம்பாக்கம் குதிரைகளுக்கு நல்ல மேய்ச்சல் நிலமாக இருந்தது. உருது மொழியில் குதிரை தோட்டம் என்பது கோடபாக் என்று அழைக்கப்படும். கோடா பாக் என்பது கோடம்பாக்கம் என்று மருவியது. ஆற்காட் சாலை என்பது ஆற்காட் நவாபை குறிப்பிடும் சொல்.

வடபழனி என்பது தற்பொழுது உள்ள கோவில் பெயர். பழநி என்றால் தென்பழனியை குறிக்கும். எனவே இந்த ஆலயத்தை வடபழனி என்று குறித்தனர். 1890ம் ஆண்டு எளிய ஓலைகூரைக் கொட்டகையுடன் இக் கோயில் கட்டப்பட்டது. வடபழனி சிவன் கோவில் அருகில் உள்ள சைதாப்பேட்டை சாலை தான் வடபழனி செல்ல இருந்த இடம்.
 

பெருந்தலைவர்  காமராஜர்

பெருந்தலைவர்  காமராஜர் அவர்களால் தான் சென்னை, அசோக் நகர் உருவானது. அசோக் நகர், அசோகா தூண், கலிங்கா காலனி, கலிங்கா பூங்கா, அசோகா காலனி என்று பௌத்தத்தை அடையாளப்படுத்தும் பெயர் வைத்தார். இன்று இங்கு அடைந்திருக்கும் வளர்ச்சி என்பது காமராஜர் அவர்களால் உருவானது.

ராணி எலிசபெத் சென்னை துறைமுகத்தை விரிவுபடுத்த, சென்னை கடற்கரை சாலை குடிசை பகுதியில் (அண்ணா சதுக்கம் ஆற்று ஓரம் இரும்பொறை, இரும்பொறையை இரும்பாறை, இரும்பாரவாதி என்று மக்கள் அழைத்தனர்) நேப்பியர் பாலம் -Nepir Bridge அருகில் கன்னியப்பநகர் பகுதியில் இருந்தவர்களுக்கு மாற்று இடத்தில் குடியேற்ற கேட்டுக்கொண்டார்.

இரும்பொறை என்பது மன்னரின் பெயர். சங்க கால அரசர்களில் இரும்பொறை என்னும் பெயருடன் 7 அரசர்கள் காணப்படுகின்றனர். அவர்களின் பெயர்கள் 

    • 01. பெருஞ்சேரல் இரும்பொறை, 02. இளஞ்சேரல் இரும்பொறை, 03. குட்டுவன் இரும்பொறை, 04. அந்துவஞ்சேரல் இரும்பொறை, 05. கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, 06. குடக்கோச் சேரல் இரும்பொறை, 07. சேரமான் யானைகட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை  

அம்மக்களை அசோக் நகரில் குடியமர்த்தினார் காமராஜர். காமராஜர் குடியமர்த்திய இப்பகுதி புதூர் என்றழைக்கப்பட்டது. மல்லிகைப்பூ நகர் என்பது பழைய பெயர். தென்னை ஓலையில் கட்டப்பட்ட கூரை வீடு, கழிப்பறை, குளியலறை, கழிவு நீர், இரு வீடுகளுக்கு ஒரு கிணறு என கட்டி தரப்பட்டது. பேருந்து பணிமனை அமைத்து பேருந்து வசதிகள், அரசு மருத்துவமனைகள், அஞ்சலகம், பள்ளிகள், காவல் நிலையம், மின்சாரம் என வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுத்தார்.  

புதூரை மேல் புதூர் மற்றும் கீழ் புதூர் என்று அழைக்கப்பட்டது. மேல் புதூர் மேல் சேரி என்றும் மற்றும் கீழ் புதூர் கீழ் சேரி என்றும் அழைக்கப்பட்டது. ஐந்திணைகளில் ஒன்று முல்லை. காடும் காடு சார்ந்த இடமும் முல்லை நிலமாகும். முல்லை நிலத்தின் ஊர் சேரி. சேரி என்பது வாழ்விடம். இவ்வாழ்விடத்தை கீழ்த்தரமான சொல்லாக பயன்படுத்தப்படுகிறது. மூதேவி என்பது மூத்த தேவி இச்சொல்லை  கீழ்த்தரமான சொல்லாக மாற்றியது போன்று தான் சேரி  என்ற சொல்லும் பயன்படுத்தப்படுகிறது.

கீழ் புதூர்/கீழ் சேரி :- மல்லிகைப்பூ நகர், மல்லிகைப்பூ சேரி  

மேல் புதூர்/மேல் சேரி:- கலிங்கா காலனி, சிவலிங்கபுரம் 

அசோக் நகர் என்று பெயரிட்டபின் அசோக் தூண் (1962) மற்றும் கலிங்கா காலனி உருவாக்கப்பட்டது. கலிங்கா காலனி என்ற பெயரில் தான் பேருந்துகள் இயங்கின. பெருநகர போக்குவரத்து கழகம் 1972ல்  தமிழக அரசால் தொடங்கப்பட்டது. கே.கே. நகர் பேருந்து பணிமனை 1973ல் நிறுவப்பட்டது. கலிங்கா காலனி பேருந்து பணிமனை பிறகு கே. கே நகர்பேருந்து பணிமனை என்று மாற்றப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட்டன. மருத்துவம், பள்ளிகள், காவல் நிலையம், சாலைகள் என பல்வேறு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. 

மல்லிகைப்பூ சேரி மற்றும் மல்லிகைப்பூ நகர் என்பதே இதன் பழைய பெயர். மல்லிகைப்பூ சேரி என்பது 40 குடிசை பகுதி. மல்லிகைப்பூ நகர் என்பது புதூர் பள்ளி அமைந்திருக்கும் இடம். இந்த இடங்களில் மல்லிகை பூ அதிகமாக வளர்க்கப்பட்டது. 40 குடிசை பகுதி என்பது அனுமதி அட்டை பெற்று கட்டப்பட்ட இடம். ஆனால் அனுமதி அட்டை இல்லாமல் கட்டப்பட்ட இடமான ஒட்டகப்பாளையம் அட்டையில்லா நகர் என்று அழைக்கப்பட்டது. ஒட்டகப்பாளையம் முதல் தெரு முதல் பத்தாவது தெரு வரை உள்ளது. சாமியார் மாடம் அருகில்  கீரை மற்றும் முள்ளங்கி அதிகமாக பயிரிடப்பட்டது. காமராஜர் காலனி, Dr அம்பேத்கர் சாலை, சாமியார் மாடம், சுப்புராயன் நகர் எல்லாம் கொய்யா தோப்பாக இருந்தது. வீடுகள் மற்றும் தோப்பு இடங்களை காலிசெய்து தான் காமராஜர் காலனி, Dr அம்பேத்கர் சாலை உருவானது அசோக தூண் அருகில் மாந்தோப்பு  இருந்தது.  

மாந்தோப்பு எல்லை 8ஆவது நிழற்சாலை முதல் அசோகர் தூண் வரை, 8 ஆவது நிழற்சாலை முதல் போஸ்டல் காலனி வரை, அசோகர் தூண் முதல் ராம் காலனி வரை, போஸ்டல் காலனி முதல் ராம் காலனி வரை.    

1964 தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் 1970களில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியது. கேரம் போர்டு மற்றும் கபடி தான் இங்கு விளையாட்டு.  

இங்கு பல கிணறுகள் இருந்தது. உதாரணமாக இரண்டாவது நிழற்சாலை முடிவில் ஒரு பெரிய கிணறு இருந்தது. 8, 11, 12, 13, 14 தெருக்களில் கிணறு இருந்தது. நான் இருந்த 11 வது தெருவில் இருந்த கிணறு 2000 வரை இருந்தது. ஜவஹர் வித்யாலயா அமைந்திருக்கும் இடத்தில் ஒரு கிணறு, புதூர் பள்ளியில் ஒரு கிணறு இருந்தது. ஆனால் இன்று ஒரு கிணறு கூட காணமுடியவில்லை.  

மாடுகள் அதிகமாக வளர்க்கப்பட்டு இருந்தது. எங்கள் தெருவில் 20 க்கு மேற்பட்ட மாடுகளை நானே பார்த்து இருக்கிறேன். அதிகாலையில் மாட்டு சாணம் எடுத்து வந்து தண்ணீரில் கரைத்து அதனை வாசலில் தெளித்தது பெருக்கி சுத்தம் செய்யப்படும். வெள்ளிக்கிழமை மாட்டு சாணத்தில் வீடு மெழுகப்படும். போதி பொங்கல் அன்று வீட்டு வாசலில் பழைய துணி, பாய் ஆகியவற்றை நெருப்பிலிட்டு எரிக்கப்படும். சிறிய பறைகள் ஏராளமாக விற்கப்படும். கிளிஞ்சல்கள் வாங்கி வந்து ஒரு நாள் முழுவதும் ஊறவைத்து பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி வீட்டிற்க்கு வெள்ளையடிக்கப்படும்   

அசோகா தூண் பகுதி

அசோகா தூண் அருகில் வேலிகாத்தான் முள் மரங்கள் அதிகமகா இருந்தது. வேலிகாத்தான் முள் மரங்கள் அதிகப்படியான நிலத்தடி நீரையும், காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சும் தன்மை கொண்டவை. இங்கு பெரிய கிணறு ஒன்று வெட்டப்பட்டது. குடி நீர் தேவையை தீர்க்கும் கிணறாக இருந்தது. தண்ணீர் எடுத்துச்செல்ல அவ்வளவு கூட்டம் இருக்கும் இங்கு.  

அசோகா தூண் அங்கு தான் தார் சாலை அமைக்கப்பட்டு இருந்தது. அசோகா தூண் சுற்றி இருந்த சுற்றளவு பெரியதாக இருந்தது. இன்று மிகக்குறிக்கியதாக உள்ளது மற்ற இடங்கள் மண் சாலைகள் தான். களிமண் அதிகம் அடிக்கடி வண்டி சக்கரம் இந்த மண்னில் மாட்டிக்கொள்ளும்.

சைதாப்பேட்டை தான் நன்கறியப்பட்ட இடமாக இருந்தது. இங்கிருக்கும் இடங்களையும் சைதாப்பேட்டை இடமாக அறியப்பட்டது. சைதாப்பேட்டை இருக்கும் ஆற்று நீர் மக்கள் பயன்படுத்தினார்கள். இன்று கழிவு நீர் செல்லும் ஆறாக கூவம் ஆறு மாறியுள்ளது. நீர் போக்குவரதாக, நீர் தேவையை பூர்த்தி செய்த கூவம் ஆறு கழிவு நீர் செல்லும் ஆறாக மாற்றிய மக்களுக்கும் அரசுக்கும் மனமுவந்த பாராட்டுக்கள். வட இந்தியாவில் புண்ணிய நதி என்று சொல்லும் இடங்களில் இறந்த உடல்கள் இருக்கிறது. தமிழகம் நீர் தேவையை அளித்த கூவம் நதியை சாக்கடை நீராக்கிய பெருமையை கொண்டுள்ளது. ஆற்று ஓரம் இருந்த மக்களை பாதுகாப்புக்கு என்று இடம் பெயரவைத்து பல்வேறு கட்டிடங்கள், கல்லுரிங்கள் கட்டிய அரசுக்கும் நன்றிகள். இது போன்ற செயல்களை இன்றும் நிறுத்தாமல் மக்களை காக்க கூவம் ஆற்றை மூடும் பணியை செம்மனே செய்யும் அரசுக்கு நன்றிகள்.  

கடலில் செல்லும் கப்பல்களுக்கு வழி காட்டுவதற்காக ஒளி உமிழும் விளக்குகள் பொருத்தி கடற்கரைகளில் அமைக்கப்பட்டுள்ள உயர்ந்த கோபுரம் கலங்கரை விளக்கம் (Light House). பெரிய கட்டிடங்கள் ஏதும் அப்பொழுது அசோக் நகரில் இல்லை. மிகப்பெரியதா இருந்தது அசோக் தூண் தான். அசோக் தூணில் இருக்கும் சிங்கங்கள் கலங்கரை விளக்கம் போன்று வழிகாட்டியாக அமைந்து இருந்தது என்று வயது முதிர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவர் குறிப்பிட்டார்.  
  
Dr அம்பேத்கர் சாலை (660 மீட்டர்) துவங்கி அசோக் நகர் 4 நிழற்சாலை (1250 மீட்டர்) அசோக் நகர் முதல் நிழற் சாலை (300 மீட்டர்) என 2210 மீட்டர் தொலைவில் உள்ளது அசோகர் தூண். அசோகர் தூண் சந்திப்புக்கு அருகில் உள்ள சமீபத்திய புதிய வசதி சென்னை ரயில் மெட்ரோ நெட்வொர்க்கின் அசோக் நகர் ரயில் நிலையம் ஆகும்.

   A) பள்ளிகள்

  • கன்னியப்ப நகர், உயர் நிலைப்பள்ளி
  • புதூர், அரசினர் மேல்நிலை பள்ளி
  • அரசினர் மகளிர் மேல் நிலை பள்ளி
  • நடேசன் சாலை, கேந்திரிய வித்யாலயா

1. சென்னை உயர் நிலைப்பள்ளி கன்னியப்ப நகர் 

அமைவிடம்: எண் 46, 83வது தெரு,  கன்னியப்ப நகர், அசோக் நகர், சென்னை 600 083.

அசோக தூண் அமைப்பதற்கு முன் கட்டப்பட்ட பள்ளி. சென்னை கடற்கரை சாலை கன்னியப்பநகர் பகுதியில் இருந்தவர்களுக்கு கன்னியப்ப நகர் என்ற இடப்பெயரும் அதே பெயரில் பள்ளியும் அமைத்து கொடுக்கப்பட்டது. அசோக் நகரில் உள்ள பழையான பள்ளிக்கூடம் கன்னியப்ப நகர் பள்ளி தான். ஓலை கூரை பள்ளியாக துவங்கப்பட்டது. மாணவர்கள் அமர்வதற்கு எந்த வசதிகளும் இல்லை. அங்கிருக்கும் மணலை மேடாக்கி அதன் மேல் அமர்ந்து இருப்பர். பள்ளி கூரையை மாற்றும்பொழுது பள்ளி ஒட்டகப்பாளையம் இடத்திற்கு மாற்றப்படும்.  மதில் சுவர் கிடையாது. பள்ளி ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை இயங்கியது. பள்ளியில் சேர அடிப்படையான தகுதி கையை தலை மேல் வைத்து காதை தொடவேண்டும். காதை தொட்டால் பள்ளியில் சேர அனுமதி. 2 Cent இடத்தைக்கொண்ட  பள்ளி.  இது ஒரு மாநகராட்சி பள்ளி (Corporation High School).  பயிற்று மொழி தமிழ்
 
இந்த பள்ளிக்கூடத்தில் தான் என் அம்மா படித்தார்கள். அம்மா படித்த அதே பள்ளிக்கூடத்தில் தான் நான், என் அண்ணன், தங்கைகள் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை படித்தோம். கன்னியப்ப நகர் கூரை பள்ளி 1970ல் பள்ளி கட்டிடமாக கட்டப்பட்டது. நாங்கள் படிக்கும் போழுது முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளி இயங்கியது. நான் படிக்கும் போது பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு இருந்தது. மதிற் சுவர் கட்டப்பட்டு இருந்தது. சத்துணவு வழங்கப்பட்டது. விளையாட பள்ளி மைதானம் இருந்தது.
தற்பொழுது இப்பள்ளி ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை உள்ளது. தற்பொழுது விளையாட்டுமிடங்கள் பள்ளி அறைகளாக மாறியுள்ளது. இப்பொழுது விளையாட்டு மைதானம் இல்லை

 2. புதூர் அரசினர் மேல்நிலை பள்ளி

அமைவிடம்:  எண் 46, 3வது நிழற்சாலை,  மல்லிகை பூ சேரி, புதூர்,  மேற்கு மாம்பலம், அசோக் நகர், சென்னை 600 083. 

அசோக தூண் அமைப்பதற்கு முன் கட்டப்பட்ட பள்ளி. இப்பள்ளி மாநில அரசு பள்ளி. இப்பள்ளி 1961 தொடங்கியது. பொன்விழா (50 ஆண்டு) 11-11-2011 அன்று கொண்டாடப்பட்டது ஆறாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ளது. இந்த பள்ளிக்கூடம் மதில் சுவர் இன்றி கட்டப்பட்டது.இந்த பள்ளிக்கூடத்தில் தான் ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை படித்தேன் (1983 to  1987). பெரிய விளையாட்டு மைதானம் கொண்ட பள்ளி. புதூர் பள்ளி மேற்கு மாம்பலம் பள்ளி என்று தான் அழைக்கப்பட்டது.  நான் படிக்கும் பொழுது  மதில் சுவர் கட்டப்பட்டு இருந்தது.  பள்ளியில் ஒரு நூலகம் உள்ளது.
 
3வது நிழற்சாலை 8 ஆவது தெரு இணையும் இடத்தில் IJK அலுவலகம் உள்ளது. இங்கு SRM டியூஷன் மையம் ஒன்று கூரை கோட்டையில் துவங்கப்பட்டது. இந்த இடத்தில் தான் பொதுக்கூட்டம் நடைபெறும். பல்வேறு அரசியல் தலைவர்கள் வந்து மேடை பேச்சுகளை தந்துள்ளனர். நடிகர் அசோகன், நடிகர் ஆனந்தன், நடிகர் SSR பேசி முடித்த பின் தான் MGR அவர்கள் பேசுவார். திரும்பி செல்ல கால் வைத்து நடக்க முடியாத அளவுக்கு கூட்டம் மிகுந்து இருக்கும். MGR பேச்சை விட கலைஞர் மேடை பேச்சு இங்கு அதிகம்.

 


3. அரசினர் மகளிர் மேல் நிலை பள்ளி
அமைவிடம்: எண்13, 9ஆவது நிழற்சாலை, அசோக் நகர், சென்னை 600083
அசோக் நகர் அரசினர் மகளிர் மேல் நிலை பள்ளி சிறந்த அரசு பள்ளியாக உள்ளது. 1962 காமராஜர் அவர்களால் துவக்கிவைக்கப்பட்ட பள்ளி. இப்பள்ளி அசோகர் தூண் அருகே உள்ளது. 6 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை உள்ளது. குடி நீர், கழிப்பறை, விளையாட்டு மைதானம், நூலகம் ஆகிய வசதிகள் உள்ளது. மகளிர் பள்ளியில் ஆண் மற்றும் பெண் ஆசிர்யர்கள் உள்ளனர்.

     

4. கேந்திரிய வித்யாலயா

அமைவிடம்: 26P5+QPV, நடேசன் சாலை, அசோக் நகர், சென்னை 600083.

இப்பள்ளி மத்திய அரசு பள்ளி. இப்பள்ளி 1981 இல் நிறுவப்பட்டது. பள்ளியின் அலுவலக புகைப்படக் கலைஞர் சுகுமாரால் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்ததும் பகவான் புத்தரை காணும் படி புத்தர் சிலையை 2003ல் நிறுவினார். பெரிய விளையாட்டு மைதானம் கொண்ட பள்ளி.

B) முதலமைச்சர்  பெயரில் உள்ள சாலைகள் 

01. காமராஜர் சாலை, காமராஜர் தெரு, காமராஜர் காலனி 

02. கலைஞர் கருணாநிதி  நகர் - க.க நகர் (அ) KK Nagar

03. M G ராமசந்திரன் நகர், M G ராமசந்திரன் சந்தை (Market)

04. P T ராஜன் சாலை 

05. அண்ணா பிரதான சாலை 

06. Dr அம்பேத்கர் சாலை (மே தின தந்தை, இந்திய அரசியலமைப்பு தந்தை) 

1. காமராஜர் சாலை

காமராஜர் சாலை P.T. ராஜன் சாலை நாகாத்தம்மன் கோவில் இருந்து ESI அடையும் வரை உள்ள சாலை காமராஜர் சாலை. இரும்பொறையில் இருந்த கன்னியப்ப நகர் என்ற அதே பெயரில் இடமும் பள்ளிக்கூடமும் இங்கு அமைத்தார் காமராஜர். தெரு விளக்கு வைத்தவர். தெரு விளக்கு எண்ணெய் ஊற்றி விளக்கை எரியவைக்கும் முறை. காமராஜர் தான் மின்சாரம் தந்தது தன் கரங்களால் பொத்தானை அழுத்தி புதூர் மக்களுக்கு மின்சாரம் அளித்தவர்.

காமராஜர் தெரு திருச்செந்தூர் முருகன் கோவில் MGR நகர் அருகில் உள்ளது 

காமராஜர் காலனி Dr அம்பேத்கர் சாலை என்று அழைக்கப்படும் சாலை முன்பு காமராஜர் காலனி என்று அழைக்கப்பட்டது. அம்பேத்கர் சிலை அருகில் உள்ள காமராஜர் காலனிக்கு பழைய பெயர் புகழ் நகர்.

2. கலைஞர் கருணாநிதி  நகர் - (க.க நகர் -K K Nagar)

1966 ஆம் ஆண்டு சென்னையில் முப்பெரும்  விழா (17 செப்டம்பர் பெரியார், 15 செப்டம்பர் அண்ணா, திராவிட முன்னேற்றக் கழகம்) நடத்தி கட்சிக்கான நிதி 10 இலட்சம் திரட்ட இலக்கு வைத்து முடிவு செய்தார் கலைஞர்.  

சென்னை அசோக தூண் அருகே நாடகம் நடத்தி அந்த இலக்கினை அடைய முயற்சி செய்யப்பட்டது.  கட்சிக்கான நிதி 10 லட்சம் இலக்கு ஆனால் 11 லட்சத்தை எட்டியது.

அண்ணா பிறந்தநாள் விழாவுக்காக கலைஞர் காகிதப்பூ என்ற நாடகம் எழுதி அரங்கேற்றினார். அதில் அவரும் ஒரு பாத்திரத்தில் நடித்தார். நாடகங்களில் நடிப்பதை தன் தொழிலாக மேற்கொண்ட இராஜாத்தி அம்மாள் கலைஞருடன் நடித்தார். 

1966ல் “காகிதப்பூ“ மற்றும் பல நாடகங்களில் இராஜாத்தி அம்மாளும், கலைஞரும் ஒன்றாக இணைந்து நடித்ததின் விளைவாக இருவருக்கிடையே காதல் ஏற்பட்டது. 1966இல் செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி இருவரும் இரகசியத் திருமணம் செய்து கொண்டனர். இத்திருமணம் கலைஞரின் மூன்றாம் திருமணம் ஆகும்.

கலைஞர் இவ்விடங்களுக்கு பலமுறை வந்து இருக்கிறார். பல மேடை பேசசுகளையும் தந்து இருக்கிறார். 

  3. M G ராமசந்திரன் நகர் - MGR சந்தை

01.அசோக் நகர் அடுத்து கே கே நகர் அடுத்து MGR நகர் மற்றும் MGR சந்தை உள்ளது. 

02) எம். ஜி. ஆர் தலைமையில் 18-10-1973 அன்று வியாழக்கிழமை கீழ்கண்ட இருவருக்கும் திருமணம் புதூர் அசோக் நகரில் 14 வது தெரு மணமகன் இல்லத்தில் நடைபெற்றது. MGR வந்து தாலி எடுத்து கொடுத்து திருமணம் நடத்தி வைத்தார்.  

01. திரு ச. தேவதாஸ் BA ( Income Tax Administrative Officer) 115 வது அண்ணா தி.மு.க அமைப்பாளர்  

02. A . தமிழ்செல்வி

வாழ்த்துரை வழங்கியோர் 

01. நாஞ்சில் கி. மனோகரன் MA MP 

02. S D சோமசுந்தரம் MP - அண்ணா தி.மு.க கொள்கை பரப்பு செயலாளர்

03. பாவலர் மா. முத்துசாமி BA  BT MP 

04. SM துரைராஜ் MLA - அண்ணா தி.மு.க பொருளாளர் 

05. KM சுப்பிரமணியன் MLA 

06. பம்மல் நல்லதம்பி தலைமை நிலைய பொறுப்பாளர் 

07. கவிமுரசு இ முத்துராமலிங்கம் B Sc 

13 மற்றும் 14 வது தெரு இருபக்கமும் நீண்ட தென்னை ஓலை கீற்று பந்தல் போடப்பட்டு இருந்தது.  1972 ல் அண்ணா தி மு க கட்சி துவங்கப்பட்டது. 1973 ல் திருமணம் நடத்தி வைத்தார்.  திரு ச. தேவதாஸ்   அவர்கள் MGR அவர்களின் தலைமையில் திருமணம் நிகழ வேண்டி திருமண அழைப்பை MGR அவர்களுக்கு அளித்து இருந்தார். ஆனால் அன்று இடைத்தேர்தல் என்பதால் திருமண நிகழ்வை மறந்து இடைத்தேர்தலுக்கு சென்றுவிட்டார். பின்னர் தாஸ் அவர்கள் பேசிய போது தான் நினைவுக்கு வந்தது. MGR அவர்கள் இரு வழிகளை தந்தார். 

01 14-10-1973ல் அன்றே திருமணம் நடக்கட்டும் வேறு ஒரு நாள் வந்து வாழ்த்து தெரிவிக்கிறேன் அல்லது

02 வேறு ஒரு நாள் திருமணத்தை தள்ளி வைப்பது 

தாஸ் அவர்கள் MGR வந்து தாலி எடுத்து கொடுத்தால் தான் தனக்கு திருமணம் என்றதால் திருமண நாள் 14 அக்டோபர் 1973ல் இருந்து 18 அக்டோபர் 1973 அன்று மாற்றப்பட்டு திருமணம் நடந்தது. தகவல் தொழில் நுட்பம் இன்று போல் அன்று இல்லை என்றாலும், MGR  வருகையறிந்ததும்  காட்டு தீ போன்று பரவியது. புதூர் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலரும் வந்தனர். அன்று பள்ளிக்கு சுற்று சுவர் இல்லை. 8, 9, 10, 11, 12, 13, 14 தெரு மக்கள் மற்றும் II & III நிழற்சாலை மக்கள், அண்ணா தி மு க கட்சி மக்கள்,  திருமண உறவுக்காரர்கள் என கூட்டம் அலைமோதியது. 

MGR இத்திருமண நிகழ்வில் இருந்து வெளியேற நீண்ட நேரம் ஆனது அவ்வளவு கூட்டம். இரவு ஏழு மணி அளவில் திரைப்பட விருந்து அளிக்கப்பட்டது. திரையரங்கம் போன்று வெள்ளை நிற பெரிய துணை கட்டி திரைப்படம் மக்களுக்கு காண்பிக்கப்பட்டது.      

 
18-10-1973 அன்று எம் ஜி ர் - தலைமையில் நடந்த திருமணம் (தேவதாஸ்  மற்றும் கலைச்செல்வி)  

4. P T ராஜன் சாலை  (பொன்னம்பல தியாகராஜன்) 

P T ராஜன் 1920-ல் நீதிக்கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு சென்னை மாகாண சட்டமன்ற கவுன்சில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1937-ல் தோல்வியைத் தழுவும்வரை அவர் சென்னை மாகாண சட்டமன்ற கவுன்சில் உறுப்பினராகச் செயல்பட்டுள்ளார். 1939-ம் அந்த ஆண்டுதான் சென்னை மகாணத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றார்.1944 வரை அப்பதவியில் நீடித்துள்ளார்.

P T ராஜனுக்கு ஒருகட்டத்தில் பெரியாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன் காரணமாக நீதிக்கட்சியிலிருந்து விலகி, போட்டி நீதிக்கட்சியைத் தொடங்கினார். 1952-ல் நடந்த தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் சென்னை மாகாண சட்டமன்ற கவுன்சில் உறுப்பினர் ஆனார். 1957-ல் அவரது உறுப்பினர் பதவி முடிவுக்கு வந்ததிலிருந்து அவர் தீவிர அரசியலிலிருந்து படிப்படியாக ஒதுங்க ஆரம்பித்தார். பி.டி. ராஜன் திராவிட கொள்கையின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

பி.டி. ராஜன் அவர்களின் பெயரில் சாலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள கே.கே. நகரில் இருக்கும் பி.டி. ராஜன் சாலை அசோக் நகர் இரண்டாவது நிழற்சாலையும் அசோக் தூண் சாலையும் இணைக்கிறது.

5 அண்ணா பிரதான சாலை

அண்ணா பிரதான சாலை கே.கே நகர் மற்றும் அசோக் நகரை இணைக்கும் பிரதான சாலை. அண்ணா மதி வளர்ச்சி மையம் இரண்டாவது நிழற்சாலையில் அமைக்கப்பட்டிருந்தது. இது எங்கள் வீட்டிற்க்கு பின்புறம். இரண்டாவது நிழற்சாலையில் ஒரு பெரிய பள்ளம் ஒன்று இருந்தது.  

சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்பட நடிகர் (SSR) எஸ்.எஸ்.ராஜேந்திரன். இவர் அண்ணா மதி வளர்ச்சி மையத்திற்கு பல முறை வருகைதந்துள்ளார். SSR இங்கு வருகை புரிந்த புகைப்படம் இணைத்துள்ளேன். என் சித்தப்பா சிவமணிசேகர் கைத்தறி (Co-optex) பணிபுரிந்தவர். அவர் இந்த புகைப்படத்தை தரும் பொழுது இப்படத்தில் உள்ளவர்களில் நான் மட்டும் தான் உள்ளேன் மற்றவர்கள் அனைவரும் இயற்கை எய்தினர் என்றுரைத்து கொடுத்தார். கொடுத்த சில மாதங்களில் அவரும் இயற்கை எய்தினார். இப்படத்தில் நின்று கொண்டு இருப்பவர் தான் சித்தப்பா சிவமணி அவர்கள்..

 06. Dr அம்பேத்கர் சாலை (மே தின தந்தை, இந்திய அரசியலமைப்பு தந்தை)  

G.அம்பேத்கரிஸ்ட் பேரவை  மற்றும் தியான மையம்

அமைவிடம்:  அசோக் நகர் காவல் நிலையம் அருகில் (அ)  Dr அம்பேத்கர் சாலை முடிவில் அமைந்துள்ளது. 

1967 இல் அண்ணல் அம்பேத்கர் மன்றம் இரவுப் பள்ளி துவங்கப்பட்டது. இந்த மன்ற துவங்க காரணமாக இருந்தவர் அன்பு பொன்னோவியம் அவர்கள்.ஆரம்பத்தில் குழந்தைகளுக்கான இரவுப் பள்ளியாக நடத்தப்பட்டதுஇன்றும் இரவுப் பள்ளி நடந்துகொண்டு இருக்கிறது. ஓவிய பயிற்சியையும் அளித்துக்கொண்டு இருக்கிறது.  

அண்ணல் அம்பேத்கர் மன்றம் இரவுப் பள்ளி என்ற பெயரை 1974ல் அம்பேத்கரிஸ்ட் பேரவை என மறுபெயரிடப்பட்டது. 2003ல் அம்பேத்கரிஸ்ட் பேரவை என்ற பெயரை அம்பேத்கரிஸ்ட் பேரவை மற்றும் தியான மையம் என மறுபெயரிடப்பட்டது. மகா பண்டிதர் அயோதீதாசர், எம்.சி.ராஜா, மேயர் சிவராஜ், அன்னை மீனாம்பாள் போன்ற தலைவர்களின் உருவப்படங்களை மன்ற சுவரில் வரையப்பட்டன. இந்தச் சங்கம்தான் பூனா ஒப்பந்தம் பற்றிய புத்தகத்தை முதலில் தமிழில் வெளியிட்டது. 

C. பேருந்து நிலையம்

இங்கு பேருந்துகள் கலிங்கா காலனி என்றே இயங்கியது. பின்னர் கலிங்கா காலனி என்பது கே கே நகர் பணிமனை என்று மாற்றப்பட்டது. இங்கு இயங்கிய பேருந்துகளில் தற்பொழுது வரை புதூர் அரசு பள்ளி வழியாக செல்லும் பேருந்து தடம் எண் 17D மட்டுமே (கே கே நகர் - பிராட்வே).  

கீழ் கண்ட வழித்தட எண்கள் தற்பொழுது இயக்கப்படவில்லை. 

25E (கே கே நகர்- அண்ணா சதுக்கம்),

37D (கே கே நகர்-வள்ளலார்  நகர்) 

28D (கே கே நகர்- திருவொற்றியூர்)  

அப்பொழுது தார் சாலை வசதில்லை. எல்லாம் மண் சாலை தான். பேருந்துகள் சென்றால் புழுதி பறக்கும். புது ஊர் வழியாக பேருந்துகள் செல்லும். பேருந்துகள் சிவப்பு வண்ணம் கொண்டது. சாலைகள் செம்மண் மற்றும் களிமண் கலந்திருந்தது. இதனால் போக்குவரத்தின் போது அதிக புழுதி மற்றும் தூசு பறக்கும். பேருந்துகள் R3 காவல் நிலையம் வழியாக செல்லும். 17D, 37D இரண்டாவது நிழற்சாலை வழியாக சென்றது.

ESI மருத்துவமனை அடுத்து பேருந்து பணிமனை அமைந்துள்ளது. இப்பகுதிகள் நல்ல வளர்ச்சியை நோக்கி இருந்தது. அதற்க்கு அடுத்து இருக்கும் MGR நகர், MGR சந்தை நெசப்பாக்கம் பெருளாதார வளர்ச்சி குறைவாக இருந்தது. இங்கு அதிகமாக குடிசைகள், மாடுகள், புள் வேலிகள் இருந்தது. நெசப்பாக்கம் பெரிய புல் மைதானம் இருந்தது அங்கு தான் மாடுகள் அழைத்து சென்று மேய்த்து விட்டு வருவார்.  இங்கு பேருந்து வசதிகள் தரப்படவில்லை. பேருந்துகள் ESI அடுத்து பேருந்து மணிமனை சென்றுவிடும். ஆனால் தற்பொழுது ESI அடுத்து காமராஜர் சாலை, PT ராஜன் சாலை, சிவன் பூங்கா, நெசப்பாக்கம், MGR நகர் சென்று பணிமனை செல்கிறது.     

1954 ஆம் ஆண்டு அயோத்தியா மண்டபம் கட்டப்பட்டது. ஆனால் அவ்வழியாக பேருந்துகள் செல்லாது. அவ்விடங்களுக்கு குட்டை கடை என்று பெயர். அதிகமான குட்டைகள் இருந்தது. மழை வந்தால் தண்ணீர் அதிக அளவு தேங்கி நிற்கும். இன்றும் இந்நிலை மாறவில்லை.

பேருந்து நிலையம். கலைஞர் கருணாநிதி நகர் (க.க நகர் -K K Nagar) பேருந்து நிலையம் 22/01/1973 நிறுவப்பட்டது. கலைஞர் கருணாநிதி நகர் க.க நகர் என்பது கேலியாக போனதால் K.K நகர் என அழைக்கப்படுகிறது.  

D. காவல் நிலையம்

01. அஞ்சுகம் - நல்லான்குப்பம் பகுதியில் காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இன்று அமைந்திருக்கும்  அஞ்சுகம் பள்ளி (64, ஜூபிலி ரெட், கோகுலம் காலனி, ராமகிருஷ்ணாபுரம், மேற்கு மாம்பலம், சென்னை, 600033) இடத்தில் தான் முன்பு R3 காவல் நிலையம் அமைந்திருந்தது. 

02. அதன் பின்னர் ஓட்டக்கப்பாளையம் என்று அழைக்கப்பட்ட இடத்தில் R3 காவல் நிலையம் இயங்கியது. இன்று ஜவஹர்லால் நேரு சாலை என்று அழைக்கப்படும் இடத்தில் லட்சுமணன் சுருதி அருகில் காவல் நிலையம் இயங்கியது.  

03.இறுதியாக அதன் பின் R3 காவல் நிலையம் II நிழற்சாலையில் நான்கு பிரிவுகளில் இயங்குகிறது.  

01. மகளிர் காவல்
02. போக்குவரத்து  காவல்
03. சட்டம் ஒழுங்கு காவல் (Law and Order) 
04. குற்றவியல் காவல் (Crime)

காவலர் பயிற்சி கல்லூரி 2, நடேசன் சாலை, அசோக் நகர், சென்னை     600083. இது 1974 இல் நிறுவப்பட்டது.

E.கோவில் மற்றும் பூங்கா

1.அருள் மிகு முத்துமாரியம்மன் ஆலயம் :

2. அருள்மிகு மல்லிகேசவரர் திருக்கோயில்

3. கலிங்கா பூங்கா / சிவன் பூங்கா

  1.அருள் மிகு முத்துமாரியம்மன் ஆலயம் : 


அமைவிடம்: அருள் மிகு முத்துமாரியம்மன் ஆலயம், 8 வது, அசோக் நகர், சென்னை 600083.

அசோக் நகர் இரண்டாவது தெருவில் பெரிய பொது கிணறு ஒன்று இருந்தது. அம்மன் சிலை ஒன்றை அசோகர் தூண் நிறுவுவதற்கு முன் ஓலை கூரையில் கோவில் இருந்தது.  தற்பொழுது கும்பா அபிஷேகம் முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்றது.

 2. அருள்மிகு மல்லிகேசவரர் திருக்கோயில்

அமைவிடம்: அசோகா தூண் மற்றும் நடேசன் சாலைக்கும் இடையில் (அ) அசோக் நகர் காவல் பயிற்சி கல்லூரி அருகில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் பழமையான கோவில் அருள்மிகு மல்லிகேசவரர் திருக்கோயில்.
  

3. கலிங்கா பூங்கா / சிவன் பூங்கா

அமைவிடம்:  பி.வி. ராஜமன்னார் சாலை, 3 செக்டர், கே கே நகர், சென்னை78 

A V மெய்யப்பன் அவர்கள் ஒரு திரைப்பட காட்சிக்கு கலிங்கா பூங்காவில் சிவன் சிலையைமைத்தர். அக்காட்சிகள் முடிந்த பின் சிவன் கட்டுமானத்தை அகற்றும் பொழுது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் சிவன் சிலையை அகற்றாமல் சென்றனர். இதனால் தான் இங்கு கலிங்கா பூங்கா சிவன் பூங்காவாக உருவானது. கலிங்கா பூங்கா தன்னுடைய பெயரை மட்டுமல்ல அங்கிருந்த அடையாளங்களை இழந்தது. 

சிவன் பூங்கா, ஜீவா பூங்கா, கலைஞர் பூங்கா MGR பூங்கா என்று கலிங்கா பூங்கா பெயர் மாறிக்கொண்டே வந்து தற்பொழுது சிவன் பூங்கா என்று பெயர் பெற்றுள்ளது. கலிங்கா காலனி சிவன் பூங்காவில் இருந்தது தொடர்கிறது. சிவன் பூங்கா அருகில் சிவலிங்கபுரம் என்ற இடம் உள்ளது. சிவலிங்கபுரத்திர்க்கும் சிவன் பூங்காவிற்கும் எந்த தொடர்பூம் இல்லை. சிவலிங்கபுரம் மொழி போர் தியாகின் நினைவாக வைக்கப்பட்டது.

    F.அரசு புறநகர் மருத்துவமனை

மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைசர் திரு ஆர்.சௌந்தரராசன் தலைமையின் கீழ் மாண்புமிகு  கல்வி அமைச்சர் திரு செ அரங்கநாயகம் அவர்களால் 30-04-1979 மலை 4.30 மணிக்கு தொடங்கி வைக்கப்பற்று திரு இரா ஆதிமூலம் தலைமை கொத்தன்னார் அவர்களால் அரசு புறநகர் மருத்துவமனை  அசோக் நகர் திறக்கப்பெற்றது. 100 படுக்கைகள் கொண்ட புற மருத்துவமனையின் கட்டுமானம் நான்கு மாடிகளுக்கு செலவு 29.80 லட்சம்  4256 சதுர மீட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனை இம்மக்களுக்கு பேருதவியாக இருந்தது. ஆனால் இன்று வரை அவசர சிகிச்சை மருத்துவ உதவிகள் ஏதும் இங்கில்லை.   

- -  - >>> தொடரும்